The Least of These: The Graham Staines Story Movie Review Tamil

The Least of These: The Graham Staines Story

கிரஹாம் ஸ்டெயின்ஸ் (திரைப்பட விமரிசனம்)

சினிமா தியேட்டருக்குள் Praise the Lord பிரதர் என்று கேட்பது அனேகமாக முதல்முறை. பெருநகரங்களில் மட்டுமே தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் The Least of These: The Graham Staines Story என்ற படம் ஓடும் சினிமா தியேட்டர்களில் மட்டுமே காணக்கூடிய சுவாரசியம. இதுவரை சினிமா தியேட்டர் பக்கமே போனதில்லை என்னும் நண்பர்களைக்கூட முதன்முறையாக சினிமாத் தியேட்டர்களுக்கு வரவழைத்த படம் இது. 


1999ம் ஆண்டு ஜனவரி மாதம் நாட்டில் உள்ள கிறிஸ்தவர்களை அதிர வைத்து வேதனைக்குள்ளாக்கியது ஒரிஸாவில் மனோகர்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற அந்த கொடும் சம்பவம். ஆஸ்திரலியாவில் இருந்து இந்தியாவுக்கு 1965ம் ஆண்டு வந்த தொழுநோயாளிகள் மத்தியில் மிஷனரி கிரஹாம் ஸ்டெயின்ஸையும் அவரது இரு சிறு மகன்களையும் அவர்கள் அன்று இரவு தூங்கிக் கொண்டிருந்த வாகனத்திலேயே வெளியேவராதவாறு தடுக்கப்பட்டு கொளுத்தி எரித்துக் கொல்லப்பட்டனர். அம்மிஷனரி ஸ்டெயின்ஸின் இறுதி நாட்களைச் சொல்வதாக அமைகிறது படம்.

பத்திரிகையாளரான மனவ் பானர்ஜியின் (இந்தி நடிகர் ஷர்மன் ஜோஷி) கண்களில் இருந்து விரிகிறது படம். எப்படியாவது பணம் கொடுத்தும் சட்டத்துக்குப் புறம்பாகவும் மதமாற்றம் கிறிஸ்தவர்கள் செய்வதாக பானர்ஜி ஆழமாக நம்புகிறார். அவற்றைக்குறித்த ஒரு கட்டுரை எழுதுவது அவருக்கு ஒரு நிலையான வேலையைப் பெற்றுத் தரும் என்று அதற்கான வேலைகளைச் செய்கிறார். அதற்குச் சாதகமாக ஒரு பத்திரிக்கையும் அவரைப் பயன்படுத்துகிறது. கிரகாம் ஸ்டெயின்ஸின் மேல் ஏற்கனவே வெறுப்புற்றிருந்த அந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர், ஸ்டெயின்ஸை தொடர்ந்து பின்சென்று தேவையான ஆதாரங்களுடன் வருமாறு பானர்ஜியை அனுப்புகிறார். பானர்ஜியும் தொடர்கிறார். போதுமான ஆதாரங்கள் ஏதும் சிக்கவில்லை என்றபோதும், பானர்ஜியின் சூழல் அவரைத் தொடந்து ஸ்டெயின்ஸையும் அவரது செயல்பாடுகளையும் கண்காணிக்க வைக்கிறது. பானர்ஜி பார்ப்பவை எவையும் ஸ்டெயின்சுக்கு எதிரானதாக இல்லை. ஆனாலும், ஒரு இக்கட்டான சூழலில் ஸ்டெயின்ஸை வெறுக்கும் உள்ளூர் கும்பல் ஒன்றைத் ஸ்டெயின்சுக்கு எதிராகத் தூண்டிவிடுமாறு பேசிவிடுகிறார். பானர்ஜியின் பேச்சு அவரே எதிர்பாராதவாறு அக்கும்பலுக்குள் நஞ்சை விதைக்கிறது. இதன் விளைவாக ஸ்டெயின்ஸை அக்கும்பல் தீர்த்துக்கட்ட முடி செய்கிறது. இதன் பின்னர் நடந்தது நமக்குத் தெரிந்ததுதான். அதைச் சார்ந்த சம்பவங்கள் படமாக்கப்பட்ட விதம் நமக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.

கிரகாம் ஸ்டெயின்ஸின் மரணத்தைக் குறித்து எடுக்கப்பட்ட படம் என்று இதைச் சொல்வதைவிட, மிஷனெரிகள் உண்டாக்கும் மாற்றம் மதமாற்றம் அல்ல, மாறாக சமூகமாற்றம் என்ற சத்தியத்தை படம் முன்வைக்கிறது. இயேசுவின் அன்பு உண்டாக்கும் மாற்றம் அன்பின் அடிப்படையில் ஆனது, அதைச் செய்ய அந்த அன்பு அவரைபோலவே தங்களைத் தியாகம் செய்ய மிஷனரிகளை நெருக்கி ஏவுகிறது என்பதுதான் சத்தியம். மதமாற்றம் என்பது எதற்கும் உதவாது, மாற்றம் என்பது இங்கு வாழ்வில் என்பதும் அதற்கு பணம் அல்ல மனமே முக்கியம் என்பதை இயக்குனர் வலியுறுத்திய வகையில் வெற்றி பெறுகிறார்.

படத்தில் மனவ் பானர்ஜி ஆழமாக நம்புவதைப் போல அன்பின் அடைப்படையில் செய்யப்படும் எந்தச் செயலையும் சந்தேக கண்கொண்டு பார்க்கும் பெரும்பான்மையோர் தான் கிறிஸ்தவர்கள் மதமாற்றம் செய்கிறார்கள் என்று உறுதியாக நம்புகிறார்கள். நம்மைச் சுற்றி இருப்பவர்களின் பார்வை அதுதான் என்பதை இயக்குனர் அனீஷ் டேனியல் குழுவினர் அழகாகச் சித்தரித்திருக்கின்றனர். இறுதியாக மனவ் பானர்ஜியின் மனமாற்றம் அவர் நம்பும் மதமாற்றம் சம்பந்தப்பட்டதல்ல என்பதை கதை வழியே உணரவைப்பதே படத்தின் அழகியலாக இருக்கிறது. மனவ் கிறிஸ்தவராகவில்லை. ஆனால், மனம் மாறுகிறார். அவர் அங்கு உணர்வது கிறிஸ்துவின் பிரதிபலிப்பை என்பது கடைசியாக வைக்கப்படும் சில காட்சிகளால் இயக்குனர் உணர்த்துவது படத்தின் பலம்.

மனவ் பானர்ஜியாக நடித்த ஷர்மன் ஜோஷி தேர்ந்த நடிகராக தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். தன் தவறு எவ்வளவு பெரிய விளைவை உண்டாக்கிவிட்டது என்பதை உணராமல் தொடந்து ஸ்டெயின்ஸின் மரணத்தை நியாயப்படுத்த மேலும் அலையும் கதாபாத்திரம் அவருடையது. ஸ்டெயின்ஸாக நடித்தவர் பிரபல ஹாலிவுட் நடிகர் ஸ்டீஃபன் பால்ட்வின். மிஷனரிகள் எப்படி அன்பினால் காயம் கட்டுகிறார்கள் என்றும், விதி என்று எளிதாகப் புறக்கணிக்கப்பட்டவர்களை கிறிஸ்துவின் அன்பு எப்படி நெருக்கி ஏவும் என்பதையும் விளக்கும் பாத்திரம். இவர்கள் இருவருக்கிடையேயான உடையாடல்கள் சுவாரசியமானவை. இயல்பான நகைச்சுவையோடு அவை செல்கின்றன. மற்ற கதாபாத்திரங்களான ஷாரி ரிக்பி (கிளாடிஸ் ஸ்டெயின்ஸ் அம்மையார்), மனோஜ் மிஸ்ரா, பிரகஷ் பேலவாடி ஆகியோரும் சிறப்பாக தங்கள் பங்கைச் செய்துள்ளனர்.

படம், மிகத் தரமாக உருவாக்கப்பட்டுள்ளது. டாக்குமண்ட்ரியாக இல்லால், சுவாரசியமான அழுத்தம் திருத்தமாகக் காட்சிப்படுத்தப்பட்ட முழுநீளப் படம் இது. தொழில்நுட்ப ரீதியில் மற்றபடங்களுக்கு இணையானது. காமிரா, கோணங்கள் ஒரிஸாவின் பின் தங்கியபகுதிகளைப் புழுதியுடன் கண்முன் நிறுத்துகிறது. ஒரிஸா போன்ற பின் தங்கிய மாநிலங்களில் பணியாற்றும் நமது மிஷனரிகளை கண்முன் நிறுத்தக் கூடியபடம். அவர்கள் வசிக்கும் பகுதிகள் எந்த வசதியும் அற்ற சூழல் நிறைந்தது என்பதுடன், அம்மக்கள் மத்தியில் இங்கிருந்து சென்று சத்தியம் அறிவிப்பது எவ்வளவு சவாலானது என்பதையும் படம் பார்ப்பவர்கள் மத்தியில் உண்டாக்குவது நிஜம். சினிமாவே பார்க்கமாட்டேன், அது பாவம் என்பவர்களும் பார்க்கவேண்டியது. 

படத்தின் திரைக்கதை ஆண்ட்ரூ மேத்யூஸ். குழப்பமில்லாமல் தெளிவாக எழுதியிருக்கிறார். காட்சி அமைப்புகள் ஆங்கிலம் தெரிந்தால்தான் பார்க்க இயலும் என்கிற நிலையை மாற்றுகிறது. படத்தை ஒரு இரத்த சாட்சியின் வாழ்க்கையாக எடுக்காமல், படத்தின் பின்னணியாக மதமாற்றம் என்ற கருத்தையும் எவ்வளவு அது தவறு என்பதையும் சித்தரிப்பதாக எடுக்கப்பட்ட வகையில் வித்தியாசப்படுகிறது. இசை ப்ரூஸ் ரெட்டீஃப். படத்துடன் இயல்பாக இணைந்துபோவதுடன், பயங்கரச் சூழல்களில் உணர்வுகளை அதிர்வுகளாகக் கடத்துவதில் பெறும் பங்களிக்கிறார்.

குறைகள் என்று பெரிதும் தெரியாத படமாக இம்மாதிரியான படம் கிறிஸ்தவர்கள் அனைவரும் காணக்கூடியது. தியேட்டரின் ஏழாம் நாளாக அரங்கு நிறைந்து காணப்பட்டது இதன் வெற்றியைக் காட்டியது. உங்கள் பிள்ளைகளும் ஆத்தும ஆதாயப்பணியின் அடிப்படை அவரது அன்பே என்பதைப் புரியவைக்க இந்தப் படம் நிச்சயம் உதவும். இப்படிப்பட்ட படத்தை துணிந்து இயக்கிய அனீஸ் டேனியல் மற்றும் குழுவினர் நம் பாராட்டுக்கும் ஜெபத்திற்கும் உரியவர்கள் ஆகின்றனர். குடும்பத்துடன் பாருங்கள். முடியாதவர்கள் இந்தத் தயாரிப்பு நிறுவனம் பின்னாட்களில் வெளியிடக்கூடும் DVDக்களை வாங்கிப் பாருங்கள். DVDக்களாக வரும்பட்சத்தில் மற்றவர்களுக்குக் கொடுத்துப் பார்க்கச் செய்வதை ஒரு ஊழியமாகக் கூடச் செய்யலாம். எப்படி இயேசு திரைப்படம் கிராமங்களில் காட்டப்படுகிறதோ, அதைப் போல் படித்தவர்கள் மேல்தட்டு மக்களிடம் தரத் தகுந்த படம் இது. 

ஸ்டெயின்ஸ் மறைந்து சரியாக 20 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகி இருக்கும் இந்தத் படம், ஒரிஸாவின் சூழல் இன்று எங்கும் இருப்பதை உணரச் செய்வது படம் முடிந்தபின் நம்முன் இருக்கும் பணிகளின் முக்கியத்துவத்தை நெருக்கமாகக் காட்டிச் செல்கிறது.

தயாரிப்பு நிறுவனம்: ஸ்கைபாஸ் எண்டர்டெயின்மெண்ட்
விநியோகிப்பாளர்: ஈமான் பிலிம்ஸ்
நடிகர்கள்: ஷர்மன் ஜோஷி, ஸ்டீபன் பால்ட்வின், ஷரி ரிக்பி, மனோஜ் மிஸ்ரா, பிரகாஷ் பெலவாடி, அதிதி செங்கப்பா
இயக்குனர்: அனீஸ் டேனியல்
திரைக்கதை எழுத்தாளர்: ஆண்ட்ரூ மாத்யூஸ்
தயாரிப்பாளர்கள்: அனீஸ் டேனியல், ஆண்ட்ரூ மாத்யூஸ்
நிர்வாக தயாரிப்பாளர்கள்: விக்டர் ஆபிரகாம்
புகைப்படம் இயக்குனர்: ஜெயகிருஷ்ணா கும்மாடி
தயாரிப்பு வடிவமைப்பாளர்: பூபீஷ் ஆர். பூபதி
ஆடை வடிவமைப்பாளர்: அனுஷா ரங்கநாதன்
ஆசிரியர்: ஸ்டீவன் எச். பெர்னார்ட்
இசையமைப்பாளர்: ப்ரூஸ் ரெட்டீஃப்

Rated PG-13, 109 நிமிடங்கள்

குறிப்பு: சினிமா விமர்சனம் எழுதுவது எனக்கு மிகப் புதியது. நேற்றுப் படம் பார்க்கும்போதே இதற்கு விமர்சனம் எழுதுவது அவசியம் எனப்பட்டது. இந்தப் படம் எடுத்த குழுவினருக்கு அன்பும் ஜெபங்களும். – பென்னி அலெக்ஸாண்டர்.

கிரகாம் ஸ்டெயின்ஸ் – movie trailer

mm

Written by 

Born again Christian. Believer in Trinity. Member of the Church of South India. IT business owner. Father and Husband.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *