பாடம் 1 வேதாகமத்தின் தேவனே எல்லாவற்றையும் படைத்தவர்

ஆதியாகமம் 1:1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

ஆதியிலே தேவன்…

ஆதியிலே தேவன்… என்கிற வேதாகமத்தின் முதல் இரண்டு வார்த்தைகள் வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கும் தேவன் அடிப்படையில் எப்படிப்பட்டவர் என்பதைக்குறித்த ஒரு சிறிய பார்வையை நமக்கு கொடுக்கிறது. இந்த முதல் வசனத்திலிருந்து நாம் தேவனைக்குறித்து அறிந்துகொள்கிற ஒரு அடிப்படை உண்மை என்னவென்றால், இந்த உலகம் படைக்கப்படுவதற்க்கு முன்பதாகவே தேவன் இருந்தார். வேதகமத்தின் தேவனை குறித்த இந்த அடிப்படை உண்மையிலிருந்து நாம் அவரைக்குறித்து இரண்டு முக்கியமான முடிவுகளுக்கு வர முடியும்.

முதலாவது, வேதாகமத்தின் தேவன் நித்தியர்.

நித்தியம் என்கிற வார்த்தை பொதுவாக காலம் அல்லது நேரத்தோடு தொடர்புபடுத்தி, முடிவற்ற அல்லது எல்லையற்ற என்பதாக புரிந்துகொள்ளப்படுகிறது.   மனிதர்களாகிய நாம் காலத்திற்க்கு கட்டுப்பட்ட, நேரத்திற்க்கு கட்டுப்பட்ட உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். உதாரணமாக ஒரு நாள் என்று சொல்லப்படுகிற கால அளவை நீட்டிக்கிற தன்மை மனிதருக்கு இல்லை. ஆனால் தேவன் காலம், நேரம் போன்ற கட்டுப்பாடுகளை உடைய இந்த உலகம் படைக்கப்படுவதற்கு முன்பதாகவே இருந்தார் என்பது, தேவன் இந்த கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்ப்பட்டவர் என்பதை நமக்கு உணர்த்துகிறது. மனிதர்களாகிய நம்மை கட்டுப்படுத்தும் இந்த காரணிகள் தேவனை கட்டுப்படுத்துவதில்லை, ஏனென்றால் காலம் எனும் ஒன்றை படைத்தவரே அவர்தான். தேவன் காலத்திற்க்கு அப்பாற்பட்ட நித்தியராக இருக்கிறார்.

மனிதர்களாகிய நாம் காலத்திற்க்கு கட்டுப்பட்ட, நேரத்திற்க்கு கட்டுப்பட்ட உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் தேவன் காலம், நேரம் போன்ற கட்டுப்பாடுகளை உடைய இந்த உலகம் படைக்கப்படுவதற்கு முன்பதாகவே இருந்தார்

இரண்டாவது, வேதாகமத்தின் தேவன் சுதந்திரமானவர்

தேவன் காலத்தால் கட்டுப்படாதவர் என்பது, அவர் முழுமையாக சுதந்திரமானவர் என்பதை புரிந்துகொள்ள உதவிசெய்கிறது. அவர் எதற்காகவும் பிறரை சார்ந்திருக்க அவசியமற்றவர். மனிதர்களாகிய நாம் சுதந்திரமாக இருப்பதை குறித்து பேசினாலும், நம்மால் பிறரை சாராமல் வாழ முடியாது. நாம் நம்முடைய தினசரி அடிப்படை தேவைகளுக்காக கூட பிறரை சார்ந்தே வாழ்கிறோம். ஆனால் வேதாகமத்தின் தேவன் தன்னில் தானே முழுமையானவராகவும், தன்னுடைய எந்த தேவையையும் நிறைவேற்றிக்கொள்ள எதையும்/யாரையும் சார்ந்திருக்க அவசியமற்றவராகவும் இருக்கிறார்.

தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்

வேதாகமத்தின் தேவனே எல்லாவற்றையும் படைத்தவர். இன்று நாம் கண்களால் காண்கிற, மற்றும் நவீன அறிவியலின் உதவியோடு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிற, ஆனால் வெற்று கண்களால் காணமுடியாத (அறிவியலால் இன்றளவும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிற அல்லது கண்டுபிடிக்கமுடியாமல் இருக்கிற) எல்லாவற்றையும் படைத்தவர் வேதாகமத்தின் தேவனே.

தேவன் வானத்தை…சிருஷ்டித்தார்

வானம் எனும் வார்த்தை வேதாகமத்தில் இரண்டு வெவ்வேறு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதலாவது பூமி தவிர்த்து பூமிக்கு வேளியே இருக்கிற அண்ட சராசரம். இரண்டாவது தேவன் மற்றும் அவரது பணிவிடைக்காரர்கள் என்று அழைக்கப்படுகிற தேவ தூதர்கள் வாசம்பண்ணுகிற, பொதுவாக பரலோகம் என்று அழைக்கப்படுகிற, ஆவிக்குரிய இடம். ஆவிக்குரிய என்றால் மனித கண்களால் நேரடியாக பார்க்க முடியாத, உருவமற்ற என பொருள்படும். எனவே நேரடியாக வேதாகமத்தில் சொல்லப்படாவிட்டாலும் தேவனே ஆவிக்குரிய உலகத்தையும் ஆவிக்குரிய உயிர்களையும் படைத்தார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

தேவன் வாசம்பண்ணுகிற ஆவிக்குரிய இடமாகிய பரலோகத்தில் வசிக்கும் ஆவிக்குரிய உயிர்களாகிய தேவ தூதர்களை பற்றி இந்த இடத்தில் புரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

ஏராளமான தேவ தூதர்களை தேவன் படைத்தார், ஆனால் முடிவில்லாத எண்ணிக்கையில் அல்ல. தன்னை ஆராதிக்கும்படியாகவும், தனக்கு பணி செய்யும்படியாகவும் தேவன் தேவ தூதர்களை படைத்தார். தேவ தூதர்கள் மிகுந்த பெலன் உள்ளவர்கள், அறிவு, உணர்ச்சி, மற்றும் சுய சித்தம் உள்ளவர்கள் என வேதாகமம் கூறுகிறது.

மேற்கண்ட பகுதியில் இருந்து தேவனைப்பற்றி வேதாகமம் சொல்லுகிற ஒரு உண்மையை புரிந்துகொள்ள முடியும். அது தேவன் ஆவியாய் இருக்கிறார். ஒரு ஆவிக்குரிய இடத்தில், ஆவிக்குரிய உயிர்கள் மத்தியில் வாசம் பண்ணுகிற தேவன், தானும் ஆவியாகவே இருக்கிறார். எனவே அவர் உருவம் அற்றவராகவும், மனித கண்களால் நேரடியாக பார்க்க முடியாதவராகவும் இருக்கிறார்.

தேவன்… பூமியை சிருஷ்டித்தார்

தேவன் மாம்சரீதியான (பொருள்சார்ந்த) உலகத்தையும், மாம்சரீதியான உயிர்களையும் படைத்தார். இந்த பூமியையும் அதில் இருக்கும் அனைது உயிர்களையும் தேவனே படைத்தார் என வேதாகமம் கூறுகிறது. தேவன் எல்லாவற்றையும் (மனிதன் தவிர) தன் வார்த்தை மூலமாக படைத்தார்.

தேவன் ஆதாம் மற்றும் ஏவாளை படைத்தார். (ஆதி 1:27)

தேவனே மனுக்குலத்தை உருவாக்கினார். தேவன் மனுக்குலத்தின் ஆதி பெற்றோராகிய ஆதாம் எனும் ஆணையும் ஏவாள் எனும் பெண்ணையும் உருவாக்கினார். தேவன் மனிதனை மண்ணினாலே உருவாக்கி அந்த மனிதனுடைய ஒரு பகுதியை பிரித்தெடுத்து  அதினாலே மனுஷியை உருவாக்கினார். அது மட்டுமன்றி தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான் என வேதாகமம் கூறுகிறது (ஆதி 2:7). மனிதன் வெறும் மாமிச உயிர் மட்டுமல்ல அவனுக்குள் தேவன் கொடுத்த ஆத்துமா இருக்கிறது. மனிதன் ஆவிக்குரிய மற்றும் மாம்சமான உயிர்.

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான் 

மனுக்குலத்தை தேவன் தமது சாயலில் உருவாக்கினார்

தேவன் ஆவியாய் இருக்கிறார். அவருக்கு உருவம் இல்லை. எனினும் தேவன் மனுக்குலத்தை தமது சாயலில் உருவாக்கியதாக வேதாகமம் கூறுகிறது. எனவே மனிதரில் இருக்கும் தேவ சாயல் என்பது உடல் சார்ந்ததாக இராமல் உயிர் சார்ந்ததாக இருக்கிறது. தேவன் அறிவுள்ளவர். மனிதரையும் அறிவுள்ளவராக உருவாக்கினார். தேவன் உணர்ச்சிகள் உள்ளவர். மனிதரையும் உணர்ச்சிகள் உள்ளவர்களாக உருவாக்கினார். தேவன் சுய சித்தம் உள்ளவர். மனிதரையும் சுய சித்தம் உள்ளவர்களாக உருவாக்கினார்.

வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கும் தேவன் நித்தியர், சுதந்திரமானவர், அனைத்தையும் படைத்தவர். அவர் மனிதர் கட்டுப்படுத்துகிற தேவன் அல்ல. மனிதரை கட்டுப்படுத்தும் வல்லமையுள்ள தேவன். இயற்கையினால் கட்டுப்படுத்தப்படும் தேவன் அல்ல. இயற்கையை கட்டுப்படுத்தும் தேவன். அவர் உருவம் அற்றவராய் இருப்பதினால் அவரை எந்த உருவத்தோடும் ஒப்பிட்டு பார்ப்பது தவறானதாகும். தேவன் மனிதரை தமது சாயலிலும், அடிப்படையில் ஆவிக்குரியவர்களாகவும் படைத்த படியினால், மனிதர் தம்மை படைத்த தேவனோடு தொடர்பு கொள்வது சாத்தியமாகவே உள்ளது.

 

<<அறிமுகம்                                                                            பாடம் 2 >>

mm

Author: Immanuel Jeswyn

இம்மானுவேல் ஜெஸ்வின் அவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக தேவனுடைய பணியை செய்து வருகிறார். வேதாகம கல்வியில் முது நிலை பட்டம் பெற்றிருக்கும் இவர் தற்போது திருநெல்வேலி பட்டினத்தில் தேவனுடைய கிருபையின் சத்தியத்திற்க்காக வைராக்கியம் கொள்ளும் ஒரு வேதாகம திருச்சபையை நிறுவும் விருப்பத்தோடு செயல்பட்டு வருகிறார். இவருக்கு, மனைவி வசந்தி பெனிட்டா, மற்றும் இரண்டு மகன்களும் உண்டு.

mm

Written by 

இம்மானுவேல் ஜெஸ்வின் அவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக தேவனுடைய பணியை செய்து வருகிறார். வேதாகம கல்வியில் முது நிலை பட்டம் பெற்றிருக்கும் இவர் தற்போது திருநெல்வேலி பட்டினத்தில் தேவனுடைய கிருபையின் சத்தியத்திற்க்காக வைராக்கியம் கொள்ளும் ஒரு வேதாகம திருச்சபையை நிறுவும் விருப்பத்தோடு செயல்பட்டு வருகிறார். இவருக்கு, மனைவி வசந்தி பெனிட்டா, மற்றும் இரண்டு மகன்களும் உண்டு.

1 thought on “பாடம் 1 வேதாகமத்தின் தேவனே எல்லாவற்றையும் படைத்தவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *