பாடம் 2 மனிதரின் வீழ்ச்சி

தமது சாயலில் மனிதரை உருவாக்கின தேவன், ஏதேன் தோட்டம் எனும் சிறந்த இடத்தை உண்டாக்கி மனிதரை அதிலே வாழவைத்தார். அந்த ஏதேன் தோட்டமானது இயற்க்கை எழில் கொஞ்சும் மிக அழகான இடம் என்பதாக வேதாகமம் விவரிக்கிறது. செழிப்பான ஆறுகள் அந்த ஏதேன் தோட்டத்தை சுற்றியோடின. பார்வைக்கு அழகான மரங்கள், மனிதர் உண்ணுவதர்க்கு ஏற்ற காய் கனிகள், மனிதருக்கு எந்த தீங்கும் விழைவிக்க அறிந்திராத, மனிதரோடு இசைந்து வாழும் மிருகங்கள் மற்றும் பறவைகள் என  ஏதேன் தோட்டம் மிக சிறப்பானதாக இருந்தது. 

தேவன் மனிதரை படைத்ததற்கான மிக முக்கியமான நோக்கங்களில் ஒன்று மனிதரோடு அன்புறவில் நிலைத்திருப்பது. தேவன் மனிதரோடு நித்திய காலமாய் அன்புறவோடு இருக்கவும், ஐக்கியம் கொள்ளவும் மனிதரை படைத்தார். தேவன் மனிதரை படைத்து பின்பு அவர்கள் தாமாக வாழ்வதற்கு விட்டுவிடுகிறவராக இராமல், மனிதரை தொடர்ந்து சந்தித்து அவர்களோடு உறவாடுகிறவராக இருந்தார். ஏதேன் தோட்டத்திலே தேவனோடு கூட மனிதரின் உறவு மிக சிறப்பானதாக இருந்தது.

தேவன் மனிதரை படைத்ததற்கான மிக முக்கியமான நோக்கங்களில் ஒன்று மனிதரோடு அன்புறவில் நிலைத்திருப்பது

விழுந்து போன தூதன் லூசிபர் மற்றும் அவனது சகாக்கள்.

வேதாகமத்தின் மற்றொரு பகுதியில் விளக்கப்பட்டிருக்கிற, விழுந்துபோன தூதன் என்று பொதுவாக அழைக்கப்படுகிற லூசிபரை பற்றி இந்த இடத்தில் அறிந்துகொள்வது பின்வரும் சம்பவங்களை புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். லூசிபர் என்கிற தேவ தூதனும் தேவனால் நல்ல தூதனாகவே படைக்கப்பட்டான். ஒரு குறிப்பிட்ட தூதர் குழுவுக்கு தலைவனான லூசிபர், உன்னதமான தேவன் வாசம் பண்ணும் தேவனின் ஆராதனை கூடத்தின் மிக உயரிய இடத்தில் வைக்கப்பட்டான். மகிமையான தேவனை ஆராதித்து வந்த லுசிபர் தேவனுடைய மகிமையை இச்சித்து, தேவனைப்போலாகும்படி நினைத்தான். இன்னும் சுருக்கமாக சொலவேண்டும் என்றால் தான் தேவனாக ஆகவேண்டும் என நினைத்தான். எனெவே லூசிபர் தேவ சமூகத்தை விட்டு தள்ளப்பட்டான். ஒரு கூட்ட தூதர்கள் அவனை பின்பற்றினார்கள். அந்த லூசிபரே வேதாகமத்தில் சாத்தான் என்று அழைக்கப்படுகிறான்; அவனை பின்பற்றின தூதகள் பிசாசுகள்.

சாத்தான் எனும் பதத்திற்கான எளிமையான தமிழாக்கம் எதிரி அல்லது விரோதி என்பதாகும். தேவனுக்கு விரோதமாய் கலகம் செய்து பிரிந்து சென்ற நாளிலிருந்து சாத்தானும் அவன் பிசாசுகளும் தேவனுக்கு எதிராக செயல்படுகின்றன. சாத்தானும் அவனது சகாக்களும் தேவனை விரோதிக்கிறவர்களாகவும், தேவனுக்கு உரிய எல்லாவற்றையும் விரோதிக்கிறவர்களாகவும் இருக்கின்றனர். என்றாலும் நாம் புரிந்துகொள்ளவேண்டிய உண்மை ஒன்று இங்கே இருக்கிறது. சாத்தான் தேவனுக்கு இணையான வல்லமை கொண்டவன் அல்ல. அவன் தேவனால் படைக்கப்பட்ட, தேவனுடைய கட்டுப்பாட்டை மீறி எதையும் செய்ய திராணியற்றவன். தேவனுக்கு விரோதமாய் கலகம் செய்து பிரிந்து சென்றவன்.

அவிசுவாசம்பாவம்

மனிதர் வாழ்வதற்காக ஏதேன் தோட்டத்தை உருவாக்கின தேவன் ஜீவ மரத்தையும், நன்மை தீமை அறியத்தக்க மரத்தையும் தோட்டத்தின் நடுவிலே வைத்தார். அனைத்தையும் உண்ணலாம் என அனுமதி அளித்திருந்த தேவன் மனிதருக்கு ஒரே ஒரு கட்டளையை (அல்லது எச்சரிக்கை) மாத்திரம் கொடுத்திருந்தார். மனிதர் நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை மட்டும் புசிக்கக்கூடாது. ஏனென்றால்  அதை புசிக்கும் நாளிலே மனிதன் சாகவே சாவான் (ஆதி 2:17).

ஏதேன் தோட்டத்தில் ஆதாம் மற்றும் ஏவாளின் வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்த ஓர் அமைதியான நாளில் பாம்பின் வடிவத்திலே சாத்தான் வந்து (அல்லது ஒரு பாம்பை தனது கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டுவந்து) ஏவாளிடம் பேச்சு கொடுத்தான்.  அவன் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாய்  பொய் சொன்னான். மனிதர் நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை உண்டால் அவர்கள் கண்கள் திறக்கப்பட்டு  (இதுவரை அறியாதிருக்கிற காரியங்களை அறிந்து) தேவனுக்கு இணையானவர்களாக மாறிவிடுவார்கள் என்பதை தேவன் அறிவார் என்றும், அப்படி மனிதர் மாறுவதை தேவன் விரும்பவில்லை எனவும், நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை உண்ணுவதால் மனிதர் மரிக்கமாட்டார்கள் எனவும் பொய் சொன்னான். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் தேவனுடைய வார்த்தையை நம்பாமல் அவிசுவாசிக்கும்படியாய் மனிதரை தூண்டி ஏமாற்றினான்.

சத்தானுடைய தந்திரமான பேச்சினால் ஏமாற்றப்பட்ட ஆதாமும் ஏவாழும் தேவனுடைய வார்த்தையை நம்பாமல், சாத்தானுடைய பேச்சை நம்பி, தேவனால் விலக்கப்பட்ட நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை புசித்தனர். அந்த கனியை புசித்த உடனே அவர்கள் கண்கள் திறக்கப்பட்டு தாங்கள் நிர்வாணிகளாக இருப்பதை அறிந்து திகைத்தனர். தங்களுடைய நிர்வாணத்தை மறைக்கும்படியாக அத்திமர இலைகளை இணைத்து ஆடைகளை போல அணிந்துகொண்டனர். தேவன் ஏதேன் தோட்டத்திற்க்கு உலாவ வரும் சத்தத்தை கேட்டவுடன், தேவனை சந்திக்க பயந்து, தோட்டத்தில் இருந்த மரங்களுக்கு இடையில் ஒளித்துக்கொண்டனர்.

ஆதாமின் மற்றும் ஏவாளின் பாவம் மிக கொடியது, ஏனெனில் அது மிக பெரிய நபருக்கு எதிராக, மனுக்குலத்தின் மிகப்பெரிய பொறுப்பை பெற்ற நபரால் செய்யப்பட்டது. அவர்கள் தேவனுக்கு விரோதமாய் முரட்டாட்டம் செய்தனர். தேவனுடைய வார்த்தையை நம்ப மறுத்து தேவனுடைய எச்சரிப்பையும் மீறி தேவன் செய்யக்கூடாது என்று சொன்ன காரியத்தை செய்தனர். அவர்கள் தேவனை நம்பாமல், தேவனுடைய வார்த்தையை நம்பாமல் போனதே தேவன் செய்யக்கூடாது என்று சொன்ன காரியத்தை செய்வதற்க்கு அடிப்படை காரணியாக அமைந்தது. எனவே தேவனை நம்பாமல், தேவனுடைய வார்த்தையை நம்பாமல் இருப்பதே பாவம் என வேதாகமம் அழைக்கிறது.

தேவனை நம்பாமல், தேவனுடைய வார்த்தையை நம்பாமல் இருப்பதே பாவம் என வேதாகமம் அழைக்கிறது

பாவத்தின் சம்பளம் மரணம்

அவிசுவாசத்தினால் மனுக்குலத்திற்குள் பாவம் ஊடுருவியது. மனிதனுக்குள்ளிருந்த தேவ சாயல் முற்றிலுமாக பாவத்தினால் கறைபட்டது. தேவன் எது நடக்கும் என எச்சரித்திருந்தாரோ அது நடந்தது. மனிதன் அன்றே ஆவிக்குரிய மரணம் அடைந்தான். தேவனோடு உள்ள உறவு உடைந்தது. தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இருந்த தொடர்பு அற்றுபோயிற்று.  (ஆவிக்குறிய மரணம்). அவர்கள் பிசாசுக்கு அடிமைகள் ஆனார்கள். ஆதாமும், ஏவாளும் தேவனின் நியாயதீர்ப்புக்கு உள்ளானார்கள். நிலமும் சபிக்கப்பட்டது. செடியிலிருந்து பிய்த்து எடுக்கப்பட்ட ஒரு இலையை போல அவர்கள் நிலை மாறிவிட்டது. அந்த இலையினால் இனி மீண்டும் போய் செடியில் ஒட்டிக்கொள்ள முடியாது. பார்க்க தற்போது பசுமையாக தெரிந்தாலும் கண்டிப்பாகவே காய்ந்துவிடும். அதைப்போலவே உயிருள்ளவரும், உயிரின் ஊற்றும் காரணருமாக இருக்கும் தேவனோடு இருந்த ஆவிக்குரிய உறவு அறுந்து போனதினால் அதின் விழைவாக  சரீர மரணமும் அடைந்தார்கள்.

தேவன் பரிசுத்தர். பாவத்தை நிச்சயமாக நியாயம் தீர்ப்பார்.அவிசுவாசம் பாவத்தையும், பாவம் மரணத்தையும் பிறப்பித்தது.

தேவனுடைய இரக்கம் வாய்ப்பளிக்கிறது

தேவன் தான் படைத்த மனிதர்களை நேசித்தபடியினால் அவர்களை அப்படியே விட்டுவிட அவருக்கு மனதில்லை. சாத்தானை வென்று, மனுக்குலத்தை விடுவிக்கும் ஓர் மீட்பரை அனுப்புவதாக வாக்களித்தார். அவர்கள் ஜீவ மரத்தின் கனியை புசிப்பதினால் தங்களுடைய பாவ நிலையிலேயே என்றைக்கும் உயிரோடிருக்கும் நிலமை வராதபடி ஏதேன் தோட்டதில் இருந்து அவர்களை அனுப்பிவிட்டார். ஒரு மிருகத்தின் தோலினால் அவர்களுக்கு ஆடை செய்து கொடுத்தார். அவர்களின் மானத்தை மறைக்க அப்பாவி மிருகம் கொல்லப்பட்டது.

முடிவுகள்.

வேதாகத்தின் தேவனே எல்லாவற்றையும் உண்டாக்கினவர்.

தேவனுடைய வார்த்தையை நம்ப மறுப்பதே (அவிசுவாசம்) பாவம்.

தேவனுடைய பரிசுத்தம் பாவத்தை நியாயம் தீர்க்கிறது.

தேவனுடைய இரக்கமோ வாய்ப்பளிக்கிறது.

 

<<பாடம் 1                                                                                             பாடம் 3>>

mm

Author: Immanuel Jeswyn

இம்மானுவேல் ஜெஸ்வின் அவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக தேவனுடைய பணியை செய்து வருகிறார். வேதாகம கல்வியில் முது நிலை பட்டம் பெற்றிருக்கும் இவர் தற்போது திருநெல்வேலி பட்டினத்தில் தேவனுடைய கிருபையின் சத்தியத்திற்க்காக வைராக்கியம் கொள்ளும் ஒரு வேதாகம திருச்சபையை நிறுவும் விருப்பத்தோடு செயல்பட்டு வருகிறார். இவருக்கு, மனைவி வசந்தி பெனிட்டா, மற்றும் இரண்டு மகன்களும் உண்டு.

mm

Written by 

இம்மானுவேல் ஜெஸ்வின் அவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக தேவனுடைய பணியை செய்து வருகிறார். வேதாகம கல்வியில் முது நிலை பட்டம் பெற்றிருக்கும் இவர் தற்போது திருநெல்வேலி பட்டினத்தில் தேவனுடைய கிருபையின் சத்தியத்திற்க்காக வைராக்கியம் கொள்ளும் ஒரு வேதாகம திருச்சபையை நிறுவும் விருப்பத்தோடு செயல்பட்டு வருகிறார். இவருக்கு, மனைவி வசந்தி பெனிட்டா, மற்றும் இரண்டு மகன்களும் உண்டு.

3 thoughts on “பாடம் 2 மனிதரின் வீழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *