பரிசுத்தம் சாத்தியமா?

பரிசுத்தம் சாத்தியமா

பரிசுத்தம் சாத்தியமில்லை! இதுதான் கிறிஸ்தவத்தின் இப்பொதைய பொதுவான மன நிலை. காரணம் இல்லாமல் இல்லை. இன்றைய சூழலில் கிறிஸ்தவத்தில் எங்கு நோக்கினாலும், கவனமாக கவனிப்பவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருக்கும். கிறிஸ்தவத்தில் கொடுக்கப்படும் செய்திகள், நற்செய்தி இயக்கங்களால் பகிர்ந்து கொள்ளப்படும் சம்பவங்கள், பெருகிக்கிடக்கும் மேடை பிரசங்கிகளின் சவால்கள், ஆராதனை வீரர்களின் ஆட்டங்கள் இவைகளை எல்லாம் கவனித்துவிட்டு, கிறிஸ்தவமென்றால் இப்படித்தான் இருக்கும், என்று நினைப்பவர்கள் இன்றைய கிறிஸ்தவத்தின் யதார்த்த நிலையை அறியும் சூழலில் மனமுடைந்து போவது நிச்சயம். 

நற்ச்செய்தி பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு சகோதரருடன் பேசிக்கொண்டிருந்தேன். புதிய விசுவாசிகளை (ஒரு குறிப்பிட்ட சபை பிரிவை குறிப்பிட்டு) அந்த சபைகளுக்கு அனுப்புவது நல்லதல்ல. பலர் அங்கிருக்கும் குழப்பங்களையும், வாரா வாரம் அரங்கேறும் பிரச்சனைகளையும் பார்த்து பின்வாங்கி விடுவார்கள் என்றார். நானும் பொத்தாம் பொதுவாக தலையாட்டி வைத்தேன். ஆனால் அவர் அடுத்து சொன்ன வாக்கியம் எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது மட்டுமன்றி இன்றய கிறிஸ்தவத்தை மிகச்சரியாக பிரதிபலித்தது. “மனுஷங்கனாலே இப்படித்தானே, யாருதான் நல்லவங்க. இதெல்லாம் அவங்களுக்கு புரியாது” என்றார்.

இதிலே உண்மை இல்லாமல் இல்லை. அவர் சொன்ன கருத்து வேதகமத்தில் தெளிவாகவே கொடுக்கப்பட்டிருக்கிறது. ரோமர் 3:10-12 இவ்வாறு சொல்லுகிறது, “அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை; உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை”. ஆனால் கிறிஸ்த்தவர்களை பற்றியல்ல, தங்கள் பாவ நிலையிலே வீழ்ந்துகிடக்கும், பாவ மனுக்குலமே இப்படிப்பட்டதாக இருக்கிறது என்று வேதாகமம் குறிப்பிடுகிறது.

கிறிஸ்த்தவர்களை குறித்தோ வேதாகமம் வேறுவிதமாக குறிப்பிடுகிறது. 1 பேதுரு 2:9-10 கிறிஸ்தவர்களை குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறது, “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள். முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள், இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்”.

1 யோவான் 3:6-9 இவ்விதமாக குறிப்பிடுகிறது. “அவரில் (தேவனில்) நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை.பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்”.

பாவம் நிறைந்த உலகம் வேறு, பரிசுத்த கிறிஸ்தவ கூட்டம் வேறு என்பதை வேதாகமம் தேளிவாகவே வறையறை செய்கிறது. இரண்டுமே எதிர் எதிர் துருவங்கள்

பாவம் நிறைந்த உலகம் வேறு, பரிசுத்த கிறிஸ்தவ கூட்டம் வேறு என்பதை வேதாகமம் தேளிவாகவே வறையறை செய்கிறது. இரண்டுமே எதிர் எதிர் துருவங்கள். ஆனால் உலக மனிதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்கிற மன நிலைக்கு கிறிஸ்தவர்களே வந்துவிட்டதுதான் மிகப்பெரிய பரிதாபம். இன்றைக்கு கிறிஸ்த்தவர்களால் பரிசுத்தமாக வாழ முடியவில்லை என்பதர்க்காக பரிசுத்தம் சாத்தியமில்லை என்று அர்த்தம் அல்ல. பரிசுத்தம் சாத்தியமே! ஆனால் வேதாகமம் காட்டும் வழியில் அல்லாமல் வேறுவிதத்தில் பரிசுத்தம் சாத்தியம் அல்ல.

இன்றைய கிறிஸ்த்தவ சூழலில் பரிசுத்தமாகுதல் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பதே கிறிஸ்தவத்தில் காணப்படும் பல்வேறு தோல்விகளுக்கும் காரணம். ரோமர் 12:1-2 இல் பவுலடியார் இவ்வாறு குறிப்பிடுகிறார். “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்”.

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்

இந்த வார்த்தைகளை எழுதுவதற்க்கு முன்பாக 11 அதிகாரங்கள் பரிசுத்தமாகுதலின் அடிப்படையை குறித்து பவுலடியார் எழுதியிருக்கிறார். இந்த வார்த்தைகளில் அவர் பரிசுத்தத்தை குறித்து சொல்லும் சில கருத்துக்கள் என்னவென்றால், பரிசுத்தம் மனித முயற்சியில் சாதிப்பது அல்ல, பரிசுத்தம் கடவுள் நமக்குள் செயல்படுத்துவது, மனிதன் கடவுளிடத்தில் தன்னை விட்டுக்கொடுக்க வேண்டும், பகுத்தறிவு இல்லாமல் பரிசுத்தம் வருவது இல்லை, பரிசுத்தத்தில் வளருவது என்பது ஒரு தொடர் செயல்பாடு. சுருக்கமாக சொலவேண்டுமானால் கடவுள் யார் என்பதை அறியவேண்டிய விதத்தில் அறிவதே பரிசுத்தத்தில் வளர்வதற்கான அடிப்படை. இன்றைய சூழலில் பரிசுத்தத்தில் கிறிஸ்தவ சமுதாயம் வளராமல் இருப்பதற்கான காரணம், வேதாகமத்தின் கடவுளை சரியாக, வேதாகமம் சொல்லும் விதத்தில் அறியாமல் இருப்பதேயாகும். சரியாகவும் முறையாகவும் வேதாகமத்தை கற்று, கடவுளை அறியவேண்டிய விதத்தில் அறிபவர்களுக்கு பரிசுத்தம் சாத்தியமே! இதை விடுத்து வேறு விதங்களில் முயற்சி செய்பவர்களுக்கு, ஐயோ பரிதாபம்! பரிசுத்தம் சாத்தியமே இல்லை.

mm

Written by 

இம்மானுவேல் ஜெஸ்வின் அவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக தேவனுடைய பணியை செய்து வருகிறார். வேதாகம கல்வியில் முது நிலை பட்டம் பெற்றிருக்கும் இவர் தற்போது திருநெல்வேலி பட்டினத்தில் தேவனுடைய கிருபையின் சத்தியத்திற்க்காக வைராக்கியம் கொள்ளும் ஒரு வேதாகம திருச்சபையை நிறுவும் விருப்பத்தோடு செயல்பட்டு வருகிறார். இவருக்கு, மனைவி வசந்தி பெனிட்டா, மற்றும் இரண்டு மகன்களும் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *