படைப்பு முதல் கிறிஸ்து வரை: அறிமுகம்

தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, (ஆதி. 1:1) என்கிற வேதாகமத்தின் முதல் வாக்கியமே கிறிஸ்வத்தில் மாத்திரம் அல்ல இந்த உலகத்திலும் இருக்கிற பல்வேறு குழப்பங்களுக்கு விடையளிப்பதாய் இருக்கிறது. முழு வேதாகமமும் இறைவனையும் அவரது படைப்பையும் பற்றியது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் இறைவனையும் அவரது செயல்பாடுகளையும் பற்றியது. இறைவன் யார்? அவரின் தன்மைகள் என்ன? அவரது குணாதிசயங்கள் என்ன? அந்த இறைவன் எப்படி செயல்படுகிறார்? என்பதை தெளிவாகவும் விளக்கமாகவும் பதிவுசெய்திருக்கும் புத்தகமே வேதாகமம். இறைவனே வேதாகமத்தின் மையமாகவும் மூலப்பொருளுமாய் இருக்கிற படியால், வேதாகமத்தை அடிப்படையாகக் கொண்டு எழுத்தப்படுகிற இந்த புத்தகத்தின் மையப்பொருளும் அவரே.

வேதாகமமே நமது படிப்பின் ஆதாரம். ஏன் வேதாகமத்தை மாத்திரம் நமது படிப்பின் ஆதாரமாக கொள்ளவேண்டும்? எனென்றால் அது மாத்திரமே இறைவனால்  வெளிப்படுத்தப்பட்ட இறை வார்த்தை (2 தீமோ. 3:16). வெளிப்படுத்தப்படுதல் என்றால் மறைவான ஒன்றை வெளிப்படையாக்குதல் என்று பொருள்படும். தன்னைப்பற்றி மனிதர்கள் சரியாக அறியமுடியாத நிலையில், இறைவன் தன்னை குறித்தும், தன்னுடைய படைப்பைக் குறித்தும், தன்னுடைய செயல்பாடுகள் குறித்தும் வெளிப்படுத்தினதே இறைவெளிப்பாடாகிய வேதாகமம். இறைவன் தன்னை வெளிப்படுத்தினால் மட்டுமே நாம் அவரை அறிய முடியும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே இறைவார்த்தையானது சரியாக அர்த்தம் கொள்ளப்பட்டு புரிந்துகொள்ளப்பட வேண்டும். இந்த புத்தகமானது மிகவும் எளிமையாக ஆனால் சரியாக வேதாகமத்தின் அடிப்படை போதனையை விவரிக்க முற்படுகிறது.

வேதாகமத்தை குறித்த சில உண்மைகளை அறிவது வேதாகமத்தின் உண்மைத்தன்மையையும் இறைவனே இதன் உண்மையான ஆசிரியர் என்பதை புரிந்துகொள்ள உதவி செய்யும். வேதாகமம் தோராயமாக கி.மு. 1500 முதல் கி.பி. 100 க்கு இடைப்பட்ட 1600 வருட இடைவெளியில் எழுதப்பட்டது. பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு என இருபெரும் பிரிவுகளாக வேதாகமம் பிரிக்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாடு 39; புதிய ஏற்பாடு 27: மொத்தம் 66 நூல்களை உள்ளடக்கிய தொகுப்பே வேதாகமம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த புத்தகங்கள் ஒரே இடத்தில், ஒரே நபரால், ஒரே காலகட்டத்தில் எழுதப்பட்டவை அல்ல. நாற்பது வெவ்வேறு மனிதர்கள் இறைவனால் பெலப்படுத்தப்பட்டு எழுதினார்கள். அனேக நேரங்களில் வேதாகமத்தின் புத்தகங்களை எழுதின மனித ஆசிரியர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் அற்றவர்கள். இறைவன் சமுதாயத்தின் பல்வேறு நிலைகளில் இருந்த மனிதர்களை பயன்படுத்தி இந்த புத்தகங்களை எழுதினார். அரசர்கள், அரசாங்க அலுவலர்கள், ஆசாரியர், தீர்க்கதரிசிகள், ஞானிகள், விவசாயி, வரி வசூலிப்பவர், மீனவன், மருத்துவர் என வேதாகமத்தின் புத்தகங்களை எழுதியவர்களின் பின்ணணி மற்றும் சூழல் வெவ்வேறானது.

வேதாகமத்தின் புத்தகங்கள் எழுதப்பட்ட இடங்கள் மற்றும் சூழல்களும் வேறுபட்டவைகளே. வனாந்திரங்கள், மலை முகடுகள், குகைகள், கோவில் பிரகாரங்கள், அரண்மனைகள், கிராமங்கள், நகரங்கள், சிறைச்சாலை, ஆற்றங்கரை மற்றும் ஆளில்லா தீவு. பிரதானமாக இரண்டு மொழிகள் பயன்படுத்தப்பட்டது. பழைய ஏற்பாடு எபிரேய மொழியிலும் புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டது.

வேதாகமத்தில் உள்ள புத்தகங்களை எழுதியதில் இத்தனை வேற்றுமைகள் இருந்தாலும் வேதாகமத்தின் அனைத்து புத்தகங்களும் ஒரு நபரை பற்றியும், அந்த ஒரு நபர் இந்த உலகத்துக்கு சொல்லும் ஒரு செய்தியையும் மையப்படுத்தியே பேசுகின்றன.

இந்த புத்தகத்தில் உள்ள பாடங்கள் அனைத்தும் வேதாகமத்தின் கால வரிசை கிரமத்தை பின்பற்றி அமைக்கபட்டுள்ளது. வேதமத்தில் இறைவன் தம்மை படிப்படியாக வெளிப்படுத்தினார். அவர் ஒரே நேரத்தில் தம்மை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. முதல் மனிதனாகிய ஆதாமைவிட பின்னர் இறைவன் அழைத்த ஆபிரகாமுக்கு அவர் தன்னைக் குறித்து அதிகமாக வெளிப்படுத்தியிருந்தார்.  ஆபிரகாமைவிட மோசேக்கு தன்னைக் குறித்து அதிகமாக வெளிப்படுத்தியிருந்தார். இப்படி படிப்படியாக வெளிப்படுத்தி இயேசு கிறிஸ்துவில் இறைவன் முழுமையாக வெளிப்பட்டார். மட்டுமன்றி பாவம், பரிசுத்தம் போன்ற பல கருத்தாக்கங்கள் துவக்கத்தில் ஒரு புள்ளியில் ஆரம்பித்து பின்னால் விரிவடைகின்றன. எனவே நாம் வேதாகமத்தை முழுமையாகவும் சரியாகவும் புரிந்துகொள்ள அதன் வரிசை கிரமத்தை பின்பற்ற வேண்டும். (லூக். 24:13-27; அப். 7:1-53; சங். 78).

வேதாகமத்தின் அடிப்படை சாராம்சத்தை புரிந்துகொள்ள விரும்புகிற எவரும் இந்த புத்தகத்தை வாசிக்கலாம்.

இந்த தொகுப்பானது வேதாகமத்தை அடிப்படையிலிருந்தே தெளிவாக கற்றுக்கொடுக்கவேண்டும் என்கிற விருப்பத்தினாலும், கிறிஸ்து மார்க்க சத்தியங்கள் கிறிஸ்த்தவரல்லாதோர் வாசிக்க நேர்ந்தாலும் புரிந்துகொள்ள எளிமையாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தினாலும் எளிமைபடுத்தப்பட்டு, வேதாகமத்தின் அடிப்படை கருத்தாக்கங்கள் புரிந்துகொள்ளப்படும் வகையில் பாடங்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. எனவே இது ஒரு ஆரம்ப நிலை பாடமாகவே கருதப்பட வேண்டும்.

இதை வாசிக்கும் அனைவரும் இறைவனால் உணர்த்தப்பட வேண்டும் என்று அவரிடம் மன்றடுகிறேன். ஆமென்.

 

பாடம் 1>>

mm

Written by 

இம்மானுவேல் ஜெஸ்வின் அவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக தேவனுடைய பணியை செய்து வருகிறார். வேதாகம கல்வியில் முது நிலை பட்டம் பெற்றிருக்கும் இவர் தற்போது திருநெல்வேலி பட்டினத்தில் தேவனுடைய கிருபையின் சத்தியத்திற்க்காக வைராக்கியம் கொள்ளும் ஒரு வேதாகம திருச்சபையை நிறுவும் விருப்பத்தோடு செயல்பட்டு வருகிறார். இவருக்கு, மனைவி வசந்தி பெனிட்டா, மற்றும் இரண்டு மகன்களும் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *