பாடம் 7 நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய் கொடுக்கப்பட்டது.

நியாயப்பிரமாணம்

இஸ்ரவேல் மக்களை எகிப்தில் இருந்து விடுவித்த வல்லமையுள்ள இறைவன்
இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்துவந்த சூழலில், இறைவன் தான் யார் என்பதை அற்புதங்களினாலும் அதிசயங்களினாலும் இஸ்ரவேல் மக்களுக்கும் எகிப்தியருக்கும் வெளிப்படுத்தினார். இஸ்ரவேல் மக்களை விடுவித்து விடுமாறும் மறுக்கும் பட்சத்தில் விளைவுகள் மோசமானதாக இருக்கும் என மோசே மூலமாக இறைவன் பார்வோனை எச்சரித்தார். எகிப்தின் அரசனான பார்வோன் இறைவனின் எச்சரிக்கையை நிராகரித்து தன் மனதை கடினப்படுத்தினான். கடைசி வாதை மிக பயங்கரமாக இருக்கும் என மோசே பார்வோனை எச்சரித்தார். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இறைவன் அழிக்கும் தூதனை அனுப்பும்போது மூத்த ஆண் பிள்ளைகள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் எனவும் ஒவ்வொரு குடும்பமும் ஒரு பழுதற்ற ஆட்டுக்குட்டியை கொன்று ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை தங்களின் வாசலில் பூசும்படியாகவும் அப்பொழுது கடைசி வாதைக்கு தப்பமுடியும் என்று இறைவன் கூறினார். இறைவன் சொன்னதை நம்பிய இஸ்ரவேல் மக்கள் ஆட்டுகுட்டிகளை கொன்று அதன் இரத்தத்தை தங்கள் வாசலில் பூசினார்கள். இறைவன் குறிப்பிட அந்த நேரம் வந்தது. இறைவன் அழிக்கும் தூதனை அனுப்பினார். அழிக்கும் தூதன் எகிப்தியர்களின் மூத்த ஆண் பிள்ளைகளை அடிக்கும் போது, ஆட்டுக்குட்டியின் இரத்தம் தெளிக்கப்பட்ட குடும்பங்கள் பிழைத்தன. எகிப்து நாடு முழுவதும் மரண ஓலம் எழுந்தது. அன்று இரவே இஸ்ரவேல் மக்கள் எகிப்தை விட்டு போய்விடுமாறு பார்வோன் கட்டளை கொடுத்தான்.

இறைவனை குறித்து புரிந்துகொள்ளவேண்டிய உண்மை, எந்த வல்லமையும் இறைவனை எதிர்த்து நிற்க முடியாது. அவர் செய்ய நினைப்பதை எவரும் தடுக்கவும் முடியாது.

இஸ்ரவேலர்கள் வெகு சீக்கிரமே சிலையை வணங்கினார்கள்
சீனாய் மலையடிவாரத்திற்கு வரும் வரை (அதன் பிறகும்) இஸ்ரவேலர்கள் இறைவனின் அற்புதங்களை தொடர்ந்து கண்டார்கள். கட்டளைகளையும் நியாயபிரமாணங்களையும் கொடுக்க இறைவன் மோசேயை சீனாய் மலையின் உச்சிக்கு வரவழைத்தார். மோசே திரும்பி வர தாமதித்தபோது, மக்கள் மோசேயின் சகோதரனாகிய ஆரோனிடம் தாங்கள் வணங்கும்படியாக சிலை உண்டாக்கும்படி நிர்பந்தித்தார்கள். ஆரோன் அவர்களிடம் இருந்து தங்க நகைகளை பெற்று அவர்களுக்கு தங்க கன்றுக்குட்டியை வார்ப்பித்தார். அந்த சிலைக்கு விழா எடுத்து, அதுவே தங்களை எகிப்திலிருந்து விடுவித்ததாக கூறினார்கள்.

புரிந்துகொள்ள வேண்டிய உண்மை, அற்புதங்களும் அடையாளங்களும் மாத்திரம் பாவ மனிதர்களை தேவனிடத்திற்கு திருப்பிவிடுவதில்லை. மனிதருடைய பாவ சுபாவம் எப்போதும் உண்மையான இறைவனை எதிர்த்தே நிற்கிறது.

இறைவன் கட்டளைகளையும் நியாயப்பிரமாணங்களையும் கொடுத்தார்
இறைவன் தான் யார் என்பதையும், தன்னுடைய எதிர்பார்ப்புகள் என்ன என்பதையும் காண்பிப்பதற்காக நியாயப்பிரமாணங்களையும் கட்டளைகளையும் கொடுத்தார். நியாயப்பிரமாணங்கள் மற்றும் கட்டளைகள் எதிர்பார்ப்பது என்ன என்பதை நாம் முழுமையாக புரிந்து கொள்ளவேண்டியது அவசியம். இஸ்ரவேலர்கள் எல்லா கட்டளைகளுக்கும் நியாயப்பிரமாணங்களுக்கும் முழுமையாக கீழ்ப்படிய வேண்டும். “இதோ, இன்று நான் உங்களுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன். இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தீர்களானால் ஆசீர்வாதமும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல், இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வழியைவிட்டு விலகி, நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும்” (உபா. 11:26-28). இஸ்ரவேலர்கள் முழுமையாக கீழ்ப்படிந்தால் அவர்களுக்கு ஆசீர்வதமும், இல்லை என்றால் சாபமும் வரும் ( யாக். 2:10; உபா. 27:26). இறைவன் இஸ்ரவேலர்களிடம் “என்னுடைய கட்டளைகளுக்கு முழுமையாக கீழ்ப்படிவீர்களா?” என்று கேட்டதற்கு, அனைவரும் “ஆம்” என பதிலளித்தனர் (யாத். 19:7-8; 24:3).

நியாயப்பிரமாணம் 100% முழுமையான கீழ்ப்படிதலை எதிர்பார்க்கிறது. நியாயப்பிரமாணத்தின் ஒரு சிறு பகுதிக்கு கீழ்படிய தவறினாலும் முழுமையான கீழ்படியாமை என்றே கருதப்படும் (யாக் 2:10).

நியாயப்பிரமாணத்திற்கு கீழ்படிவதை பற்றி சிலரின் எண்ணங்கள்
மக்கள் சொன்னது – மோசே….உடன்படிக்கையின் புஸ்தகத்தை எடுத்து, ஜனங்களின் காது கேட்க வாசித்தான்; அவர்கள் கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள் (யாத். 19:7-8; 24:3, 7).

இறைவன் சொன்னது – பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; இவர்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள் (யாத். 32:9).

மோசே சொன்னது –  நான் உன் கலகக்குணத்தையும் உன் கடினக் கழுத்தையும் அறிந்திருக்கிறேன்; இன்று நான் இன்னும் உங்களுடன் உயிரோடிருக்கையில், கர்த்தருக்கு விரோதமாகக் கலகம்பண்ணினீர்களே; என் மரணத்திற்குப்பின்பு எவ்வளவு அதிகமாய்க் கலகம்பண்ணுவீர்கள்! (உபா. 31:27).

யோசுவா சொன்னது –  யோசுவா ஜனங்களை நோக்கி: நீங்கள் கர்த்தரைச் சேவிக்கமாட்டீர்கள் (யோசு. 24:19).

என்ன நடக்கும் என இறைவன் சொன்னது – கர்த்தர் மோசேயை நோக்கி: நீ உன் பிதாக்களோடே படுத்துக்கொள்ளப் போகிறாய்; இந்த ஜனங்கள் எழும்பி, தாங்கள் போயிருக்கும் தேசத்திலுள்ள அந்நிய தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, என்னைவிட்டு, தங்களுடனே நான் பண்ணின உடன்படிக்கையை மீறுவார்கள் (உபா. 31:16).

என்ன நடக்கும் என மோசே சொன்னது – என் மரணத்திற்குப்பின்பு நீங்கள் நிச்சயமாய் உங்களைக் கெடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட வழியை விட்டு விலகுவீர்கள்; ஆகையால், கடைசி நாட்களில் தீங்கு உங்களுக்கு நேரிடும்; உங்கள் கைக்கிரியைகளினாலே கர்த்தரைக் கோபப்படுத்தும்படிக்கு, அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வீர்கள் என்பதை அறிவேன் (உபா. 31:29).

என்ன நடந்தது
இறைவன் தான் ஆபிரகாமுக்கு வாக்களித்தபடியே அவரால் முன்குறிக்கப்பட்ட காலம் வந்தபோது இஸ்ரவேல் மக்களை கானான் நாட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்தார். கானான் நாட்டில் வாழ்ந்த மக்கள் பல நூறு வருடங்கள் உண்மையான இறைவனை தேடாமலும் வணங்காமலும், பல்வேறுபட்ட சிலைகளை தெய்வங்களாக வணங்கியதோடு மட்டுமன்றி அவர்களுடைய சிலை வணக்கத்தின் பகுதியாக பல்வேறு பாவச்செயல்களையும் செய்துவந்தனர். அவர்களுடைய சிலை வணக்க முறையே பாவங்கள் நிறைந்ததாக இருந்தபடியால், அவர்களுடைய தனிமனித, சமுதாய வாழ்விலும் பாவசெயல்களுக்குக் குறைவில்லை. உலகைப் படைத்த உண்மையான இறைவனை நம்பி சரியான வாழ்வு வாழாமல் மனம்போன போக்கில் வாழ்ந்துவந்த கானான் நாட்டு மக்களினங்களை தண்டிக்கும் வண்ணமாகவும், தன்னையும் தன்னுடைய வாக்குத்தத்தங்களையும் நம்பிய ஆபிரகாமின் வழித்தோன்றல்களை ஆசீர்வதிக்கும்படியாகவும் கானான் நாட்டின் பகுதிகளை இஸ்ரவேல் மக்கள் கட்டுப்பாட்டிற்க்குள் கொடுத்தார். அவர்கள் தொடர்ந்து இறைவனையும் அவரது வாக்குத்தத்தையும் நம்பி இறைவன் சொன்னதை செய்வார்களானால், அந்த கானான் நாடு முழுவதும் இஸ்ரவேல் மக்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வரும் என்பதையும், இவர்களும் இறைவனை நம்பாமல் தங்கள் மனம்போன போக்கில் வாழ ஆரம்பிப்பார்களானால் அடிமைப்படுவார்கள் என்பதையும் தெளிவாகக் கூறினார்.

ஆனால் வெகு சீக்கிரமே இஸ்ரவேல் மக்கள் இறைவனை மறந்தார்கள். இறைவன் கூறியவற்றை செய்யாமல் எதை செய்யக்கூடாது என சொல்லியிருந்தாரோ அதையே செய்தார்கள். சிலை வணக்கமும், முறையற்ற வாழ்வும் அவர்கள் வாழ்வின் அங்கமாயிற்று. அவர்கள் இறைவனை மறுதலிக்கும்போதெல்லாம் அவர்களை வேறு மக்களிடம் அடிமைகளாக ஒப்புக்கொடுத்தார். அவர்கள் எப்பொழுதெல்லாம் இறைவனை நோக்கி கதறினார்களோ (கீழ்ப்படிதல் அல்ல) அப்பொழுதெல்லாம் இறைவன் அவர்களை நியாதிபதிகளை கொண்டு விடுவித்தார். இந்த பாவ சுழற்ச்சியை இஸ்ரவேலருடைய சரித்திரத்தில் மீண்டும் மீண்டும் நாம் காண முடியும். இஸ்ரவேலர்களால் ஒருபோதும் இறைவனுக்கு முழுமையாக கீழ்ப்படிய முடியவில்லை. எனவே அவர்கள் ஒருபோதும் இறைவன் வாக்களித்திருந்த முழுமையான ஆசீர்வாதத்தைப் பெறவும் இல்லை. காலங்கள் கடந்தன. இஸ்ரவேலர்கள் பாபிலோனியருக்கு அடிமைகளாக இருந்தனர். பெர்சியர்களுக்கு அடிமைகளாக இருந்தனர். கிரேக்கர்களுக்கு அடிமைகளாக இருந்தனர். கடைசியாக ரோமர்களுக்கு அடிமைகளாக இருந்தனர்.

இறைவனுடைய நியாயப்பிரமாணம் பாவ சுபாவ மனிதனால் நிறைவேற்ற இயலாதது. இஸ்ரவேலர்கள் இறைவனுக்கு கீழ்படிந்து இறைவன் கொடுத்த நியாயப்பிரமாணங்களை நிறைவேற்றி அதின்மூலம் இறைவனுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளலாம் என்கிற எண்ணம் ஒருபோதும் நிறைவேற வில்லை.

எனினும் தீர்க்கதரிசிகள் மூலமாக அவர்களோடு தொடர்ந்து பேசிய இறைவன் தான் ஆதாமிடத்தில் கொடுத்திருந்த வாக்குறுதியை இன்னும் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறினார். அவர்களுடைய இயலாமையினால் தோல்வியடையும் போதெல்லாம், இறைவனால் முன்குறிக்கப்பட்ட ஒரு நபர் வந்து அவர்களுடைய அடிமைத்தனத்தில் இருந்து அவர்களை விடுவித்து சிறந்த வாழ்வை கொடுப்பார் என வாக்களித்தார்.

ஆனால் பாவ சுபாவத்தால் கறைபட்டிருந்த இஸ்ரவேல் மக்கள், இறைவன் வாக்களிக்கும் நபர் மோசேயைப்போல தாவீதைப்போல ஒரு நபர் என்றும், அவர் வந்து அரசியல் ரீதியாக அடிமைப்பட்டிருக்கும் தங்களை விடுவித்து, இறைவனால் வாக்களிக்கப்பட்டிருக்கும் நாட்டிற்க்கு தங்களை அழைத்து சென்று, ஒரு சிறந்த அரசனாக இருந்து தங்களை ஆட்சிசெய்து, ஒரு செழிப்பான வாழ்வை தங்களுக்கு கொடுப்பார் என எண்ணினர். ஆனால் இறைவனுடைய திட்டமோ மிக மேன்மையானதாக இருந்தது. இஸ்ரவேல் மக்களுக்காக மட்டுமல்ல எல்லா மக்களுக்காகவும், இஸ்ரவேலர்களின் அடிமைத்தனத்தில் அல்ல எல்லா மக்களையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஒரு அடிமைத்தனத்திலிருந்தும் மக்களை விடுவிக்கும்படியாக அவரே இவ்வுலகிற்க்கு மனிதனாக வருவதே அந்த மேன்மையான திட்டம்.

<<பாடம் 6                                                                                                         பாடம் 8>>

mm

Author: Immanuel Jeswyn

இம்மானுவேல் ஜெஸ்வின் அவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக தேவனுடைய பணியை செய்து வருகிறார். வேதாகம கல்வியில் முது நிலை பட்டம் பெற்றிருக்கும் இவர் தற்போது திருநெல்வேலி பட்டினத்தில் தேவனுடைய கிருபையின் சத்தியத்திற்க்காக வைராக்கியம் கொள்ளும் ஒரு வேதாகம திருச்சபையை நிறுவும் விருப்பத்தோடு செயல்பட்டு வருகிறார். இவருக்கு, மனைவி வசந்தி பெனிட்டா, மற்றும் இரண்டு மகன்களும் உண்டு.

mm

Written by 

இம்மானுவேல் ஜெஸ்வின் அவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக தேவனுடைய பணியை செய்து வருகிறார். வேதாகம கல்வியில் முது நிலை பட்டம் பெற்றிருக்கும் இவர் தற்போது திருநெல்வேலி பட்டினத்தில் தேவனுடைய கிருபையின் சத்தியத்திற்க்காக வைராக்கியம் கொள்ளும் ஒரு வேதாகம திருச்சபையை நிறுவும் விருப்பத்தோடு செயல்பட்டு வருகிறார். இவருக்கு, மனைவி வசந்தி பெனிட்டா, மற்றும் இரண்டு மகன்களும் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *