துப்பாக்கிச் சண்டையில் கத்தி!

துப்பாக்கிச் சண்டையில் கத்தி! (எச்சரிக்கை: கொஞ்சம் நிதானித்து வாசிப்பது அவசியமாக இருக்கலாம். கவனமாக வாசிப்பது ஒரு மாற்றத்தைக் கொண்டுவரலாம்). கலைடாஸ்கோப் (Kaleidoscope) என்ற சிறு கருவியைப் பார்த்திருப்பீர்கள். பொருட்காட்சிகளில் விளையாட்டுப் பொருளாக விற்பனைக்கு வரும். என்போன்ற அந்தக் (மொபைல் இல்லாத)காலச் சிறுவர்களுக்கு அதன் வழியே காணும் விதவிதமான டிசைன்கள் அப்போதெல்லாம் ஒரு நல்ல பொழுதுபோக்கு. கண்வலிக்கும்வரை அதைச் சுற்றிச்சுற்றி அது உண்டாக்கும் டிசைன்களைப் பார்த்துக் கொண்டிருப்போம்.

அதில் இருமுனைகள் இருக்கும்; அதில் ஒரு புறம் வழியே மட்டுமே பார்ப்பது மட்டுமே சரியானது. கண்ணாடித்துண்டுகள் உண்டாக்கும் விந்தை ஒளிக்கோலங்கள் அந்த சிறியமுனை வழியே தான் தெரியும். அடுத்த முனையில் (பெரிதான பகுதியில்) பார்த்தால், இது என்ன கருவி என்பதுகூடப் புரியாது! கலைடாஸ்கோப்பின் மகத்துவமே தெரியாது.

ஆவிக்குறிய பார்வை

தேவன் நம்மைப் பார்ப்பதற்கும், நாம் தேவனைப் பார்ப்பதற்கும் (அல்லது நம்மைச் சுற்றி இருப்போரைப் பார்ப்பதற்கும்) உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொண்டோமானால், நம் பார்வையே மாறுவது உறுதி. நமக்கு இருக்க வேண்டிய பார்வையே வேறு. அதன் கோணம் வேறு, ஆழம் வேறு, அது அறியும் உண்மையே வேறு. தேவன் நம்மை வெறும் சரீரமாகப் பார்ப்பதில்லை. அவரது கோணம் வேறு. அவர் ஆவியாயிருக்கிறார். அவரும் நம்மைத் தன்னைப் போல் ஒரு ஆவியாகப் பார்க்கிறார். அதாவது, நாம் ஒரு ஆவி என்றும், நமக்குள் இருக்கும் ஆத்துமா (சிந்தை) இந்த உலகில் ஒரு சரீரத்தில் வைக்கப்பட்டிருக்கிறது என்பதாக, ஆவி -> ஆத்துமா -> சரீரம் என்றே பார்க்கிறார். சரீரம் இந்த வரிசையில் கடைசியில் வருகிறது.

அதனால் தான், சரீரப்பிரகாரமாக எடுக்கும் எந்த முயற்சிகளாலும் ஆவியாயிருக்கும் அவரை நம்மால் மகிமைப்படுத்த முடிவதில்லை. நம் இரட்சிப்பும் நம் சுய (சரீர)முயற்சிகளால் செய்யப்பட்டாலும் அவை அவரால் அங்கீகரிக்கப்படுவதில்லை. சரீர முயற்சி அற்பப் பிரயோஜனம் உள்ளது என்றும், மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது (யோவான் 6:63 )என்று வேதம் சொல்வது இதனால்தான். சரீர கிரியைகளால், அதாவது நம் செயல்பாடுகளால் இரட்சிப்பு நமக்கு அருளப்படுவதில்லை என்பதற்கும் இதுதான் காரணம். தேவன் அருளும் இரட்சிப்போ ஆவிக்குறியது. அது ஆவிக்குறிய வழியாக ஆத்துமாவுக்கு அளிக்கப்படும் விடுதலை. இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆவிக்குறியவன்

அவர் ஆவியாயிருப்பதால்தான், அவரை ஏற்றுக் கொண்டு, அவருடைய இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு, அவருடைய பரிசுத்த ஆவியானவரையே நமக்குள் ஐக்கியம் கொள்ளும்படியாகத் தர அவரால் முடிகிறது. கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான் (I கொரிந்தியர் 6:17). அதாவது, தேவன் ஆவியாயிருக்கிறார் (யோவான் 4:24) நாமும் ஆவியாயிருக்கிறோம் (I கொரிந்தியர் 2:15 ).மறுபடியும் பிறந்தவன், தன் பிறப்பின் சுபாவத்தை (இவர்களை ஜென்ம சுபாவமான என்று வேதம் அழைக்கிறது) மனுஷன் இழந்தவன், பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசையால் ஆவிக்குறியவனாக அடையாளம் காட்டப்படுகிறான்.

சரீர்ப்பார்வை

ஆனால், இதற்கு மாறாக நாம் கடவுளையும் சரி, நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் சரி, சரீரமாகத்தான் பார்க்கிறோம். நம் சரீரக் கண்கள் முதலில் காண்பது சரீரத்தைத்தான். ஆவிக்குறியவர்களாக இல்லாதவர்களுக்கு வேறு வழியில்லை. ஆனால், கிறிஸ்துவத் தரித்துக்கொண்டவர்களாகச் சொல்லப்படும் ஆவிக்குறியவர்களும் இந்த பார்வையை அடையாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மைக் கிறிஸ்தவர்களின் பார்வை சரீரம் -> ஆத்துமா -> ஆவி என்றே இருக்கிறது. இந்த வரிசையில கடைசியாக ஒதுக்கப்பட்டு பெரும்பாலும் ஆவி புரிந்துகொள்ளப்படுவதில்லை அல்லது அங்கீகரிப்படுவதில்லை. ஆவி ஒட்டு மொத்தமாக மறக்கப்படுகிறது.

கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் ஆவி என்றால் பேய் பிசாசு என்றுதான் புரிந்துவைத்திருக்கிறார்கள். நம் சரீரக் கண்களால் பார்க்கமுடியவில்லை என்பதால் ஆவி என்பதையே ஒதுக்கிவிடுவது எத்தனை அபத்தம்? கண்களால் காண இயலாத எல்லாவற்றையும் புறக்கணித்துவிடவா செய்கிறோம்? ஒருவருடைய எண்ணங்களை (ஆத்துமாவைப்) புரிந்துகொள்ள, சரீரப் பிரகாரமான முயற்சி நமக்குச் சரிப்பட்டுவருவதில்லை. சரீரக் கண்களால் கண்டு எடுக்கும் முடிவுகள் தவறாக இருப்பது இதனால்தான். பார்த்தவுடன் ஆராயாமல் சிந்தையில் தவறான எண்ணம் கொள்வதும், இந்த சரீரத்திற்குறிய பார்வையால்தான். மாறாக, ஒருவருடன் ஆவியில் ஐக்கியம் (Fellowship of the Spirit) கொண்டால் மட்டுமே, அவரை ஆவிக்குறிய பிரகாரமாகப் பார்க்க இயலும். தேவனைக்கூட சரீரமாகப் பார்க்க முயல்பவர்கள் பலர் (கண்ணால் காண விரும்புகிறவர்கள்), அவர் ஆவியாயிருக்கிறார் என்பதை அறியாததால், “பார்த்தால்தான் நம்புவேன்” என்று நாத்திகராகவே இருந்துவிடுகின்றனர்.

ஆவிக்குறிய உலகம்

ஆனால், தேவனுடைய ஆவியோ, பிறப்பில் நம்முள் அவர் வைத்த நம் ஆவியோ, நமக்கு அவர் தந்த ஆவியானவரோ, பிசாசின் ஆவி(களோ) – அனைத்துமே இணைந்த ஆவிக்குறிய உலகமாகவே இங்கு அமைந்திருக்கின்றன. கிறிஸ்தவம் (மட்டுமே)இதை மிக அழகாகப் போதிக்கிறது. வேதத்தை சரியாகக் கற்றால்தான் இதைத் தெளிவாக அறிய முடியும். அதாவது, நாமும் சரீரத்தில் இருந்தாலும், ஆவிக்குறியவர்களாக மாறிவிடுகிறோம் என்பதே அந்த சத்தியம். நாம் பெறும் சரீரம் மறுமையின் சரீரமாக இருந்தாலும்சத்தியம், நித்திய வாழ்விலும் இந்த நிலைதான் தொடரப்போகிறது. அப்படியானால், இந்தக் கண்ணோட்டம் நம்மில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும்?

ஆவிக்குறிய போராட்டம்

வருத்தம் தரும் வகையில் பெரும்பாலான கிறிஸ்தவர்களே இதை அறிந்து இருப்பதில்லை. அல்லது, முழுவதும் புரிந்துகொள்வதில்லை. விளைவு, நம்முடைய போராட்டத்தின் தன்மை என்ன, நம் உதவியாளர் யார், நம்முடைய நிஜ எதிரிதான் எவர், என்றே தெரியாமல் வெறும் சரீரப்பிரகாரமான கிறிஸ்தவமாகவே வாழ்க்கை பல பிரச்சனைகளைச் சரியாக அறிய முடியாமலேயே ஓடிமுடிந்து டுகிறது. உண்மையில் சரீரப்பிரகாரமான கிறிஸ்தவம் என்பதே இல்லை. அது ஒரு முரண்! கிறிஸ்தவமே ஆவிக்குறிய ஒன்றுதான் என்பதை அறியாததால், மோதக்கூடாத வகையில் தவறான நபர்களுடன் சரீரப்பிரகாரமாக மோதிக்கொண்டே இருக்கிறோம்!

இது கலைடாஸ்கோப்பின் மறுபுறம் பார்த்து உண்மையான அழகைக் காண இயலாததைப் போன்றது. இன்னமும் நீங்கள் சரியான பார்வைக்குள் வரவில்லை என்றும், ஆவிக்குறிய வாழ்வின் அழகை ருசிக்க இயலாமல், கலைடாஸ்கோப்பைத் திருப்பிப் பிடித்துக்கொண்டு அசுவாரசியமாகவும், குழப்பத்துடனும் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். ஆவிக்குறியவர்களாகத் தங்களைப் பார்க்கத் தெரியாதவர்களையும், அவர்களுக்கு வழிகாட்டும் பரிசேயர்களையும்தான் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள் என்றார் ஆண்டவராகிய இயேசு! (மத்தேயு 15:14 ). ஆவிக்கிறிய போராட்டத்தில் ஆவிக்குறியவகையில் குருடராகவே இருப்போரால் என்ன செய்யமுடியும்? பிசாசு ஆவியாயிருக்கிறான். நாமோ பரிசுத்த ஆவியைப் பெற்ற ஆவிக்குறியவர்கள். நம்மிடம் மோதுபவர்களோ சுயத்தாலும், ஆவிக்குறிய பிசாசின் ஆசியோடும் அவன் ஆதிக்கத்தில் இருந்து பெறும் ஆவிக்குறியவர்களாக மோதுகிறார்கள். உலகமோ அந்த பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது. போராட்டங்கள் எவையும் இந்த உலகில் ஆவிக்குறியவையே.

ஆனால், இவற்றை சரீரத்தில் எதிர்ப்பது, துப்பாக்கிச் சண்டைக்குக் கத்தியை எடுத்துச் செல்வதைப் போன்றது. தோல்வி உறுதி! ஆவிக்குறிய பகுத்தறிவுஆவிக்குறியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான் (I கொரிந்தியர் 2:15). ஏனென்றால் முதலில் அவன், ‘தன்னை ஒரு ஆவி என்றும், தனக்குள் இருக்கும் தனது ஆத்துமாவை, அதே தனக்குள் இருக்கும் மற்றொரு அங்கமான சரீரத்தால் மேற்கொள்ள இயலாது’ என்பதை நிதானித்து அறிந்தவனாக இருக்கிறான். அவனுக்கே ஆவிக்குறிய பார்வை அமையப் பெறுகிறது. அவன் பார்வை ஆவிக்குறிய பகுத்தறிவை வளர்க்கிறது. அவனே ஆவிக்குறிய வாழ்வும் வாழ்கிறான். அவனுக்குத் துணையாக அவனது மீட்பர் பரிசுத்த ஆவியானவராக ஐக்கியம் கொண்டு எல்லாவற்றையும் ஜெயம் கொள்ள உதவுகிறார். அவனே வெற்றி பெரும் கிறிஸ்தவன்! ஆவிக்குறியவன் மட்டுமே கிறிஸ்தவன் என்பதால் அவனே கிறிஸ்தவன்.
mm

Written by 

Born again Christian. Believer in Trinity. Member of the Church of South India. IT business owner. Father and Husband.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *