திருவிருந்தை யார் பரிமாறலாம்?

சபையில் உள்ள முக்கிய ஆசரிப்பு திருவிருந்து, இந்த திருவிருந்தை யார் எடுத்துக்கொடுப்பது என்பதில் சபையில் ஒரு பெரிய போராட்டமே நடக்கும், அதிலும் பாஸ்டர்கள் எதைவேண்டுமானாலும் விட்டுக்கொடுப்பார்கள் ஆனால் இந்த திருவிருந்தை பரிமாறும் வேலையை கொள்ளையாடின பொருளாக பாவிப்பார்கள்.

சில இடங்களில் திருவிருந்தை பரிமாறுபவர்கள் 13 வருடங்கள் ஊழியம் செய்திருக்கவேண்டும், ரெவெரெண்ட் பட்டம் பெற்றிருக்க வேண்டும், 50 வயதிற்கு மேற்பட்டவராக இருக்கவேண்டும், இப்படி இன்னும் பல நிபந்தனைகளும்கூட உண்டு. சில இடங்களில் பெரிய போதகர் வந்தால்தான் திருவிருந்தே ஆசரிக்கப்படும், அவருக்கு உடல்நிலை சரியில்லாவிட்டால் அன்று திருவிருந்தே நடக்காது, அந்தளவிற்கு இந்த திருவிருந்தில் பல நிபந்தனைகள் உண்டு.

ஏன் இதை பரிமாற இந்தளவிற்கு நிபந்தனைகளை வைத்திருக்கிறார்கள் தெரியுமா? நமது கிறிஸ்த வட்டாரத்தில் இந்த திருவிருந்து பரிமாறும் வேலை, மிக மிக, கனமான வேலையாக பார்க்கப்படுகிறது, நன்றாக தெரிந்துகொள்ளுங்கள் மிக மிக கனமான வேலைதான் இந்த திருவிருந்து பரிமாறுதல் என்பது பல கிறிஸ்தவர்களின் நம்பிக்கை, ஆனால் வேதம் இதைக்குறித்து என்ன சொல்லுகிறது?

லூக்கா 22: 19. பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
20. போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்.

இயேசுதான் இந்த இடத்தில் பரிமாறுகிறார், ஆக பலர் நினைப்பது இது இயேசுவைப்போன்றோர் செய்யக்கூடிய வேலை என்று, இது உண்மைதான், ஆனால் இயேசு இதை எப்படி பார்க்கிறார்? அடுத்த வசனங்களில் பார்க்கும்போது, சீஷர்களுக்குள் எவன் பெரியவன் என்ற தர்க்கம் எழுந்த்தாக வாசிக்கிறோம், அதற்கு இயேசு சொன்ன பதிலை பாருங்கள்…

24. அன்றியும் தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று.
25. அவர் அவர்களை நோக்கி:
26. உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப்போலவும் இருக்கக்கடவன்.
27. பந்தியிருக்கிறவனோ, பணிவிடைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன்.

சீஷர்களுக்குள் எவன்பெரியவன், மரியாதைக்குரியவன், கனத்திற்குரியவன் என பேச்சு எழும்பியபோது, இங்கு இயேசு ஏன் பந்தியிருக்கிறவனை பற்றி பேசுகிறார்?

ஒரு ஹோட்டலில் சென்று சாப்பிடும்போது அங்கு இருக்கும் பரிமாறுகிறவர் பெரியவரா? இல்லை பந்தியில் அமர்ந்து சாப்பிடும் நீங்கள் பெரியவரா?

ஒரு ஹோட்டலில் சென்று சாப்பிடும்போது அங்கு இருக்கும் பரிமாறுகிறவர் பெரியவரா? இல்லை பந்தியில் அமர்ந்து சாப்பிடும் நீங்கள் பெரியவரா? யோசியுங்கள். இதைத்தான் இயேசு குறிப்பிட்டு அப்பத்தையும், திராட்சைரசத்தையும் நான் எடுத்து உங்களுக்கு பரிமாறியதால் நான் இங்கு பணிவிடைக்காரன், நீங்கள் பந்தியிலிருப்பவர்கள் என்று சொல்லி தன்னை பணிவிடைக்காரனாக காண்பிக்கிறார். இன்றும் திருவிருந்து பரிமாறுகிறவர்கள் அந்த வேலையை கனமான மிக மிக மரியாதைக்குறிய வேலையாக பார்ப்பது, எவ்வளவு மதியீனமானது. அந்த வேலை தாழ்மையை வெளிப்படுத்தும் வேலை, ஹோட்டலில் சர்வராக இருப்பவரை சுட்டிக்காண்பிக்கும் அளவிற்கு மிகத் தாழ்மையான வேலை அது. உண்மையில் இந்த வேலை மிக மிக கனத்திற்கு உரிய வேலையாக இருந்திருந்தால், இயேசு இதை செய்திருக்கமாட்டார், பேதுருவையோ, யோவானையோ பரிமாறும்படி பணித்திருப்பார்.

எனக்கருமையான போதகர்களே திருவிருந்தை பரிமாறும் வேலையை நான் மட்டுப்படுத்தவில்லை, ஆனால் இதை மிக மரியாதைக்குறிய கனத்திற்குரிய வேலையாக நீங்கள் ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவைத்துள்ளீர்கள், முதலில் மக்கள் மனதில் இது பணிவிடைக்காரர்களுக்குரிய தாழ்மையான வேலை என்பதைத் தெரியப்ப்டுத்துங்கள், மேலும் இதை பரிமாற 13 வருடங்கள் படித்திருக்க வேண்டும், ரெவெரெண்ட் பட்டமெல்லாம் வாங்கவேண்டும் என்ற, மனிதக் கற்பனைகளை உபதேசங்களாக போதிக்கவேண்டாம். இந்த வேலைக்கு இருக்கக்கூடிய ஒரு முக்கியமான தகுதி, “நாம் ஹோட்டலில் வேலைபார்க்கும் சர்வரின் மன்நிலையை அடைவதுதான்”, அதைத்தவிற வேறொன்றும் உங்களுக்கு தேவையில்லை. ஆனால் இந்த தகுதியை அடைய ஒருவருக்கு, 15 வருடங்கள் கூட ஆகலாம், இந்த தகுதி, வேதகல்லூரியில் படிப்பதாலோ, ரெவெரெண்ட் பட்டம் வாங்குவதாலோ வந்துவிடாது, ஒரு முழுமையான அர்பணிப்பின் வாழ்க்கையில்தான் இந்த தாழ்மை நமக்குள் உருவாகும். இப்படிப்பட்டவர்களையே, திருவிருந்தை பரிமாற தேர்ந்தெடுங்கள், கர்த்தர் நாமம் மகிமைப்படட்டும் ஆமென்.

mm

Written by 

சாலமன் அவர்கள் திருப்பூர் பட்டணத்தில் Theos' Gospel Hall எனும் திருச்சபையின் நிறுவனர். அவர் அத்திருச்சபையின் நற்செய்தி பணியாளராகவும் மூப்பராகவும் ஊழியம் செய்து வருகிறார். Indian Bible College & Seminary எனும் வேதாகம கல்லூரியிலும் ஆசிரியராக பணிபுரிகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *