சரியானதெல்லாம் சரியல்ல!

சரியானதெல்லாம் சரியல்ல

எழுதியவர்: போதகர். அகஸ்டின் ஆறுமுகம்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் சரியானதை செய்ய விரும்புகிறோம்.  வேதத்தின்படி நடப்பதுதான் சரியானது என்பதையும் அறிந்திருக்கிறோம். ஆனால், வேதாகமம் சொல்லாத சில காரியங்களைப் பொறுத்தவரையில் நான் சரியானதைத் தான் செய்கிறேன் என வாதாடுகிறோம். ஆனால், நாம் செய்கிற சரியான காரியங்கள் அனைத்தும் உண்மையில் சரியானதாய் இருக்கிறதா  என்பதாக யோசித்திருக்கிறோமா? சிந்தியுங்கள்.

நாம் எந்த உணவை உண்பது, நேரத்தை எப்படி செலவழிப்பது, எந்த உடை உடுத்துவது, தொலைக்காட்சியில் எதை, எவ்வளவு நேரம் பார்ப்பது (விளையாட்டு, தொடர் பார்ப்பது), பகிரி (Whatsapp) மற்றும் முக நூலில் (Facebook) எவ்வளவு நேரம் மற்றும் எப்படி செலவழிப்பது போன்ற கேள்விகளுக்கு வேதத்திலிருந்து தெளிவான, சரி-தவறு என்று பிரித்து சொல்ல முடியாத நிலை இருப்பதால், நாம் செய்வது தவறல்ல என்பதாக எண்ணிக்கொண்டு, தவறானதை செய்கிறவர்களாய் இருக்கக்கூடும். அதினிமித்தம், ஆண்டவரை விட்டு தூரம் போகிறவர்களாய், ஆண்டவருக்கென்று செயல்பட இயலாத இருக்கிறோம். தவறில்லாத காரியம் அனைத்தும் சரியானதல்ல என்பதை நாம் புரிந்து கொள்ளாதிருக்கிறோம்.

பவுல் கொரிந்தியருக்கு ஆலோசனையாக எழுதும்போது இவ்வாறு கூறுகிறார். “எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.” (1 கொரி. 6:12).“எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் எனக்குத் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது” (1 கொரி.10:23). இந்த வசனங்களின் அடிப்படையில், பின்வருகிற கேள்விகளுக்கு உறுதியாய் “ஆம்” என நாம் கூறிவிட முடியுமானால், நாம் செய்கிற காரியங்கள் சரியானது. அவ்வாறு உறுதியாய் கூற முடியாதென்றால், அது தவறானது என்பதை மனதில் கொள்வோம்.

எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்

இது எனக்கு தகுதியானதா?   – ஆம் / இல்லை                                                                   

 “எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது.”

சில நேரங்களில் ஒரு செயல் சரியா அல்லது தவறா என்பது யார் அதை செய்கிறார்கள் என்பதின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். ஒரு செயல் சரியானதாய் இருந்தாலும், இந்த நபர் இதை செய்திருக்க கூடாது என்பதாய் யோசிக்கிறோம். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட பதவியில் இருக்கிற நபர் மற்றும் அந்த குடும்பத்தினர், அந்த பதவிக்கு ஏற்றவண்ணமாய் நடந்து கொள்ள வேண்டும் என நாம் அனைவருமே எதிர்பார்ப்போம். ஒரு இராஜாவின் மகனோ, மகளோ தாங்கள் இராஜாவின் பிள்ளைகள் என்பதை தங்கள் உடை, நடை, செயல்பாடுகளில் காண்பிக்க வேண்டும். அவர்கள் சாதாரணமான மற்றவரைப்போல உடை அணிந்தாலோ, நடந்து கொண்டாலோ (அதுசரியானதாய் இருந்தாலும்),  நாம் அவர்கள் செய்கிற காரியம் அவர்களுக்கு தகுதியானதல்ல என்போம். அருமையானவர்களே, அதைப்போலவே நாம் செய்கிற காரியங்கள் கிறிஸ்துவுக்குள்ளாய் தேவன் நம்மை வைத்திருக்கிற மேலான நிலைக்கு (1கொரி.6:10-20) (தேவனால் கழுவப்பட்ட, பரிசுத்தமாக்கப்பட்ட, வாசம்பண்ணப்படுகிற, மீட்கப்பட்ட நிலைக்கு) தகுதியானதாய், ஏற்ற வண்ணமாய் இருக்கிறதா என கேட்டுக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும். தேவன் நம்மை வைத்திருக்கிற ஆவிக்குரிய மேலான நிலைக்கு ஏற்றதாய் இல்லாத எதையும் (நல்லதாகவே இருந்தாலும்) புறந்தள்ளுவோம். எனக்கு தகுதியில்லாத சரியானதும் சரியானதல்ல!

இது எனக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிறதா?  – ஆம் / இல்லை                                        

எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது

கிறிஸ்தவ வாழ்வில் நம் செயல்பாடுகள் அனைத்தும் ஆண்டவரிடத்தில் நெருங்கிச் சேரச் செய்கிறவைகளாக, அவரை அறிகிற அறிவில் வளர செய்கிறவர்களாக, அவருக்காக வாழ்வதற்கு ஊக்குவிப்பவைகளாக இருக்க வேண்டும். பக்தி வாழ்வுக்கு நேராக வழி நடத்தாத எந்த ஒர் செயலும் (நல்லவைகளாகவே இருந்தாலும்) சரியானதல்ல. நம் வாழ்வை ஆவிக்குரிய வாழ்வு, மற்றும் சரீரப்பிரகாரமான வாழ்வு என பிரிக்க முடியாது; பிரிக்கவும் கூடாது. நாம் புசித்தாலும், குடித்தாலும் தேவ நாம மகிமைக்காகவே செய்யும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறோம் (1 கொரி.10:31) என்பதை மனதில் கொள்வோம். நான் செய்கிற இந்த செயல், இந்த பழக்கம் என்னை ஆண்டவரிடம் நெருங்கிச் சேர செய்கிறதா? எந்த விதத்திலாவது பக்தி விருத்தி அடைய செய்கிறதா என சிந்திப்போம். அவ்வாறு இல்லாத எந்த செயல்களையும் புறந்தள்ளுவோம். எனக்கு பக்தி விருத்தி உண்டாக்காத சரியானதும் சரியானதல்ல!

பக்தி வாழ்வுக்கு நேராக வழி நடத்தாத எந்த ஒர் செயலும், அவைகள் நல்லவைகளாகவே இருந்தாலும், சரியானதல்ல.

இது என்னை அடிமைப்படுத்தாது இருக்கிறதா?  – ஆம் / இல்லை                                                  

எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும்  அடிமைப்படமாட்டேன்.”

எந்த பழக்கமும் (அது நல்லதாகவே தெரிந்தாலும்), அதை நிறுத்த முடியாத அளவிற்கு நம்மை அடிமைப்படுத்துமானால், அது சரியானதல்ல. உண்பது நல்லதுதான் அதில் பாவமில்லை; ஆனால் பெருந்திண்டி (அதிகமாய் உண்பது) பாவம் என வேதம் சொல்வதை கவனியுங்கள். தொலைக்காட்சியில் நாம் காண்கிற ஒரு நிகழ்ச்சியானாலும், (தொடரோ, விளையாட்டோ, சினிமாவோ, செய்தித் தொகுப்போ கூட), கைபேசியில் (Mobile) குறுஞ்செய்தி அனுப்புதல், பகிரி மற்றும் முக நூலில் நேரம் செலவழித்தல், வீடியோ பார்த்தல் போன்றவைகளானாலும், அதை நாம் விட்டுவிட முடியாத அளவிற்கு அதற்கு அடிமைப்பட்டிருக்கிறோமா என்பதை சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.  என்னை அடிமைப்படுத்துகிற சரியானதும் சரியானதல்ல!

இது மற்றவருக்கு பிரயோஜனமாய் இருக்கிறதா? – ஆம் / இல்லை

கிறிஸ்தவ வாழ்வில் நம் சுய நலம் சார்ந்து வாழக்கூடாது. நாம் செய்கிற காரியங்கள்  தனிப்பட்ட முறையில் நமக்கு சந்தோசம் தருவதாக, நமக்கு பிரயோஜனமானதாக இருக்கிறது என்ற அடிப்படையில் இருக்க கூடாது. இந்த செயலினால், மற்றவர் பிரயோஜனப்பட முடியுமா, மற்றவர் இடறல் அடைவார்களா என்பதையும் சிந்திக்க வேண்டியது அவசியமானதாகும். கிறிஸ்துவின் சரீரத்தில் ஓர் அங்கமாக (1 கொரி. 10:24; 12:25) நாம் இருப்பதால், நாம் செய்கிற காரியங்கள் அதே சரீரத்தில் உள்ள மற்றவர்களை பாதிக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். நம் விருப்பத்தை மட்டும், நம் பிரயோஜனத்தை மட்டும் முன்னிறுத்துகிற எந்த ஓர் காரியமும்(சரியானவைகளாயிருந்தாலும்)சரியானதல்ல. மற்றவருக்கு பிரயோஜனப்படாத சரியானதும் சரியானதல்ல!                                                                

பெரிய பாத்திரத்தில் உள்ள தண்ணீர் அனைத்தையும் ஒரு சிறிய துளை எவ்வாறு வெளியேற்றிவிடுமோ, அதைப்போல நம் வாழ்வில் உள்ள தேவ வல்லமையனைத்தையும், எத்தகைய சிறிய தவறுகளும் நீர்த்துப்போக செய்துவிடும் என்பதை உணர்ந்து எச்சரிக்கையாய் இருப்போம்.

mm

Written by 

அகஸ்டின் ஆறுமுகம் அவர்கள் ஓசூர் வேதாகம திருச்சபையில் இணை-போதகராக பணிபுரிந்து வருகிறார். தேவனுடைய கிருபையின் சத்தியத்தித்தை வேதாகமத்தின் வரிசை கிரமத்தை பின்பற்றி போதிப்பதன் மூலமாகவே விசுவாசிகளை கிறிஸ்தவ பக்குவத்திற்க்குள் நடத்தமுடியும் என்பதை உறுதியாக நம்பும் இவர் இதைக்குறித்த ஆராய்ச்சி படிப்பும் முடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *