
எழுதியவர் : போதகர் G. பால் ராஜ்
1 கொரிந்தியர் 1:18-24
சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.அந்தப்படி: ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன் என்று எழுதியிருக்கிறது.
ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று.
யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்; நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார்.ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார்.
கிறிஸ்தவ வாழ்வில் சில வேளைகளில் நாம் கேட்டதை ஆண்டவர் கொடுப்பார் ஆனால், சில நேரங்களில் அவர் கொடுப்பதை நாம் எவ்வித மறுப்புமின்றி பெற்றுக்கொள்ளவேண்டும்.
கிறிஸ்தவ வாழ்வில் சில வேளைகளில் நாம் கேட்டதை ஆண்டவர் கொடுப்பார் ஆனால், சில நேரங்களில் அவர் கொடுப்பதை நாம் எவ்வித மறுப்புமின்றி பெற்றுக்கொள்ளவேண்டும். நாம் கேட்டதை ஆண்டவர் கொடுக்கும்போது நமது விசுவாசம் ஈடேறும். அதேவேளையில், ஆண்டவர் கொடுப்பதை பெற்றுக்கொள்ள மறுப்போமேனில் அது கிறிஸ்த்தவர்களாயிருப்பின் கிறிஸ்துவுக்குள் பக்குவம் அடைவதற்கு இடையூறாகவும், கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு இரட்சிப்புக்கே இடையூராகவும் அமைந்து விடும் என்பதைதான் நாம் இந்த வசனங்களில் பார்க்கவிருக்கின்றோம்.
கேட்கப்பட்டதும்! கொடுக்கப்பட்டதும்!: யூதர்களையும் அவர்களின் வாழ்வில் தேவனின் அற்புதத்தையும் தனித்தனியாக பிரிக்க முடியாது. மோசே, எலியா மற்றும் எலிசா ஆகியோரின் கரத்தினால் தேவன் செய்த அற்புதங்கள் இதற்க்கு சான்றாகும். என்றபோதிலும், புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவின் காலத்திலும், அப்போஸ்தலர்களின் காலத்திலும் இயேசுவே மேசியா என நம்புவதற்கு யூதர்கள் கேட்ட அடையாளம் வெறும் அற்புதமட்டுமல்ல அவரது தலைமையின்கீழ் யூதர்களின் உலகளாவிய ஆட்சியுமாகும். சீஷர்களுக்கும் இப்படிப்பட்ட எதிர்பார்ப்பு இருந்ததை நாம் அப்போஸ்தலர்கள் 1:6 இன் மூலம் அறியலாம். இன்றைக்கும் யூதர்கள் மேசியாவின் உலகளாவிய ஆட்சியே அவரின் அடையாளம் என்று கூறி வருவது நாம் அறிந்ததே. ஆனால் கிறிஸ்துவின் சிலுவை மரணம் மற்றும் அவரின் உயிர்த்தெழுதலே அன்றும், இன்றும், மற்றும் என்றைக்குமாக தேவன் இயேசுகிறிஸ்துவின் மூலமாகவும், அப்போஸ்தலர்களின் மூலமாகவும் யூதர்களுக்கு கொடுத்த ஒரே அடையாளமாகும் (யோவான் 2:18-21 மத்தேயு 12:38-41). காரணம், மேசியாவின் ஆட்சி அல்ல சிலுவையில் அவர் பட்ட தழும்புகளே நம்மை குணமாக்கும், நமது பாவங்களை சுத்திகரிக்கும் (ஏசாயா 53:5).
இந்த வசனங்கள் நமக்கு கற்று தரும் ஆவிக்குரிய பாடங்களாவன;
முதலாவது, அன்றைக்குமட்டுமல்ல இன்றைக்கும் அற்புதம் செய்யும் இயேசு அல்ல சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த இயேசுவே அநேகருக்கு இடறலாக இருக்கிறார்.
இரண்டாவது, விசுவாத்தைக் கொண்டு கிருபையினால் மட்டுமே கிடைக்கும் இரட்சிபை அற்புதத்தினால் பெற நினைப்பது ஆவிக்குரிய மடமை.
மூன்றாவது, தேவன் நம்மை எவ்வளவாக நேசிக்கிறார் என்பதற்கு தேவன் கொடுத்த ஒரே அடையாளம் கிறிஸ்துவின் சிலுவை.
நான்காவது, தேவன் நமக்கு கொடுக்கும் இரட்சிப்பை பெற்றுக்கொள்வோமெனில் இரட்சிக்கபடுவோம். நாம் விரும்பும் அடையாளத்தை அவர் தரவேண்டுமென்று நினைத்தால் இடறல் அடைவோம்.
அடையாளத்தை தேடுகிறவர்களுக்கு சிலுவையைப்பற்றிய உபதேசம் இடறல். இயேசுகிறிஸ்துவின் பாடுகளையும், சிலுவை மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் விசுவாசிப்போருக்கு அது இரட்சிப்பிற்கேதுவான தேவபெலன்.

Author: Paul Raj
பால் ராஜ் அவர்கள் பெங்களூரு பட்டினத்தில் உள்ள குடிசைவாழ் மக்கள் மத்தியில் பிரதரன் திருச்சபையோடு இணைந்து ஊழியம் செய்து வருகிறார். சபை சரித்திரத்தை முதன்மை பாடமாக கொண்டு, முது நிலை இறையியல் பயின்றவர்.