கிறிஸ்துவை அறியாதோர் மத்தியில் கிறிஸ்தவ குடும்பம்

எழுதியவர்: போதகர். அகஸ்டின் ஆறுமுகம்

தேவன் படைத்த இந்த உலகில் இன்றைக்கு இரண்டு பிரிவினர் மட்டுமே இருக்கிறார்கள்.  கிறிஸ்துவுக்குள் உள்ளோர் மற்றும் கிறிஸ்துவுக்கு வெளியே உள்ளோர் என்பதே அந்த பிரிவாகும். இது நித்தியமான பிரிவாயிருக்கிறது. கிறிஸ்தவரல்லாத குடும்பங்களில் இருந்து கிறிஸ்தவுக்குள் வந்தோராயிருந்தாலும், கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்து கிறிஸ்துவுக்குள் வந்தோராயிருந்தாலும், அவர்கள் கிறிஸ்துவை அறியாத உறவினர்கள், நண்பர்கள் போன்றோரோடு எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதே அவர்களின் ஆவிக்குரிய முதிர்ச்சிக்கு சான்றாய் இருக்கிறது.

நற்புரிதல்

கிறிஸ்வரல்லாதோர் மத்தியில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதை அநேகர் அறியாமல் இருப்பதற்கு காரணம், வேதத்தை அறியாமல் இருப்பதும், அதை தவறாய் புரிந்து கொண்டிருப்பதுமேயாகும். அறிந்தோ, அறியாமலோ கிறிஸ்துவை அறியாதவர் மத்தியில் ஓர் வெறுப்புணர்வு விதைக்கப்படுகிறது. அது மிகவும் தவறானதாகும். எனவே, கிறிஸ்தவ குடும்பமானது கிறிஸ்தவரல்லதோர் மத்தியில் நடந்து கொள்ள வேண்டியது பற்றி சிந்திப்போம். பின்வருகிற உண்மைகள் சரியான புரிந்து கொள்ளுதலுக்கு நம்மை நடத்தும் என நம்புகிறேன்.

தேவன் படைத்த இந்த உலகில் இன்றைக்கு இரண்டு பிரிவினர் மட்டுமே இருக்கிறார்கள்.  கிறிஸ்துவுக்குள் உள்ளோர் மற்றும் கிறிஸ்துவுக்கு வெளியே உள்ளோர் என்பதே அந்த பிரிவாகும். இது நித்தியமான பிரிவாயிருக்கிறது

நாமும் கிறிஸ்துவை அறியாத குருடராய்தான் இருந்தோம்

கிறிஸ்துவை அறிவதற்கு முன்பு, நாம் பிசாசினால் கண்கள் குருடாக்கப்பட்டவர்களாய் (2 கொரி.4:4) , பாவத்தில் மரித்தவர்களாய், தேவனுக்கு விரோதிகளாய், கோபாக்கினையின் பிள்ளைகளாய் இருந்தோம் (எபே.2:1-3). நாம் எந்த விதத்திலும் தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு தகுதியில்லாதவர்களாகவே இருந்தோம். கிறிஸ்துவை அறியாத குடும்ப பிண்ணணியிலிருந்து மட்டுமல்ல, கிறிஸ்தவ பிண்ணணியிலிருந்து வந்திருந்தாலும், கிறிஸ்துவை தனிப்பட்ட முறையில் இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்ளும் வரை, இன்றைக்கு கிறிஸ்துவை அறியாமல் இருப்போரைப் போலவே பரிதாபமான நிலையிலேயே இருந்தோம் என்பதை அறிவோம்.

நாம் கிருபையினாலேயே இரட்சிக்கப்பட்டோம்

தேவன் நம்மை எவ்வாறு இரட்சித்தார். நாம் நம் திறமையாலோ, புத்திசாலித்தனத்தினாலோ இரட்சிக்கப்படவில்லை. மாறாக, தேவனோ இரக்கத்தில் ஐசுவரியம் உள்ளவராய், நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனே கூட உயிர்ப்பித்தார் (எபே.2:4) என வாசிக்கிறோம். நாம் நம்மில் பெருமைபாராட்ட ஒன்றுமில்லாதபடி, கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டோம் என்பதை நாம் மறக்கக்கூடாது (எபே.2:8-9; 1 கொரி.1:26-31).

நாம் வெளிச்சமாயிருக்கும்படியே பிரித்தெடுக்கப்பட்டோம்

நாம் தெரிந்துகொள்ளப்பட்டதின் நோக்கம், நாம் மற்றவர்களிடமிருந்து வேறுபிரிக்கப்பட்ட வாழ்க்கை வாழும்படியாகவேயாகும். ஆனால், அந்த வேறுபட்ட வாழ்க்கையை கிறிஸ்துவை அறியாதோர் காணும்படி அவர்களோடு இருந்து உப்பாய், வெளிச்சமாய் செயல்பட வேண்டும் என்பதை அநேகர் அறியாமல் இருக்கிறார்கள். “அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு பிரிந்து போய்” (2கொரி.6:17) என்ற வார்த்தை தவறாய் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இந்த வசனம் புறஜாதியினரோடு எவ்விதத்திலும் தொடர்பில்லாமல் வாழ்வதைக் குறித்துப் பேசவில்லை. மாறாக, அவர்களின் வாழ்க்கைமுறையில் இருந்து வேறுபட்டு வாழ்வதைக்குறித்துப் பேசுகிறது (யோவா.17:14-16; 1 கொரி.5:10) என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

நட்புறவு

கிறிஸ்தவ குடும்பமானது, கிறிஸ்தவரல்லாதோரோடு நல்ல நட்புறவு கொண்டதாய் இருக்க வேண்டும். இயேசு கிறிஸ்து பாவமேயில்லாத பரிசுத்தராயிருந்தார். ஆனாலும், பாவிகளின் சிநேகிதன் என அழைக்கப்பட்டார் (மத்.11:19). அந்நாட்களில் மதவாதிகளால் ஒதுக்கப்பட்ட ஆயக்காரர் மற்றும் பாவிகளின் வீட்டில் பந்தியிருந்தார் (மத்.9:10; லூக்.15:1-2). சமுதாயத்தின் எந்த நிலையில் இருந்தோரும் இயேசுவை எளிதாக அணுகமுடிந்தது; மற்றவர் முறுமுறுத்தபோதிலும், இயேசு பாவியாய் இருந்த லாசருவின் வீட்டில் தங்கும்படி சென்றார் (லூக்.19:7). நாமும் பாவிகளாய் இருந்தபோது, தேவனுக்கு விரோதிகளாய் இருந்தபோதே அவரால் சிநேகிக்கப்பட்டு (ரோமர் 5:8,10), அவருடைய குமாரனுடைய இரத்தத்தினாலே மீட்கப்பட்டோம் (1 பேதுரு.1:19) என்பதை உணர்ந்து, நாம் அனைவரிடமும் அன்பு கூரவேண்டும் (1 யோவா. 4:7-11).

நற்சாட்சி

கிறிஸ்தவர்கள் குடும்பமாக, தனிப்பட்ட முறையில் கிறிஸ்தவரல்லாதோர் மத்தியில் நற்சாட்சி பெற்றவராய் இருக்க வேண்டும். நாம் நம் நடத்தையிலும், வார்த்தையாலும் நற்சாட்சி பெற்றவர்களாய் இருந்து, நற்செய்தியை அறிவிக்கவேண்டும். நம்மில் உள்ள ஒளியின் வெளிப்பாடான வெளிச்சத்தை (மத்.5:14-16) ஜனங்கள் காணும்வரை, ஒளியை (யோவா.1:9) (கிறிஸ்துவை) அவர்கள் அறிவது சாத்தியமில்லாதது. தேமேந்திரேயு எல்லோராலும் நற்செய்தி பெற்றிருந்தவன் என யோவான் குறிப்பிடுகிறார் (3 யோவான்.12). இயேசு கிறிஸ்துவின் கிருபையுள்ள வார்த்தைகளை கேட்கும்முன்பாகவே ஜனங்கள் அவருடைய நல் நடத்தையை அறிந்திருந்தார்கள் (லூக்.4;22) என்பதை கவனியுங்கள். நாம் மற்றவர்களின் பாவத்தால் கறைபடுவோம் என பயந்து அவர்களை முற்றிலும் தவிர்ப்பதோ, கிறிஸ்தவரல்லாதவரின் பாவ வழியில் நடப்பதோ தவறானது. வெளிச்சம் இருளை விரட்டுகிறது. நாம் இருக்கும் இடத்தில் உள்ளவர்கள் நம்மூலம் கிறிஸ்துவைக் கண்டு மாற்றமடைய வேண்டும் என்பதே நம்மைக் குறித்த தேவ சித்தமாகும் (எபே.5:8).

கிறிஸ்தவ குடும்பமானது, கிறிஸ்தவரல்லாதோரோடு நல்ல நட்புறவு கொண்டதாய் இருக்க வேண்டும். இயேசு கிறிஸ்து பாவமேயில்லாத பரிசுத்தராயிருந்தார். ஆனாலும், பாவிகளின் சிநேகிதன் என அழைக்கப்பட்டார்

நடைமுறை

கிறிஸ்தவ குடும்பங்கள், கிறிஸ்தவரல்லாதோராகிய தங்கள் சொந்தங்கள் மற்றும் அயலகத்தாரோடு எவ்வாறு நடந்து கொள்ளவேண்டுமென்ற சில நடைமுறை ஆலோசனைகளை கூற விரும்புகிறேன்.

குற்றப்படுத்த வேண்டாம்!

இன்றைக்கு அநேகர் கிறிஸ்துவை அறியாதோரைக் குறித்து மனதுருக்கம் உடையவர்களாய் (மத்.9:36; யோவா.8:10-12), அவர்களை சிநேகித்து கிறிஸ்துவை அறிவிப்பதற்கு பதிலாக, அவர்களை குற்றப்படுத்துகிறார்கள். நாம் அவர்களுடைய அவிசுவாசத்தை குற்றப்படுத்துவோமானால், நாம் நம் இரட்சிப்புக்கு தேவ கிருபையை சார்ந்திராமல், நம் திறமையையும், தெளிவான சிந்தையையும் சார்ந்திருக்கிறோம் என்பதை காண்பிக்கிறது.

உறவை முறிக்காதிருங்கள்!

கிறிஸ்தவரானதால், கிறிஸ்தவரல்லாத நம் சொந்தங்களையெல்லாம் வெறுத்துவிடும்படி வேதம் போதிக்கவில்லை. தேவனுடைய வார்த்தைக்கு நாம் கீழ்ப்படிய தடையாய் இருக்கும்போது அவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டியதில்லை என்பது சரியென்றாலும், அதற்காக அவர்களை வெறுத்துவிடுவதோ, கனவீனப்படுத்துவதோ தவறானதாகும். எனவே, கிறிஸ்தவரல்லாதவராய் நம் குடும்பத்தினர் இருந்தாலும், நம் குடும்ப விசேஷங்களில் கலந்து கொள்ள வேண்டியதும், குடும்பத்தில் நம் கடமைகளாக சரியாக செய்வதும் அவசியமானதாகும்.

உங்கள் நம்பிக்கையை அன்புடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

கிறிஸ்தவரல்லாத நமது நண்பர்களோ, உறவினர்களோ நம் விசுவாசத்தை மறுதலிக்கும்படியான செயல்களை செய்ய சொன்னால், அவர்களிடம் நம் நம்பிக்கையை உறுதியுடனும், அதே நேரத்தில் அன்புடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் (1 பேதுரு 3:15).

விக்கிரகங்களை கண்டு பயப்படாதிருங்கள்!

அநேக கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவரல்லாதோரோடு அன்பான உறவும், நட்பும் இல்லாததற்கு காரணம், அவர்கள் விக்கிரகங்களைக் குறித்த தெளிவில்லாதவர்களாய் இருக்கிறார்கள். விசுவாசிகளைப் பொறுத்தவரை விக்கிரங்கள் ஒன்றும் செய்ய வல்லமையற்றவை (1 கொரி.8:4) என்பதை உணரவேண்டும். இந்த உலகத்தில் இருக்கிறவனிலும் நமக்குள் இருப்பவர் பெரியவர் (1 யோவா.4:4) என வேதம் சொல்கிறது. விக்கிரகங்களை கண்டு நாம் பயப்பட வேண்டியதில்லை. மாறாக, நம்மில் வாழ்கிற ஜீவனுள்ள தேவனைக் கண்டே, விக்கிரக ஆராதனை மூலம் ஜனங்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிற பிசாசானவன் பயந்து நடுங்குகிறான் (யாக்.2:19; 1 சாமு.5:1-5) என்பதை உணர்வோம்.

சரியான ஆலோசனைகளுக்கு செவிகொடுங்கள்!

கிறிஸ்தவரல்லாதோர் ஆலோசனைகள் சொல்லும்போது, அது வேத சத்தியத்திற்கு முரண்படாமல் இருக்குமானால், அதற்கு நாம் செவி கொடுப்பதில் தவறு ஏதும் இல்லை. மோசே தன் மாமனாகிய எத்திராவின் ஆலோசனையின்படி செய்தான் (யாத்.18:17-27) என்பதை சிந்தியுங்கள்.

கிறிஸ்துவை காண்பியுங்கள்; அறிவியுங்கள்!

கிறிஸ்தவரல்லாதவர்கள் நம்மிடம் சரியாய் நடந்துகொள்ளாததை காரணமாக சொல்லி நாமும் அவர்களுக்கு விரோதமாய் நடந்துகொள்ளக்கூடாது. நாம் ஆராதிக்கிற தேவனை நாம் எப்பொழுதும் காண்பிக்கிறவர்களாயிருக்க வேண்டும். கர்த்தரை நம்பி நன்மை செய்யுங்கள் (சங். 37:3). வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அன்புடன், பொறுமையுடன் கிறிஸ்துவை அறிவிக்கிறவர்களாய் (2 தீமோ.4:2,5) இருக்கவேண்டும்.

கிறிஸ்தவர்களாகிய நாம் இவ்வுலகில் இருந்தாலும், நாம் இவ்வுலகத்திற்குரியவர்கள் அல்ல (யோவா.17:16); நாம் பரலோக இராஜ்யத்தின் குடிமக்கள் (பிலி.3:20). இங்கு வாழ்கிற நாட்களில், கிறிஸ்துவை நம் வாழ்வில் அனுபவிக்கிறவர்களாயும், அவரை கிறிஸ்தவரல்லாதோருக்கு அறிவிப்பதும் நம்மேல் விழுந்த கடமையாகும் (ரோமர் 1:14). நாம் அன்பின் செய்தியை அன்பில்லாமல் அறிவிக்கமுடியாது. எனவே, கிறிஸ்தவரல்லாதோரை வேதத்தின் அடிப்படையில் புரிந்துகொண்டு, அவர்களோடு நட்புறவு கொண்டு, நற்செய்தியை அறிவிக்க (யூதா.22-23) தேவன் நமக்கு கிருபை செய்வாராக!

mm

Written by 

அகஸ்டின் ஆறுமுகம் அவர்கள் ஓசூர் வேதாகம திருச்சபையில் இணை-போதகராக பணிபுரிந்து வருகிறார். தேவனுடைய கிருபையின் சத்தியத்தித்தை வேதாகமத்தின் வரிசை கிரமத்தை பின்பற்றி போதிப்பதன் மூலமாகவே விசுவாசிகளை கிறிஸ்தவ பக்குவத்திற்க்குள் நடத்தமுடியும் என்பதை உறுதியாக நம்பும் இவர் இதைக்குறித்த ஆராய்ச்சி படிப்பும் முடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *