கிறிஸ்தவ ஆன்மீகம் ஆவிக்குரிய வாழ்வு

எழுதியவர்: போதகர். அகஸ்டின் ஆறுமுகம்

கிறிஸ்துவுக்குள் இருக்கும் எந்த ஓர் விசுவாசியும் ஆண்டவரால் மாற்றப்பட்ட ஓர் புது சிருஷ்டியாய் இருக்கிறான் (2 கொரி.5:17). நாம் இந்த உலகத்தில் காண்கிற, புரிந்து கொள்கிற, நடைமுறைப்படுத்துகிற அனைத்தும் வேதத்தின் பார்வையில் இருக்க வேண்டியது அவசியமாகும். இன்றைக்கு கிறிஸ்தவ உலகில் ஆவிக்குரிய வாழ்வைக் குறித்து அனேக தவறான புரிந்து கொள்தல் இருக்கிறது. புற மார்க்கத்தின் சாயலும் அதின் செயல்பாடுகளும் கிறிஸ்தவ ஆவிக்குரிய வாழ்வின் செயல்பாடுகளில் கலந்திருக்கிறது. வேதாகமத்தின் அடிப்படையிலான புரிந்து கொள்தல் இல்லாததினால் அனேக புறமார்க்க சிந்தாந்தங்கள் கிறிஸ்தவர்களின் வாழ்வின் அங்கமாகியிருக்கிறது. எனவே, நாம் வேதாகமத்தின் பார்வையில் ஆவிக்குரிய வாழ்வு என்பது என்ன என்பதையும், அதின் அடிப்படையில் நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்வோம்.

ஓர் மேன்மையான உறவு

கிறிஸ்தவம் ஓர் மதமல்ல; சடங்காச்சாரங்களை உள்ளடக்கிய ஓர் சம்பிரதாயமல்ல; அது ஒரு உறவு.

படைத்த திரியேக தேவனோடுள்ள உறவு

உலகில் உள்ள எந்த ஓர் மதமும் கடவுளோடு மனிதன் உறவுள்ளவனாய் இருக்க முடியும் என கூறவில்லை. ஆனால், கிறிஸ்தவம் அகிலத்தையும் படைத்த திரியேக தேவனோடு நாம் ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய உறவைப்பற்றி பேசுகிறது. ஆண்டவர் மனிதனைப் படைத்து, பகல் நேரத்தில் அவனோடு உலாவினதாக வாசிக்கிறோம் (ஆதி. 3:8). மனிதன் பாவத்தினால் தேவனை விட்டுப் பிரிந்த பின்பும் அவன் தன்னோடு நெருங்கிச் சேர வேண்டும் என விருப்பமுடையவராகவே இருந்தார். ஏனோக்கு தேவனோடு நடந்தான்; சஞ்சரித்தான் என்பதாக ஆண்டவரோடு கொண்டிருந்த உறவை வேதாகமம் விவரிக்கிறது (ஆதி.5:24). மனுக்குலத்தின் ஒவ்வொரு செயலையும், சிந்தையையும், ஆண்டவர் தாம் கொண்ட உறவின் அடிப்படையிலேயே ஏற்கவும், வெறுக்கவும் செய்தார் என்பதை நாம் அறியமுடிகிறது (ஏசா.1:3). இஸ்ரவேலரை தம் உன்னத கிருபையால் தெரிந்து கொண்டு, உள்ளன்போடு அழைத்து, உண்மையாய் நடத்தி, உரிமையோடு கண்டித்து, உத்தமமாய் வாழ ஊக்குவிக்கிற காரியம் தேவன் தம் ஜனங்களோடு உறவு பாராட்ட விரும்புவதை விவரிக்கிறது. “ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில்…..அன்புகூறுவாயாக” (உபா.6:5;7:8;10:12,15;11:1,13,22) என்ற அறைகூவலே ஆண்டவருடைய உள்ளத்தை தெளிவுபடுத்துகிறது. இருதய உணர்வோடு இசைந்திருக்காத எந்த ஒரு சடங்காச்சாரத்தையும் வேதாகமத்தின் தேவன் வெறுக்கிறார் (ஏசா.1:10-19). ஏனெனில், அவர் உயிருள்ள, உணர்வுள்ள, உள்ளன்புள்ள ஓர் தகப்பனாக தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார் (மல்கி.1:6).

இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற எவரும் ஆண்டவருடைய புத்திரராகும்படியான அதிகாரத்தையும், சிலாக்கியத்தையும் பெறுகிறார்கள். இந்த மேன்மையான உறவை கிறிஸ்துவின் மூலம் பெற்று அனுபவியாத எவரும் கிறிஸ்தவ ஆவிக்குரிய வாழ்வில் அடியெடுத்து வைக்காதவர்கள்.

பாவத்தினால் மனிதன் இழந்து போன தேவ உறவை திரும்பவும் புதுப்பிக்கவும், படைத்த தேவனோடு பரிசுத்த உறவுடன் வாழும்படியான மேன்மையை உண்டாக்கவும் தம் சொந்த குமாரனை கல்வாரிச் சிலுவையில் தியாக பலியாக கொடுத்தார்(ரோமர் 5:8). அவரை விசுவாசிக்கிற எவரும் ஆண்டவருடைய புத்திரராகும்படியான அதிகாரத்தையும் (யோவா.1:12), சிலாக்கியத்தையும் (ரோமர் 8:14-15) பெறுகிறார்கள். இந்த மேன்மையான உறவை கிறிஸ்துவின் மூலம் பெற்று அனுபவியாத எவரும் கிறிஸ்தவ ஆவிக்குரிய வாழ்வில் அடியெடுத்து வைக்காதவர்கள்.

இன்றைக்கு அனேக கிறிஸ்தவர்கள் இந்த மேன்மையான உறவை கிறிஸ்துவில் ஆரம்பித்த பின்பும் கூட, ஓர் உறவின் அடிப்படையிலான கிறிஸ்தவ வாழ்வு வாழாமல், சடங்காச்சாரங்களை மையப்படுத்தி புறமார்க்கம் சார்ந்த கிறிஸ்தவ வாழ்வு வாழ்கிறார்கள். புறமார்க்கத்தார் கடவுளை எந்த சுய நோக்கத்தோடும், இவ்வுலக சிந்தையோடும் தேடுகிறார்களோ, அவ்வாறே இவர்களும் தேடுகிறார்கள். கிறிஸ்தவ வாழ்வின் எந்த ஒரு செயலும் இந்த உறவை மையமாகக் கொண்டே இயங்கவேண்டும். எவ்வளவு மேன்மையான தேவன், எவ்வளவு கீழான நிலையில் இருந்த, இருக்கிற நம்மோடு, எவ்வளவு கிருபையாய் செயல்பட்டு, கிறிஸ்துவுக்குள் எவ்வளவு மேன்மையான நிலையில் வைத்திருக்கிறார் என்பதை கிறிஸ்தவம் அறியவில்லை. அதினால்தான் இன்றைய கிறிஸ்தவம் சடங்காச்சாரத்தால் நிரம்பியதாய், சாரமற்றதாய் இருக்கிறது. நாம் எந்த அளவிற்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய அறிவிலும், அவருடைய கிருபையிலும் வளர்கிறோமோ (2 பேதுரு 3:18), அவ்வளவாய் இந்த மேன்மையான உறவில் நெருக்கமாய் பெருகுகிறவர்களாய் இருப்போம். திரியேக தேவனோடு கொண்டுள்ள இந்த உறவின் அடிப்படையிலேயே கிறிஸ்த வாழ்வின் அனைத்து செயல்பாடுகளும் அமைந்திருக்க வேண்டும்.

படைக்கப்பட்ட மனிதரோடுள்ள அன்பு

கிறிஸ்தவ ஆவிக்குரிய வாழ்வு, “நானும் – என் ஆண்டவரும்” என்பதில் ஆரம்பித்தாலும், “நானும் – என் ஆண்டவரின் மக்களும் மற்றும் “நானும் – என் ஆண்டவரை அறியாதவர்களும்” என்பதாக விரிவடைய வேண்டும். புற மார்க்கங்களில் ஆண்டவரோடு நெருங்கிச் சேர்கிற நபர், இந்த உலகத்தின் உறவினர்கள், மக்கள் போன்றவர்களிடமிருந்து தங்களை பிரித்துக் கொள்கிறார்கள் (சந்நியாசம்). ஆனால், கிறிஸ்தவ வாழ்வில், நாம் ஆண்டவரோடு நெருங்கிச் சேரும்போது, மற்றவர்கள் மேல் வைக்கிற அன்பிலும், உறவிலும் பெருகுகிறவர்களாய் இருக்கிறோம். தேவனிடத்தில் அன்புகூற வேண்டும் என்பதற்கு ஒப்பான, இணையான பிரதான கற்பனை, நாம் பிறரிடத்தில் அன்பு கூற வேண்டும் என்பதுமாகும் (மத்.22:36-40). இயேசு புதிதான கற்பனையாக ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூறுங்கள் என்ற கற்பனையையே கொடுத்தார் (யோவா.13:34). தான் காண்கிற சகோதரரிடத்தில் அன்பு கூறாத ஓர் நபர், தான் காணாத தேவனிடத்தில் அன்பு கூறுகிறேன் என கூறினால் அவர் பொய் சொல்வதாக யோவான் குறிப்பிடுகிறார் (1 யோவா.4:20). கிறிஸ்துவின் மூலமாக ஆண்டவரை அறிந்து, அன்பு கூறுகிற நபர், அந்த கிறிஸ்துவின் அன்பினால் மற்றவர்களை நேசிப்பவராக இருப்பார்.

ஓர் மேன்மையான வாழ்வு

இரண்டாவதாக, கிறிஸ்தவ ஆவிக்குரிய வாழ்வு தீமையை வெறுத்து, நன்மையை சினேகிக்கிற ஓர் மேன்மையான வாழ்வாகும்.

தீமையை வெறுத்தல்

தீமையை வெறுத்தலே கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் (நீதி.8:13) என வேதம் கூறுகிறது. தேவ அன்பை தங்கள் வாழ்வில் உணர்ந்து, அவரோடுள்ள உறவில் வளருகிற எவரும், ஆண்டவருக்குப் பிரியமில்லாத தீமையை வெறுக்கிறவர்களாய் இருப்பார்கள். எகிப்தில் யோசேப்பு போர்த்திபாரின் மனைவியின் தீய வலையில் விழாமல் தீமையை வெறுத்தது இதற்கு ஓர் நல்ல உதாரணமாகும். தீமையாய் மற்றும் பொல்லாங்காய் தெரிகிற எல்லாவற்றையும் விட்டு விலகும்படியான வாழ்வே உண்மையான ஆவிக்குரிய வாழ்வாகும் (1 தெச.5:22). கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள் என ஞானி குறிப்பிடுகிறார் (நீதி.16:6). கிறிஸ்துவுக்குள் இருக்கிற எந்த ஒரு நபரும் தீமையான, பாவமான காரியங்களில் திளைத்திருக்க முடியாது (1 யோவா. 1:5-8).

நன்மையை சினேகித்தல்

எந்த ஓர் உண்மை விசுவாசியும், தன்னிடத்தில் நன்மை செய்கிற விருப்பத்தையும், ஆனால், அந்த விருப்பத்தின்படி செய்ய முடியாத தீமையும் தன்னில் இருப்பதை உணர்வான். நன்மை செய்கிற, அதனை விரும்புகிற காரியத்தை ஒவ்வொரு விசுவாசியும் ஆண்டவரால் பெற்றவர்களாய் இருக்கிறான். ஆனாலும், ஆண்டவருக்கு பிரியமான நல்ல காரியத்தை தன சொந்த முயற்சியால் செய்ய விரும்புகிறான். அவ்வாறு அவன் செய்ய முற்படும்போது, தன்னிடத்தில் அதை செயல்படுத்தும்படியான நன்மை வாசமாய் இல்லை என்கிற நிர்பந்தமான நிலையை அறிகிறான். அதினிமித்தம், நன்மை செய்கிற விருப்பத்தை மாத்திரமல்ல, அதின் செயலையும் நம்மிலும், நம் மூலமாகவும் ஆண்டவரே நிறைவேற்றுகிறார் என்ற சத்தியத்தை புரிந்து கொண்டு அவரை சார்ந்து கொள்கிறவனாய் மாறுகிறான் (ரோமர்.7:19-25). இவ்வாறு ஆண்டவரே தான் தேட வேண்டிய நன்மை என அறிந்து அவரை சிநேகிக்கிற வனாய் மாறுகிறான். இத்தகைய மேன்மையானதாய் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு இருக்கிறது.

ஓர் மேன்மையான வாஞ்சை

இந்த உலக மதங்களைப்போல் ஜனங்கள் தங்கள் தேவைகளும், விருப்பங்களும் சந்திக்கப்படும்படி கடவுளை தேடி வருவது கிறிஸ்தவ வாழ்வு அல்ல; மாறாக, ஆண்டவரோடு கொண்டிருக்கிற உறவினிமித்தம் அவரை அறியவும், அறிவிக்கவும் வாஞ்சையுள்ளவர்களாய் ஜீவிப்பதாகும்.

தன்னை படைத்த ஆண்டவரை அதிக அதிகமாய் அறிவதே உண்மையான கிறிஸ்தவ ஆவிக்குரிய வாழ்வு. என் ஜனங்கள் என்னை அறியவில்லை என்பதே ஆண்டவருடைய அங்கலாய்ப்பாகும்.

ஆண்டவரை அறிதல்

தன்னை படைத்த ஆண்டவரை அதிக அதிகமாய் அறிவதே உண்மையான கிறிஸ்தவ ஆவிக்குரிய வாழ்வு. என் ஜனங்கள் என்னை அறியவில்லை (ஏசா.1:3) என்பதே ஆண்டவருடைய அங்கலாய்ப்பாகும். நாம் அவரை அறிய வேண்டும் என்பதற்காகவே ஆண்டவர் தம்மை நமக்கு வேதத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். தங்கள் ஆண்டவரை அறியத்தக்க விதத்தில் அறியாததே இன்றைய கிறிஸ்தவர்களின் பரிதாபமான வாழ்விற்கு முக்கிய காரணமாகும் (ஓசியா 4:6). அப்போஸ்தலனாகிய பவுலும், “அவரை அறிகிற அறிவின் மேன்மைக்காக” எல்லாவற்றையும் குப்பையாக எண்ணுகிறேன் எனக் குறிப்பிடுகிறார் (பிலி.3:8). ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைப் பற்றிய அறிவிலும், அவருடைய கிருபையிலும் வளர்ந்து, கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக மாற வேண்டும் என்ற வாஞ்சையால் நிரப்பப்படுகிற அனுபவமே ஆவிக்குரிய வாழ்வுக்கு அஸ்திபாரமாகும்.

ஆண்டவரை அறிவித்தல்

கிறிஸ்துவை அறிந்து அனுபவிக்கிற எவரும், அவருடைய அன்பால் நிரப்பப்பட்டவர்களாய், உந்தித்தள்ளப்பட்டவர்களாய் (2 கொரி.5:14) அவரை அறிவிக்கிற ஓர் மேன்மையான வாஞ்சையுடையவராய் இருப்பது கிறிஸ்தவ வாழ்வாகும். நம்மை அந்தகார இருளிலிருந்து ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படி ஒவ்வொரு விசுவாசியும் தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறோம் (1 பேதுரு 2:9). கிறிஸ்துவை மற்றவர்களிடம் அறிவித்தலும் கூட கட்டாயத்தினாலோ, ஏதோ ஓர் சரீர ஆசிவாதங்களைப் பெறும்படியான ஆதாய நோக்கத்திற்காகவோ செய்யப்படுவது அல்ல; மாறாக, கிறிஸ்துவினிமித்தம் மற்றவர்களுக்கு பணிசெய்கிற வேலையாட்களாய் மாற்றிக்கொள்கிற ஓர் அர்ப்பணிப்பாகும் (2 கொரி. 4:5).

ஓர் மேன்மையான நோக்கம்

உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையானது ஆண்டவரை மகிமைப்படுத்தும்படி வாழ்வதையும், ஆவிக்குரிய கனியை வாழ்வில் வெளிப்படுத்துவதையும் தங்கள் நோக்கமாக கொண்டிருக்கிற வாழ்வாகும்.

ஆண்டவரை மகிமைப்படுத்தல்

ஆண்டவர் எல்லாவற்றையும் தம் நாம மகிமைக்காகவே படைத்திருக்கிறார். கிறிஸ்துவை தன் ஆண்டவராக, இரட்சகராக அறிந்திருக்கிற விசுவாசி ஆண்டவரை மகிமைப்படுத்தும்படி எல்லாவற்றையும் செய்கிறவனாய் இருப்பான் (1கொரி.10:31). மனிதரைப் பிரியப்படுத்துகிற காரியங்களை செய்கிறவனாய் இராமல், ஆண்டவரை மாத்திரமே பிரியப்படுத்த வேண்டும் (கலா.1:10) என்பதே அவனுடைய ஒரே நோக்கமாக இருக்கும்.

ஆவியின் கனியை வெளிப்படுத்தல்

ஒவ்வொரு நாளும் ஆவியின் கனியை தன் வாழ்வில் காண்பிக்கிற, ஒரு வேறுபட்ட வாழ்வு வாழ்வதாகும். ஆவியின் கனியை வெளிப்படுத்தல் என்பது கிறிஸ்துவின் சுபாவத்தை தன் வாழ்விலும், அவருடைய ஞானத்தை தன் சிந்தை மற்றும் செயல்களிலும் காண்பிக்கிறதாய் இருக்கிறது. கிறிஸ்துவுக்குள் இருக்கிற விசுவாசி ஒரு புது சிருஷ்டியாக இருக்கிறபடியால் (2 கொரி.5:17), தன் புது வாழ்வை வெளிப்படுத்துகிறவனாய் இருக்கிறான்.

ஓர் மேன்மையான எதிர்பார்ப்பு

கடைசியாக, கிறிஸ்தவ ஆவிக்குரிய வாழ்வு என்பது ஆண்டவரோடு நித்தியமாய் வாழ்வோம் என்கிற ஓர் மேன்மையான எதிர்பார்ப்பாகும்.

நித்திய வாழ்வு

நித்திய நம்பிக்கை அற்ற கிறிஸ்தவம் பரிதாபத்திற்குரியது (1 கொரி.15:19). நித்திய நம்பிக்கையின் நிச்சயமே கிறிஸ்தவ செய்தியின் அஸ்திபாரமாகும். கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்திருக்கிறபடியால், சரீரத்தில் நாம் மரித்தாலும், ஒருநாளில் எழுந்திருப்போம் என்கின்ற நம்பிக்கையே கிறிஸ்தவ மெய் வாழ்க்கையையும், அதற்காக நாம் படுகிற பாடுகள் மற்றும் பிரயாசங்களையும் அர்த்தமுள்ளதாக்குகிறது (1 பேதுரு 1:5-9). இந்த உலகத்திற்கடுத்த ஆசிர்வாதங்களையே மையப்படுத்துகிறவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்கு பகைஞர்களாய் இருக்கிறார்கள் (பிலி.3:18) உண்மைக் கிறிஸ்தவம் தங்கள் எதிர்பார்ப்பை நித்திய நம்பிக்கையில் பதித்திருக்கும்.

தேவ அங்கீகாரம்

எல்லாவற்றிற்கும் மேலாக, தேவனால் தன் வாழ்வும், பணியும் அங்கீகரிக்கப்பட்டு, ஆண்டவரை சந்திக்கிற அந்நாளில் அவரால் பாராட்டப்பட வேண்டும் என்கிற தணியாத தாகமும், எதிர்பார்ப்பும் நிறைந்த வாழ்வாகும். ஆவிக்குரிய வாழ்வின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆண்டவராகவே இருக்கிறார் என்பதை அறிந்து வாழ்வதே உண்மையான ஆவிக்குரிய வாழ்வாகும்.

கிறிஸ்தவ வாழ்வு என்பது கிறிஸ்துவின் உதவியைக் கொண்டு நாம் நம் வாழ்வை வாழ்வதல்ல; மாறாக, கிறிஸ்து தமது வாழ்வை நம் மூலம் வாழ்வதாகும். கிறிஸ்தவ வாழ்வு கிறிஸ்துவால் மாத்திரமே வாழப்பட முடியும். அதனை உணராமல் தங்கள் சொந்த பெலத்தில் வாழ முயற்சிக்கிற எவரும் மாய்மாலமாய் வாழ்கிறவர்களாகவோ அல்லது தங்கள் பிரயாசத்தில் விரக்தியடைந்தவர்களாகவோ மாறிப்போவார்கள். ஆண்டவரே விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமாய் இருக்கிறார் (எபி.12:1). கிறிஸ்துவை விசுவாசிக்கும்படி நம்மை வழிநடத்துகிற ஆண்டவர் தாமே நாம் கிறிஸ்துவை இறுதிவரை பின்பற்றவும், அவரை பிரதிபலிக்கவும் நம்மைப் பெலப்படுத்துகிறவராய் இருக்கிறார். கிறிஸ்து சிலுவையில் மரித்து, உயிர்த்ததை விசுவாசித்ததால் நாம் இரட்சிக்கப்பட்டதைப் போலவே, கிறிஸ்துவோடு கூட நாம் மரித்து, அவரோடு கூட உயிர்ப்பிக்கப்பட்டதை விசுவாசிக்கிற போது, நாம் பரிசுத்தத்தில் வளருகிறோம்(ரோமர் 6:1-11). கிறிஸ்து நமக்காக செய்து முடித்ததை நம்பி நாம் அவரைச் சார்ந்து கொள்ளும்போது, பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவின் சாயலை நம்மில் உருவாக்குகிறார் (2 கொரி.3:18). நாம் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்கிறவர்களாய் மாறுகிறோம். “என்னாலேயன்றி உங்களால் ஒன்றும் செய்ய முடியாது” (யோவா.15:5) என இயேசு சொன்னதை நினைவில் கொள்வோம்.

mm

Written by 

அகஸ்டின் ஆறுமுகம் அவர்கள் ஓசூர் வேதாகம திருச்சபையில் இணை-போதகராக பணிபுரிந்து வருகிறார். தேவனுடைய கிருபையின் சத்தியத்தித்தை வேதாகமத்தின் வரிசை கிரமத்தை பின்பற்றி போதிப்பதன் மூலமாகவே விசுவாசிகளை கிறிஸ்தவ பக்குவத்திற்க்குள் நடத்தமுடியும் என்பதை உறுதியாக நம்பும் இவர் இதைக்குறித்த ஆராய்ச்சி படிப்பும் முடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *