ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு உங்களை விற்றுப்போடாதீர்கள்!

ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்

செழிப்பின் உபதேசம் என்னும் புரட்டுப் போதனை இன்று பல்வேறு வடிவங்களில் வலம் வருகின்றது. தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ளும் பலர் இந்த பொய்யை நம்பிக்கொண்டுதான் தங்கள் வாழ்வை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். எளிமையாக செழிப்பின் உபதேசம் சொல்வது இதுதான்: இயேசுவை நீங்கள் நம்பினால் உங்களுக்கு செல்வச் செழிப்பும் ஆரோக்கியமும் நிச்சயமாகக் கிடைக்கும். இந்த புரட்டுப் போதனையில் பல வகையும் வடிவங்களும் உண்டு. நீங்கள் நம்பிக்கையோடு வேண்டிக்கொள்ளும் எதையும் கடவுள் நிச்சயமாகத் தருவார், நீங்கள் கேட்பதைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றால் உங்களுக்கு போதிய அளவு நம்பிக்கை இல்லை, உபவாசம் இருந்து விண்ணப்பிக்கும்போது நமது விண்ணப்பத்திற்கு பவர் அதிகம், கடவுளை சதா ஆயிரம், இரண்டாயிரம், பத்தாயிரம் எண்ணிக்கைகளில் ஸ்தோத்திரங்கள் செய்து கொண்டிருந்தால் இந்த செழிப்பை நமக்கு நிச்சயமாகத் தருவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை, கடவுள் தீர்க்கதரிசனங்கள் மற்றும் கனவுகள் மூலமாகவே இப்படிப்பட்ட வெளிப்பாடுகளை நமக்குக் கொடுக்கிறார் என்று இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படிப்பட்ட அனைத்து புரட்டுப் போதனைகளுக்கும் பெருங்கூட்டங்களுக்கு நற்செய்தி அறிவிக்கப் போவதாக தங்களைத் தாங்களே அறிவித்துக்கொண்ட பிரசங்கிகளும் இன்று தொலைக்காட்சியில் தோன்றி வேதாகமத்தைக் கைகளில் வைத்துக்கொண்டு மனம்போல் மக்களை ஏமாற்றுகிற புரட்டுப் போதகர்களும் பெருமளவு காரணமாயிருக்கிறார்கள்.

முட்டாள் பெட்டி

தொலைக்காட்சி என்பது முட்டாள் பெட்டி என்று அழைக்கப்படுவது எவ்வளவு உண்மையோ அப்படியே கிறிஸ்தவத்தைக் குறித்த தங்கள் அறிவை இந்த முட்டாள் பெட்டியின் மூலம் பெற்றுக்கொள்ள நினைக்கிறவர்களும் முட்டாள்தனமான கிறிஸ்தவத்தையே பின்பற்றுகிறார்கள். இப்படிக் கூறும்போது அவர்கள் சினமடையக்கூடும். அடுத்தவரை முட்டாள் என்று சொல்வது தவறு. மற்ற ஊழியக்காரர்களை குறை சொல்வது தவறு. மற்றவர்களை நியாயந்தீர்ப்பது தவறு என்று தங்கள் வாதங்களை முன்வைக்கும் அளவுக்கு தங்கள் ஏமாற்று நிலையில் அவர்கள் இறுமாந்திருக்கிறார்கள். அவர்கள் வேதாகமத்தை இது தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதில்லை. வேதாகமத்தில் பேசப்பட்டிருக்கும் அடிப்படை போதனைகளை மறுதலிக்கும் விதமான தங்கள் சொந்த அனுபவங்களையும் புரட்டுப் போதகர்களின் கதைகளையும் நம்பும் அளவுக்கு இறைவனுடைய வழுவற்ற வார்த்தையாகிய வேதாகமத்தை இவர்கள் நம்புவதில்லை. ஆனால் வேதாகமத்தின் வசனங்களை தங்களுடைய தவறான நம்பிக்கைகளை உறுதிப்படுத்தும்படி இவர்கள் அங்கொன்றும் இங்கொன்றும் இருந்து தெரிவு செய்து பயன்படுத்துகிறார்கள்.

கிறிஸ்தவத்தைக் குறித்த தங்கள் அறிவை முட்டாள் பெட்டியின் (TV) மூலம் பெற்றுக்கொள்ள நினைக்கிறவர்களும் முட்டாள்தனமான கிறிஸ்தவத்தையே பின்பற்றுகிறார்கள்

இறைவாக்கின் எச்சரிக்கை

மத்தேயு 7:1-ஐ மேற்கோள்காட்டி நாம் மற்ற ஊழியர்களை நியாயந்தீர்க்கக்கூடாது என்பார்கள். ஆனால் அதே அதிகாரம் 15-ம் வசனத்தில் ஆட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு வரும் உள்ளத்தில் கொடிய ஓநாய்களாகிய கள்ளத் தீர்க்கதரிசிகளைக் குறித்து எச்சரிக்கப்பட்டிருப்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். போலித் தீர்க்கதரிசிகளைக் குறித்த எச்சரிக்கை மோசேயின் காலத்தில் இருந்து கொடுக்கப்படுவதை நாம் கவனிக்கிறோம் (உபா. 13:1-5). போலித் தீர்க்கதரிசிகள் அற்புத அடையாளங்களைச் செய்தாலும் அவர்களை நம்பக்கூடாது என்றும் அப்படி இஸ்ரவேல் மக்களை உண்மைக் கடவுளின் நம்பிக்கையில் இருந்து தவறான கடவுள் நம்பிக்கைக்கு நடத்தும் அந்த தீர்க்கதரிசிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் தெளிவான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இன்றும் பல தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் மக்களை ஏமாற்றும் பிரசங்கிகள் உண்மைக் கடவுளின் நம்பிக்கையில் இருந்து மக்களை திசை திருப்பி போலியான நம்பிக்கைக்கு நடத்துகிறார்கள். மைக்கேல் ஹார்டன் சொல்வதைப் போல, “மனித வாழ்வின் நோக்கம் கடவுளை மகிமைப்படுத்தி அவரை அனுபவித்து வாழ்வது என்பதற்கு பதிலாக கடவுளை பயன்படுத்தி நம்மை நாமே அனுபவித்து வாழ்வது” என்றாகிவிட்டது. என்னுடைய விருப்பம்போல நான் வாழ்வதற்கு உதவும் வேலைக்காரராகவே கடவுள் சித்தரிக்கப்படுகிறார்.

இப்படிப்பட்ட தவறான போதனைகள் அப்போஸ்தலனாகிய பவுல் போதித்த திருச்சபையில் இருந்தே எதிர்காலத்தில் வரும் என்று அவர் எபேசு திருச்சபைக்கு எச்சரிக்கிறார் (அப். 20:26-31). அந்த போலிப் போதகர்களை பவுல் கொடிய ஓநாய்கள் என்று குறிப்பிடுகிறார். பிலிப்பு திருச்சபையில் போலியான உபதேசத்தை போதிப்பவர்களை நாய்கள் என்றும் சுன்னத்துக்காரர் என்றும் அழைக்கிறார் (பிலி. 3:2). போலி போதகர்களைக் குறித்து மட்டுமல்ல தங்கள் தீய ஆசைகளை நிறைவேற்றும்படி அப்படிப்பட்ட போலி போதகர்களை தங்களுக்கு அதிக எண்ணிக்கையில் ஏற்படுத்திக் கொள்ளும் அளவுக்கு மக்களும் இறுதிக் காலத்தில் கெட்டுப் போவார்கள் என்றும் பவுல் எச்சரிக்கிறார் (2 தீமோ. 4:3-5). அவர்கள் உண்மையைவிட கட்டுக்கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். வேதாகமத்தின் போதனைகளைவிடவும் தங்கள் கனவுகளுக்கும் தரிசனங்களுக்கும் அனுபவ சாட்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மக்களைப் பற்றி பவுல் இங்கு பேசுகிறார். அவர்கள் மனத் தெளிவில்லாதவர்களாகவும் சுகபோக கிறிஸ்தவத்தைப் பின்பற்றுகிறவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் மெய்க் கிறிஸ்தவர்கள் கடவுளுக்காக எப்போதும் தீங்கனுபவிக்க வேண்டியவர்களாக தொடர்ந்து போராடும்படி அழைக்ககப்பட்டிருக்கிறார்கள்.

மெய்க் கிறிஸ்தவர்கள் கடவுளுக்காக எப்போதும் தீங்கனுபவிக்க வேண்டியவர்களாக தொடர்ந்து போராடும்படி அழைக்ககப்பட்டு இருக்கிறார்கள்

யோவான் தன்னுடைய காலத்திலேயே பல பொய்த் தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள் என்றும் அவர்களை விட்டு விலகியிருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கிறார் (1 யோவான் 4:1). தன்னுடைய திருவெளிப்பாட்டில் எபேசு சபை போலிப் போதகர்களை அடையாளம் காண்பதற்கான அதை மெச்சும் இயேசு தியத்தீரா சபை போலிப் போதகர்களினால் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று அதைக் கடிந்துகொள்வதாக காண்பிக்கிறார் (வெளி. 2:2, 20).

பேதுரு தன்னுடைய இரண்டாம் கடிதத்தில் கள்ளத் தீர்க்கதரிசிகளைக் குறித்து கடுமையாக எச்சரிப்பதோடு எல்லாக் காலத்திலும் கடவுளுடைய கோபத்திற்கும் நியாயத்தீர்ப்புக்கும் அவர்கள் உரியவர்கள் என்றும் அவர்களால் கடவுளின் மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்றும் அவர்கள் கெட்ட நடத்தை உள்ளவர்கள், பொருளாசையுள்ளவர்கள், பொய்யர்கள் என்றும் இரண்டாம் அதிகாரத்தில் விளக்கமாக கடிந்துகொள்கிறார். பவுல் குறிப்பிடுவதைப் போல இவர்கள் தேவ பக்தியின் தோற்றத்தை உடையவர்களாக இருந்தாலும் அவர்கள் வாழ்வின் உண்மையான கடவுள் பயம் இருக்காது (2 தீமோ. 3:5). அவர்கள் மக்களின் காணிக்கைகளைக் குறிவைத்து பொய்களையும் போலி ஆசீர்வாதங்களையும் வாக்குரைக்கும் வஞ்சகர்களாகவே இன்று தொலைக்காட்சியில் தோன்றுகிறார்கள். தங்களுக்கு காணிக்கை வேண்டும் என்ற சுயநலத்தில் இயேசுவையும் நற்செய்தியையும் இந்த கள்ளப் போதகர்கள் பயன்படுத்துகிறார்கள். தங்கள் சுயநல ஆசைகளையும் இச்சைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று பலரும் எப்போதும் கற்றுக்கொண்டாலும் சத்தியத்தை உணராதிருக்கிற பெண்கள் பலரும் (2 தீமோ. 3:7) இந்த போலி உபதேசங்களுக்கு இழுப்புண்டு போகிறார்கள். இவர்கள் ஹார்டன் குறிப்பிடுவதைப் போல “பாவிகளுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதில்லை” மாறாக “வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விரும்பும் பொருளாக இயேசு விற்பனை செய்யப்படுகிறார்”.

நம்பிக்கையே வாழ்க்கை

உங்கள் நம்பிக்கைகள் எதுவோ அப்படிப்பட்டதாகவே உங்கள் வாழ்க்கை இருக்கும். வேதாகமம் சுயத்தை வெறுத்து சிலுவை சுமக்கும் நற்செய்திக்கான அழைப்பை விடுக்கிறது. செழிப்பின் போதனை சுய இச்சைகளையும் எண்ணங்களையும் நிறைவேற்ற இயேசுவையும் வேதாகமத்தையும் பயன்படுத்த நினைக்கிறது. இந்த புரட்டு போதனையை நம்புகிறவர்களுடைய வாழ்விலும் சுயவெறுப்பையும் உண்மை, ஒழுக்கம் போன்ற வாழ்வியல் முறைகளையும் பார்க்க முடியாது. பார்ப்பதற்கு “ஆவிக்குரியவர்களாக” தங்கள் நடவடிக்கைள் மூலம் காண்பித்துக்கொள்ளவார்கள். உண்மையாக கூட மணிக்கணக்கில் விண்ணப்பித்தல் துதி செலுத்துதல் போன்ற காரியங்களில் ஈடுபடுவார்கள். ஆனால் அவர்கள் சாதியம், பெருமை, பொருளாசை, உலக இச்சைகள், அந்தஸ்து, கவுரவம் போன்ற காரியங்களுக்கு அடிமைகளாக இருப்பார்கள். தங்களைத் தாழ்த்தி மற்றவர்களுக்கு பணிசெய்யும் கிறிஸ்துவின் அடிப்படை பண்பை அவர்களிடம் காண இயலாது. மற்றவர்களை வேலை வாங்கவும் துச்சமாக மதிக்கவும் பெற்றோருக்கும் பெரியோருக்கும் உரிய கடமைகளைச் செய்யவும் வேண்டும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. அவர்களுக்கு தங்கள் வாழ்வை மகிழ்ச்சியாவும் ஆசீர்வாதமாகவும் உயர்வாகவும் கடவுள் மாற்ற வேண்டும் என்பதே நோக்கமாக இருக்கும். வேதாகமத்தை கவனமாக பரிசுத்த ஆவியின் துணையோடு கற்றுக்கொள்ளவும் உண்மைகளை அறிந்துகொள்ளவும் இருக்கும் ஆர்வத்தைவிட கனவுகளிலும் அனுபவங்களிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அவர்கள் வாசிக்கும் நூல்கள் கூட வேத உபதேசங்களை விளக்கும் அல்லது வேதாகமத்தைச் சரியாக புரிந்துகொள்ள உதவும் நூல்களாக இருக்காது. இப்படிப்பட்ட அனுபவ, அற்புத சாட்சியின் வாழ்க்கை வரலாறுகள்தான் அவர்களுடைய வாசிப்பின் பொருளாகவும் நேசிப்பின் பொருளாகவும் இருக்கும். இப்படிப்பட்ட போலிக் கிறிஸ்தவத்தில் இருந்து அவர்கள் வெளியே வர கடவுளின் வார்த்தைகளுக்கு அவர்கள் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை.

ஆனால் அனுபவத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கும் மக்கள் அவற்றிலிருந்து வெளியே வருவது கடினமானதுதான். மார்டின் லூத்தர் கூட தன்னுடைய காலத்தில் அற்புத அடையாளங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏமாந்து போகும் மக்களையும் ஏமாற்றும் போலித் தீர்க்கதரிசிகளையும் குறித்து எச்சரித்திருக்கிறார். இன்றும் இந்த எச்சரிப்பின் சத்தம் எப்போதையும்விட அவசியமாக இருக்கிறது.

The Agony of Deceit (Ed. By Michael Horton), Charismatic Chaos (John MacArthur) மற்றும் Healing Edipdemic (Peter Masters) போன்ற ஆங்கில நூல்கள் இப்படிப்பட்ட போலிப் போதனைகளையும் கள்ளத் தீர்க்கதரிசிகளையும் பற்றி பேசுகிறது. இந்த தொலைக்காட்சி கள்ளப் போதகர்களும் நற்செய்திக் கிறிஸ்தவத்தின் மற்ற பிரிவுகளைப் போல தங்கள் மாதிரியையும் உந்துதலையும் அமெரிக்க நாட்டிலிருந்தே பெற்றுக்கொள்கிறார்கள். மேற்கண்ட நூல்களில் முதல் இரண்டும் அமெரிக்க நாட்டிலிருந்த, இருக்கும் தொலைக்காட்சி கள்ளப் போதகர்களின் போதனைகளை வேதாகமத்தின் வெளிச்சத்திலும் பகுத்தறிவின்படியும் ஆய்வு செய்கின்றன. கோர்டன் ஃபீ என்ற பெந்தகொஸ்தே இறையியலாளர் இந்த செழிப்பின் உபதேசம் எப்படி வேதாகமத்தின் போதனைகளுக்கு முரணானது என்பதை சிறிய நூலாக திறம்படி எழுதியிருக்கிறார். அந்த நூலின் தமிழாக்கம் கூடிய விரைவில் கிருபை வெளியீடுகளினால் வெளியிடப்படும்.

இறைமக்கள் இந்த இறுதிக் காலத்தில் இறைவாக்காம் திருவிவிலியத்தின் போதனைகளுக்கு திரும்ப வேண்டும் என்பதற்கான சிறிய ஒரு முயற்சியாக இந்த பதிவு.

mm

Written by 

சகோதரர் சிறிதரன் கலிஸ்டஸ் அவர்கள் மதுரையில் அமைந்திருக்கும் கிருபை நற்செய்தி திருச்சபையின் மூப்பராக இறைப்பணி செய்கிறார். முது நிலை இறையியல் கல்வி கற்றவர். கிருபை வெளியீடுகள் பதிப்பகத்தின் அங்கத்தினரான இவர் பல தரமான ஆங்கில புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *