உண்மையும் போலியும் எச்சரிக்கை!

உண்மையும் போலியும்

உண்மையும் போலியும்…

வேதாகமத்தில் எதையெல்லாம் தேவன் ஏற்படுத்தியிருக்கிறாரோ, அதைப்போலவே போலியான ஒன்றை சாத்தானும் ஏற்படுத்துகிறான் என்பதே உண்மை.

சில உண்மைகளும் போலிகளும்…

 தேவனுடைய பிள்ளைகள் இருப்பதுபோல பொல்லாங்கின் புத்திரர் (மத் 13:38)

 ஆவிக்கேற்றபடி நாம் நடக்கவேண்டும் என்பது போல, ஆகாய அதிகாரபிரபுவின் ஆவிக்கேற்றபடியும் நாம் நடக்கமுடியும் (எபே 2:2)

 தேவபக்தியின் இரகசியம் என ஒன்று இருந்தால் அக்கிரமத்தின் இரகசியமும் இருக்கிறது (2 தெச 2:7)

 1440000 பேர் நெற்றியில் தேவன் முத்திரை இட்டால், மிருகமும் அவனுடையவர்களின் நெற்றியில் முத்திரை இடுவது நிகழ்கிறது (வெளி 7:3)

 தேவனுடைய ஆழங்களை குறித்து 2 கொரி 2:10 வாசித்தால், சாத்தானுடைய ஆழங்களை குறித்து வெளி 2:24ல் வாசிக்கிறோம்.

 தேவனுடைய சிங்காசனத்தை குறித்து பேசும் வேதம், சாத்தானுக்கும் சிங்காசனம் இருப்பதை வெளிப்படுத்துகிறது (வெளி 2:13)

 ஒரே பேறான குமாரன் என்பதற்கு இணையாக கேட்டின் மகனை குறித்து வேதம் சொல்லுகிறது

 உலகத்திற்கு ஒளியாக இயேசு வந்தால், சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தை தரிக்கிறான் (2 கொரி 11:14)

 கிறிஸ்துவின் சபை என்று ஒன்றிருந்தால் சாத்தானின் சபையை குறித்து வேதம் சொல்லுகிறது. (வெளி 2:9) [இந்த வசனத்தில் சாத்தானுடைய கூட்டம் என்ற வார்த்தை ஆங்கிலத்தில் Synagogue or assembly என உள்ளது]

 அன்று இயேசு அப்போஸ்தலர்களை ஏற்படுத்தினார், அதேபோல சாத்தானும் கள்ள அப்போஸ்தலர்களை உருவாக்குகிறான் (2கொரி 11:13)

 தேவனுடைய கிருபை என்ற ஒன்றிருந்தால், பொய்யான கிருபை என்ற ஒன்றையும் சாத்தான் ஏற்படுத்துகிறான் (1 பேது 5:12)

 கிறிஸ்துவை தேவன் அனுப்பினால், அந்திகிறிஸ்துவை சாத்தான் அனுப்புகிறான்

 எல்லாவற்றிலும் மேலாக, இயேசுவும் அவருடைய விசுவாசிகளும் அற்புதங்களும், அடையாளங்களும் செய்வதுபோல, சாத்தானும் அவனுடைய சகாக்களும் அற்புதங்களும் அடையாளங்களும் செய்கிறார்கள். (2 தெச 2:9)

எப்படியெல்லாம் தேவன் செயல்படுகிறாரோ, அதேபோல சாத்தானும் போலியாக செயல்படுகிறான் என்பது வேதாகமத்தில் மிக தெளிவாக எழுதப்பட்டுள்ளது

எச்சரிக்கை!

எப்படியெல்லாம் தேவன் செயல்படுகிறாரோ, அதேபோல சாத்தானும் போலியாக செயல்படுகிறான் என்பது வேதாகமத்தில் மிக தெளிவாக எழுதப்பட்டுள்ளது, இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழும் நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பது புரிகிறதா? கண் முன் நடக்கும் எதையுமே எளிதில் நம்பமுடியாத நிலையில் நாம் இருக்கிறோம், அதனால்தான் இயேசு சொன்னார் இப்படிப்பட்டவர்களை வரங்களினால் அல்ல “கனியினால்” மட்டுமே, நாம் அறியமுடியுமே அல்லாமல் வெறெந்த முறையிலும் நாம் அறியமுடியாது. எப்படிப்பட்ட வரம்பெற்றவர்களாக இருந்தாலும் அவர்களுடைய போதனைகளையும், வாழ்க்கை முறையுமே நமக்கு எளிதாக அவர் யார் என்பதைக் காண்பித்துக் கொடுத்துவிடும்…

எவருடைய அந்தரங்க வாழ்க்கையையும் ஆராய்ந்து பார்த்தால்தானே கனியுள்ள வாழ்க்கை வாழ்கிறாரா, இல்லையா என்பதை அறியமுடியும், ஆனால் பல ஊழியர்களை பார்ப்பதே கடினமாக இருக்கும்போது அவர்களுடைய கனிகள் இதுதான் என்பதை எப்படி அறிவது? என நீங்கள் கேட்கலாம். அந்தரங்க வாழ்க்கையல்ல அவருடை வெளிப்புற நடவடிக்கைகளே போதும்.

உதாரணமாக பணம் காணிக்கை விஷயத்தை எப்போதும் பேசுவதும், விசுவாசிகளை கர்த்தருக்கு முன்பாக பரிசுத்தமாகவும், கிறிஸ்துவைப்போல மாற்றுவதற்கும் பிரயாசப்படாமல், கைதட்டி பாடல் பாடவைக்கவும், காணிக்கை கொடுக்கவைக்கவுமே உற்சாகப்படுத்தும் ஒருவர் நிச்சயம், விசுவாசிகளை தவறாக நடத்துகிறவர் என நிதானிக்கமுடியும். அற்புதங்கள் நடந்தாலும் அதை தன் வல்லமையால் நடந்ததாக மறைமுகமாக விசுவாசிகளை தன்பால் இழுத்துக்கொள்ளுபவரும், விசுவாசிகளை தேவனிடத்தில் நேரடியாக ஜெபிக்கவைக்க ஊக்குவிக்காமல் தன் மூலமாகவே தேவனை தொடர்பு கொள்ளவைக்க பிரயாசப்படுபவரும், நிச்சயம் தேவனுடைய வேலையாளாக இருக்கமுடியாது. விசுவாசத்தால் தேவனை சார்ந்துகொள்ளாமல், எப்போதும் அரசியல்வாதிகளையும், பிரபலமானவர்களையும் நம்பி செயல்படுபவர்கள் உண்மையான வேலையாட்கள் அல்ல.

இந்த நடவடிக்கைகள் எல்லாம் ஒரு உதாரணங்களே! இவைகளும் ஒருவிதமான மாம்சீகக் கனிகளே! தேவனுடைய சுபாவம் இல்லாத இடங்களில் இப்படி மாம்சீக சுபாவம் எளிதாக வெளிப்பட்டுவிடும், இதன் மூலம் அவர் எந்த உபதேசத்தை உபதேசித்தாலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

ஆனால் இந்த எச்சரிக்கைகள் எல்லாம் விசுவாசிகளுக்கு பெரிதாக படவில்லை. அதைக்குறித்து விசுவாசிகள் அக்கரை கொண்டதாகவும் தெரியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. நீங்கள் வசிக்கும் தெருவில் ஒரு சிங்கம் உலவுவதாக செய்தி வந்தால் என்ன செய்வீர்கள்? எவ்வளவு ஜாக்கிரதையாக இருப்பீர்கள், முடிந்தளவிற்கு அந்த சிங்கம் பிடிபடும் வரை வீட்டை விட்டுகூட வெளியே வரமாட்டோம் அல்லவா, அதைவிட மேலான ஒரு சத்துருவாகிய சாத்தான் எவனை விழுங்கலாம் என வகைதேடி சுற்றி திரிகிறான், உண்மையாகவே நாம் எச்சரிக்கையாக இருக்கிறோமா? சிந்திப்போம் விழிப்படைவோம்.

mm

Written by 

சாலமன் அவர்கள் திருப்பூர் பட்டணத்தில் Theos' Gospel Hall எனும் திருச்சபையின் நிறுவனர். அவர் அத்திருச்சபையின் நற்செய்தி பணியாளராகவும் மூப்பராகவும் ஊழியம் செய்து வருகிறார். Indian Bible College & Seminary எனும் வேதாகம கல்லூரியிலும் ஆசிரியராக பணிபுரிகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *