உங்களுக்கு ஒரு நற்ச்செய்தி

அன்புநண்பரே, உண்மையானஇறைவனுடன்அன்புறவில்நிலைத்திருப்பதைகுறித்துநினைத்ததுண்டா?

அண்ட சராசரங்களையும் படைத்த இறைவன், நம்மைப்போன்ற மனிதர்கள் மகிழ்ந்திருக்கும்படியாக இந்த உலகத்தை சிறப்பாக படைத்தார். என்றென்றும் அவரோடு அன்புறவில் நிலைத்திருக்கவேண்டும் என்கிற எண்ணத்துடன் மனுக்குலத்தையும் உருவாகினார். நம்மோடு தனிப்பட்ட விதத்திலே உறவுகொண்டாட விரும்பும் சர்வ வல்லமையுள்ள இறைவனை நேசிக்கவும், என்றும் அவரோடு அன்புறவில் வாழவுமே நாம் உருவாக்கப்பட்டோம். உங்களுடைய தாயின் கருவில் நீங்கள் உருவான நாள் முதல் அவர் உங்களையும் உங்களைப்பற்றிய அனைத்து காரியங்களையும் அறிந்திருக்கிறார். உங்கள் தலை முடிகளின் எண்ணிக்கை கூட அவருக்கு தெரியும் என வேதாகமம் கூறுகிறது. அகில உலகத்தையும் படைத்த சர்வ வல்லமையுள்ள இறைவன் ஒரு தனி மனிதரான உங்கள் வாழ்வில் இத்தனை அக்கறை உள்ளவராக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?


இறைவன் முதலாவதாக உருவாக்கின நமது முதல் பெற்றோராகிய ஆதாம் மற்றும் ஏவாள் தங்களை படைத்த, நேசித்த இறைவனை புறக்கணித்து அவருக்கு விரோதமாக பாவம் செய்தனர். அவர்களது சுபாவம் பாவ சுபாவமாக மாறியது. எனவே அவர்கள் மூலமாக இந்த உலகில் பெருகின மனுக்குலம் முழுவதுமே பாவத்தால் கறைபட்டதாக இருக்கிறது. எல்லோரும் பாவம் செய்து இறை மகிமை அற்றவர்கள் ஆனார்கள். நல்லவர் ஒருவரும் இல்லை, ஒருவராகிலும் இல்லை என வேதாகமம் குறிப்பிடுகிறது.

இந்த பாவ சுபாவம் மனிதருக்குள் இருந்து வெளிப்படுவதை நம்மால் கண்கூடாக காண முடியும். இந்த உலகம் படைக்கப்பட்டிருக்கும் விதத்தை கவனிக்கும்போது இதை படைத்த இறைவன் ஒருவர் உண்டு என்று மனிதருக்கு புரியும். ஆனாலும் அவரை தொழுதுகொள்ள விரும்பாமல், அவரால் படைக்கப்பட்ட கல், மரம் போன்றவற்றில் உருவங்களை செய்து அதுவே கடவுள் என சொல்லும் நிலையை காண்கிறோம். இறைவன் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் எது சரி எது தவறு என அவர்களுக்கு சுட்டிக்காட்டும் ஒரு மன நிலையை கொடுத்திருக்கிறார். எது சரி என்று தெரிந்திருந்தும் அதை செய்யாமல், தவறையே விரும்பி செய்யும் நிலையையும் காணமுடியும்.

உங்களுடைய வாழ்க்கை முழுவதுமே பிறருடைய தவறுகள் மற்றும் உங்களுடைய தவறுகள் உங்கள் வாழ்க்கையை பாதித்திருப்பதை உங்களால் உணர முடியும். நீங்கள் துணிகரமாக கூறின பொய்கள், மற்றவர்கள் அறியாவண்ணம் செய்த திருட்டுகள், உங்கள் நண்பர்களை ஏமாற்றின விதங்கள் என மற்றவர்களுக்குள்ளும் உங்களுக்குள்ளும் இருக்கும் இந்த பாவ சுபாவத்தை காண்பது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. எதுவாக இருப்பினும் உங்கள் வாழ்க்கையில் காணப்படும் பாவங்களுக்கு நீங்களே பொறுப்பு. நீங்கள் பாவம் செய்யும்போது அடிப்படையில் உங்களை படைத்த இறைவனுக்கு விரோதமாகவே பாவம் செய்கிறீர்கள். இந்த பாவங்கள் சரிசெய்யப்படாமல் போகுமானால் ஒரு நாள் அவரால் நியாயம் தீர்க்கப்படும் என்பதை நீங்கள் மறக்கக்கூடாது.

இறைவன் பரிபூரண சுத்தமுள்ளவராக இருக்கிறார். அசுத்தம் அவரிடத்தில் சேர்வதில்லை. எனவே உங்களுடைய பாவம் உங்களை இறைவனிடம் இருந்தும் அவருடைய அன்புறவில் இருந்தும் பிரிக்கிறது. எல்லா பாவமுமே ஒரு நாள் நியாயம் தீர்க்கப்படும் என்பதால் நீங்கள் மிகவும் ஆபத்தான ஒரு சூழலில் இருக்கிறீர்கள். என்றாலும் உங்களுக்கு ஒரு நற்செய்தி காத்திருக்கிறது. இறைவன் இப்போதே உங்கள் பாவங்களை முழுமையாக மன்னித்து அவருடைய அன்புறவில் உங்களையும் இணைத்துக்கொள்ள ஆர்வமுள்ளவராக இருக்கிறார். அவர் கொடுக்கும் மன்னிப்பு உங்களை படைத்த அந்த இறைவனுடன் நீங்கள் அன்புறவில் இணைந்துகொள்ள ஆரம்பமாக அமையும். இப்போது நீங்கள் கொண்டிருக்கும் தவறான நம்பிக்கைகள் மற்றும் வாழ்க்கைமுறையில் இருந்து விடுபட்டு புதியதோர் வாழ்க்கையைத் துவங்க விரும்புகிறீர்களா? உங்களைப் படைத்த இறைவனுடன் என்றும் அழியாத அன்புறவில் நிலைத்திருக்க விருப்பம் உண்டா?

இந்த உலகத்தை படைத்த இறைவன் இந்த உலகத்தில் மனிதனாக அவதரித்தார். இயேசு கிறிஸ்து எனும் நபரை குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகத்தில் வாழ்ந்த உண்மையான நபர் அவர். பல தீர்க்கர்கள் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் மனிதனாக அவதரிக்கப்போவதை குறித்து அவர் பிறப்பதற்க்கு முன்னமே அறிவித்தார்கள். இயேசு கிறிஸ்து மரியாள் என்னும் ஒரு கன்னிப்பெண்ணின் வயிற்றில் கருவாய் உருவாகி இந்த உலகத்தில் மனிதனாக அவதரித்தார். இயேசு கிறிஸ்து இறைவனாகவும் இருந்த படியினாலே அவர் ஒரு பாவமும் செய்யவில்லை. எனினும் பாவ மனிதர்களை மீட்பதற்காக தன்னையே ஒரு பலியாக சிலுவையிலே விட்டுக்கொடுத்தார். பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார். மனிதருடைய பாவங்களை நீக்குவதற்காக தன்னுடைய இரத்தத்தையே சிந்தி தன்னை தியாக பலியாகக் கொடுத்தார். மரணத்தால் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை. பாவத்தையும் மரணத்தையும் வென்று மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த்தார். இயேசு கிறிஸ்து ஒரு கன்னியினுடைய வயிற்றில் மனிதனாய் பிறந்ததும், மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்ததும் உங்களுக்கு ஒன்றை சொல்லவில்லையா? ஆம் அவர் மெய்யாகவே இறைவன்தான்!

அவர் சிலுவையில் மரித்ததினாலே நம்முடைய பாவத்திற்கான பரிகாரத்தை செலுத்திவிட்டார். வேதாகமம் சொல்லுகிறது, “நாம் பாவிகளாய் இருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்”. இயேசு கிறிஸ்து நமக்குப் பதிலாக நம்முடைய பாவத்திற்கான தண்டனையைத் தான் ஏற்றுக்கொண்டு சிலுவையில் பலியானார். அவர் உயிர்த்தெழுந்தார். அவர் இன்றும் உயிரோடிருக்கிறார்.

வேதாகமம் கூறுகிறது, “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.” இயேசு கிறிஸ்து பாவத்திலிருந்தும் பாவமான வாழ்க்கை முறையிலிருந்தும் உங்களைக் காப்பாற்றவேண்டும் என விரும்புகிறீர்களா? இறைவனுடன் என்றும் மாறாத அன்புறவை ஆரம்பிக்க விருப்பம் உண்டா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள் அப்போது மீட்கப்படுவீர்கள். நீங்கள் பாவி என்பதை இப்போது உணர்வீர்களானால், இயேசு கிறிஸ்துவே உண்மையான இறைவன் என்பதையும், பாவமற்ற அவர் உங்களுடைய பாவத்திற்காக சிலுவையிலே பலியானார் என்பதையும், பாவத்தையும், பாவத்தின் சாபமான மரணத்தையும் வென்று மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதையும் உங்கள் இருதயத்திலே நம்புவீர்களானால், அந்த கணமே முழுமையாக மன்னிக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டு இறைவனுடைய குடும்பத்தில் என்றும் மாறாத ஒரு இடத்தைப் பெறுவீர்கள்.

ஒருவேளை நீங்கள் பாவ மன்னிப்பையும் என்றும் மாறாத அன்புறவையும் உங்களுக்கு கொடுக்க விரும்பும் இயேசு கிறிஸ்துவை புறக்கணித்து, உங்கள் பாவ வாழ்விலேயே தொடர்ந்து வாழ தீர்மானிப்பீர்களானால், உங்கள் பாவத்திற்க்கான விளைவை நீங்களே சந்திக்க நேரிடும். இயேசு கிறிஸ்து நியாயாதிபதியாய் வீற்றிருக்கும் பிறிதொரு நாளில் உங்கள் பாவத்திற்கான பொறுப்பை உங்கள் மேலேயே சுமத்தி, அதற்கான தண்டனையையும் உங்களுக்கே கொடுப்பார். பாவத்தின் சம்பளம் மரணம். ஆம், உயிர் அளிப்பவரான இயேசு கிறிஸ்துவின் சன்னிதியிலிருந்து நீங்கள் புறக்கணிக்கப்பட்டு அவரை புறக்கணித்த நபர்களுக்கென ஆயத்தம் செய்யப்பட்டிருக்கும், என்றும் அவியாத அக்கினி என்று அழைக்கப்படும், நரகத்துக்குள் தள்ளப்படுவீர்கள். அங்கிருந்து நீங்கள் ஒருபோதும் மீண்டு உங்களை படைத்த கடவுளிடத்திற்கு வர முடியாது.

மாறாக, இயேசு கிறிஸ்து உங்களுக்கு பதிலாக உங்கள் பாவங்களை சுமந்து உங்களுக்காக சிலுவையிலே பலியானார் என்பதை நம்புவீர்களானால் அந்த நொடிப்பொழுதே உங்களுடைய அனைத்து பாவங்களையும் மன்னித்து, உங்களை தனது குடும்பத்தில் ஏற்றுக்கொண்டு, உங்களுக்கு ஒரு புதிய வாழ்வை கொடுக்க அவர் மனம் திறந்து இருக்கிறார். நீங்கள் செய்த எந்த பெரிய பாவமும் அவரால் மன்னிக்க முடியாதது அல்ல. எந்த பாவ வாழ்க்கையும் அவரால் மாற்ற முடியாதது அல்ல. அவர் அன்புள்ளவரும் அனைத்து வல்லமையையும் உடையவருமாக இருக்கிறார்.

இது வரைக்கும் நீங்கள் இந்த புத்தகத்தை வாசித்து விட்டீர்களானால் நீங்கள் உங்கள் வாழ்வின் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் தொடர்ந்து உங்கள் பாவத்திற்கே அடிமையாக இருக்க விரும்புகிறீர்களா? அல்லது உங்களுடைய பாவத்திலிருந்தும் பாவத்தின் சம்பளமான மரணத்திலிருந்தும் உங்களை விடுதலையாக்கி ஒரு பரிபூரணமான வாழ்வை உங்களுக்கு கொடுக்க விரும்பும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? இந்த இயேசு கிறிஸ்து யார் என்பதை நினைவில் கொண்டுவாருங்கள். அவர் இறைவன். உங்களுக்காக சிலுவையில் பலியாகி உயிர்த்தெழுந்து, உங்களுக்கு முழுமையான பாவ மன்னிப்பையும் சமாதானத்தையும் என்றும் அவரோடு வாழும் நிலை வாழ்வையும்  அளிக்க வல்லவர். கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் ஒவ்வொருவரும் மீட்கப்படுவர் என்று வேதாகமம் கூறுகிறது.

நீங்கள்மரிக்கும்போதுஎன்னநடக்கும்?
மரணம் ஒரு முடிவல்ல என்றும், நமது நம்பிக்கையின் அடிப்படையில் இரண்டு முக்கியமான இடங்களில் ஏதேனும் ஒன்றை நாம் அடைவோம் என வேதாகமம் கூறுகிறது.


உங்களை படைத்த இறைவன் வாழும் இடத்தில் அவரோடு என்றும் மாறாத அன்புறவில் ஆனந்தமாக வாழும் இடம் – பரலோகம்.

அல்லது…

உங்களை படைத்த இறைவனிடம் இருந்து முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட, அன்பற்ற, அழுகையும் பற்கடிப்பும் உள்ள நிம்மதியற்ற இடம் – நரகம்.

உங்கள் மரணத்திற்கு பின் நீங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது. எனவே உங்கள் நாசியில் சுவாசம் இருக்கும் இப்போதே அவரை நம்புங்கள். இன்றே மீட்பின் நாள். இயேசு கிறிஸ்துவிடம் ஒரு சிறிய பிராத்தனை மூலம் உங்கள் நம்பிக்கையை நீங்கள் வெளிப்படுத்தலாம்.

மீட்பு எனும் மேன்மையான ஆசீர்வாதத்தோடு எதையும் ஒப்பிட இயலாது. கிறிஸ்துவுக்குள் இறைவன் கிறிஸ்தவர்களை எத்தனை மேன்மையான இடத்தில் வைக்கிறார், எத்தனை மகிமையான ஆசீர்வாதங்களைக் கொடுக்கிறார் என்பதைக்குறித்த அறியாமையே இன்றைய பலருடைய பரிதாபமான நிலைக்கு காரணம். இந்த மகிமையான மீட்பைக் குறித்து நாம் எந்த அளவுக்கு தெளிவாக அறிந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு நம் வாழ்க்கை திருப்திகரமானதாகவும், நன்றி நிறைந்ததாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாறும்.

இந்த புத்தகத்தை வாசித்ததன் மூலம் நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டீர்களாயின் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் கிறிஸ்துவைப் பற்றியும், கிறிஸ்தவத்தைப் பற்றியும் மேலும் அறிய விரும்பினால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்களுக்கு தொடர்ந்து உதவ தயாராக இருக்கிறோம்.

                                                   ~முற்றும்~

<< பாடம் 8

mm

Written by 

இம்மானுவேல் ஜெஸ்வின் அவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக தேவனுடைய பணியை செய்து வருகிறார். வேதாகம கல்வியில் முது நிலை பட்டம் பெற்றிருக்கும் இவர் தற்போது திருநெல்வேலி பட்டினத்தில் தேவனுடைய கிருபையின் சத்தியத்திற்க்காக வைராக்கியம் கொள்ளும் ஒரு வேதாகம திருச்சபையை நிறுவும் விருப்பத்தோடு செயல்பட்டு வருகிறார். இவருக்கு, மனைவி வசந்தி பெனிட்டா, மற்றும் இரண்டு மகன்களும் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *