பெற்ற இரட்சிப்பை இழக்க முடியுமா?

இரட்சிப்பு-இழக்கமுடியுமா?

பெற்ற இரட்சிப்பை இழக்க முடியுமா? இரட்சிப்பை நாம் இழந்து விடுவதற்கு வாய்ப்புண்டு என்று சில கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை வேதத்தின் அடிப்படையில் சரியானதா? நாம் நம்முடைய கிரியைகளினால் இரட்சிப்பை அடைய முடியும் என்றால், நம் கிரியைகளினால் இரட்சிப்பை இழக்கவும் முடியும். மாறாக, தேவனுடைய கிருபையினால் நாம் இரட்சிக்கப்பட்டது உண்மையானால், அதே கிருபைதான் கடைசி வரை இரட்சிப்பை நாம் இழக்காமல் இருப்பதற்கும் காரணமாக இருக்கும்.

ஆக, முதலாவது நாம் தெளிவாக வேண்டியது நாம் இரட்சிப்பை நம் கிரியைகளினால் அடைந்தோமா அல்லது தேவனுடைய கிருபையினால் அடைந்தோமா என்பதில்தான். “நான் என் கிரியைகளினால் இரட்சிக்கப்பட்டேன்” என்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள் என்பது என் நம்பிக்கை.

இரட்சிப்பை நாம் இழந்து விடுவதற்கு வாய்ப்புண்டு என்று தோன்றும் விதத்தில் வேதத்தில் சில வசனங்கள் உள்ளன.  அவைகளைக் குறித்து இங்கு விரிவாக எழுத வாய்ப்பில்லை.  இருந்தாலும், அந்த வசனங்கள் எதுவும் உண்மையில் நாம் இரட்சிப்பை இழக்க முடியும் என்கிற அர்த்தத்தைக் கொடுக்கக் கூடியவை அல்ல என்பதை சுருக்கமாகச் சொல்லி விட்டு, இரட்சிப்பின் நிச்சயத்தை உறுதிப்படுத்தும் ஏராளமான மற்ற வசனங்களை அடிப்படையாக வைத்து இந்த முக்கியமான கேள்விக்கான பதிலை இங்கே கொடுக்க முயற்சிக்கிறேன்.

இதுவரை செய்த பாவங்களுக்கு உனக்கு நான் இரட்சிப்பைக் கொடுத்து விட்டேன், இனி பாவம் செய்தால் அது உன் பாடு என்று நம் கையில் அவர் விட்டால், நாம் இரட்சிப்பை நிச்சயம் இழந்து விடுவோம். ஆகையால்தான், நாம் இழக்க முடியாத இரட்சிப்பையும், நித்திய ஜீவனையும் தேவன் நமக்கு அருளியிருக்கிறார் (யோவான் 5:24, 10:28). கடந்த காலப் பாவங்கள் மட்டுமல்ல, நிகழ்காலப் பாவங்கள், எதிர்காலப் பாவங்கள் எல்லாவற்றிற்கும் நாம் மன்னிப்பைப் பெற்று விட்டோம்.

இந்த உண்மையைச் சொல்லும்போது, இதற்கு எதிராக ஒரு சிலர் வைக்கக்கூடிய வாதம் ஒன்று உண்டு. அதாவது, இரட்சிக்கப்பட்ட ஒருவர் தன் இரட்சிப்பை இழக்க மாட்டார் என்று சொன்னால், உடனே கிறிஸ்தவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு துன்மார்க்கமாக வாழ ஆரம்பித்து விடுவார்கள் என்பதுதான் அந்த வாதம். இந்த வாதம் தவறானது. ஏன் என்று பார்க்கலாம்.

இரட்சிப்பு என்பது மறுபடி பிறக்கின்ற ஒரு பிறப்பு. இந்தப் பிறப்பு தேவனால் நமக்கு அருளப்பட்ட ஒன்று. இதை மாற்ற முடியாது.

இரட்சிப்பு என்பது நாம் செய்கிற ஒரு ஜெபத்தின் மூலமோ, அல்லது அறிவு பூர்வமாக நாம் எடுக்கின்ற ஒரு முடிவின் மூலமோ நடப்பது அல்ல. அது மறுபடி பிறக்கின்ற ஒரு பிறப்பு என்று யோவான் 3-ல் இயேசு விளக்குகிறார். இந்தப் பிறப்பு தேவனால் நமக்கு அருளப்பட்ட ஒன்று. இதை மாற்ற முடியாது. அப்பொழுது, அவர் மேல் நாம் வைக்கின்ற விசுவாசத்தின் மூலமாக, நம்முடைய எல்லா பாவங்களும் மன்னிக்கப்படுகின்றது (அப். 10:43, அப். 13:32-33). பாவம் மன்னிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மறுபடி பிறந்த அந்த அனுபவத்தின் விளைவாக நாம் பரிசுத்தமாக்கப்படுகின்றோம் (2 கொரிந்தியர் 5:17).

ஆக, இரட்சிப்பின் முதல் அம்சம் நம் பாவங்கள் மன்னிக்கப்படுதல் (மறுபடி பிறத்தல்). இரண்டாவது அம்சம்
பரிசுத்தமாகுதல். இரட்சிப்பை இழக்க மாட்டோம் என்று தெரிந்தவுடன் கிறிஸ்தவர்கள் தங்கள் இஷ்டத்திற்குப் பாவம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் என்று நினைப்பது தவறு. மறுபடி பிறந்ததற்குப் பின்னும் நம் பழைய சரீரத்தில் இருக்கின்ற இச்சைகளின் காரணமாக நாம் பாவம் செய்ய உந்தப்படுகின்றோம், இன்னும் பல பாவங்களை விடாமல் இருக்கிறோம் என்பது உண்மை (ரோமர் 7).

ஆனால் மறுபடி பிறக்கும்போது தேவன் நமக்கு பாவத்தை விரும்பாத, நீதியை விரும்புகின்ற ஒரு தன்மையைக் கொடுத்திருக்கிறார் (1 யோவான் 2:29, 1 யோவான் 3:9, 1 யோவான் 5:18). இந்தத் தன்மை உங்களுக்கு இரட்சிக்கப்பட்டபோது கிடைத்ததா? இல்லை என்று உங்களால் சொல்ல முடியாது. அப்படி இருக்கும்போது, தான் எப்படி வாழ்ந்தாலும் தனக்கு பரலோகம் உண்டு என்று தெரிந்ததும், “ஆகா, இனி நான் பாவம் செய்யலாம்” என்று ஒரு மனிதன் நினைத்தான் என்றால், அவன் இன்னும் இரட்சிக்கப்படவில்லை என்றுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, இரட்சிப்பைப் பெற்ற அவன் குணம் மாறிவிட்டான் என்று சொல்ல முடியாது.

பன்றியை தேவன் சிங்கக்குட்டியாக மாற்றிவிட்டார். ஆனால் உடல் இன்னும் பழைய பன்றியினுடையதாக இருப்பதால் அது சாக்கடையை நோக்கி இழுக்கும், ஆனால் உள்ளுக்குள் வாழ்கின்ற சிங்கக்குட்டிக்கு அங்கே போக விருப்பம் இருக்காது, அதனுடைய தன்மை வேறு. பன்றிக்கும், சிங்கத்துக்கும் நடக்கின்ற போராட்டம்தான்
இரட்சிக்கப்பட்ட வாழ்க்கை (மத்தேயு 26:41, ரோமர் 7). இதில் சிங்கக்குட்டி சில சமயங்களில் தோற்று சாக்கடைக்குள் விழுந்து விடும். அதைத் திரும்பவும் தேவன் வெளியில் கொண்டு வந்து கழுவி விடுவார் (1 யோவான் 1:9). சாக்கடையில் தவறி விழுந்தாலும், சிங்கம் சிங்கம்தான், அது ஒருநாளும் பன்றியாக மாறாது. இயேசு ஸ்வாமி திரும்பி வரும் நாளில் பன்றியின் உடலை அழித்து, சிங்கக்குட்டிகளாகிய நமக்கு சிங்கத்தின் உடலைக் கொடுப்பார். அதற்குப் பெயர்தான் மகிமையடைதல். அதற்குப் பின் சாக்கடைக்கு போக வாய்ப்பே இருக்காது.

பாவ மன்னிப்பைப் பெற்ற ஒரு மனிதன், அதற்குப் பிறகு செய்யும் பாவங்களின் காரணமாக திரும்பவும் நரக தண்டனைக்கு உட்படுவான் என்றால் முதலில் அவன் மன்னிக்கப்பட்டதில் ஒரு பயனும் இல்லை. இயேசுவை விசுவாசித்து தேவனுடைய பிள்ளையானாதற்குப் பிறகும் நாம் பாவம் செய்கின்றோமே (1 யோவான் 1:8), பிறகு எப்படி நரகத்திலிருந்து தப்பித்து பரலோகம் போவது? இரட்சிப்பை இழப்போம் என்று நம்புகிறவர்களில் சிலர் இந்தக் கேள்விக்கு இப்படி பதில் சொல்கின்றனர். அதாவது, நாம் ஏற்கனவே இரட்சிக்கப்பட்டு விட்டோம் என்று சொல்ல முடியாது, இரட்சிப்பு என்பது ஒருமுறை நடக்கின்ற சம்பவம் அல்ல, அது ஒரு தொடர் நிகழ்வு, அது ஒரு ஓட்டப்பந்தயம், இதில் எப்பொழுது வேண்டுமானாலும் பின்தங்கி விடுவதற்கோ, பின்னோக்கிப் போய்விடுவதற்கோ வாய்ப்புண்டு என்பது இவர்களின் கருத்து. நான் மேலே விளக்கியபடி, இரட்சிப்பின் ஒரு அம்சமாகிய “பரிசுத்தமாகுதல்” என்பது ஒரு தொடர் நிகழ்வு என்பது உண்மை. அதில் நாம் இதுவரை முழுமடையவில்லை, இந்த சரீரத்தில் இருக்கும் வரை முழுமையடையப் போவதும் இல்லை.

ஆனால், இரட்சிப்பின் முதல் அம்சமாகிய தண்டனையிலிருந்து விடுதலையாகின்ற அந்த அனுபவம் ஒரு தொடர் நிகழ்வு அல்ல. அது தொடர் நிகழ்வு என்றால் அது எப்பொழுது நிறைவடையும்? நான் இன்று வரை நரக தண்டனையிலிருந்து முழுமையாக இரட்சிக்கப்படாமல் வாழ்கின்றேன் என்றால், இன்று நான் இறந்து போனால் பரலோகம் போக முடியாதே? அப்படியானால், கிறிஸ்துவின் சிலுவையைப் பற்றிய செய்தியை எப்படி நற்செய்தி என்று சொல்வது. இயேசுவை நாம் விசுவாசித்தபோது பாவத்தின் தண்டனையிலிருந்து அவர் நம்மை விடுவித்து விட்டார். அது நடந்து முடிந்த கதை. இனி நமக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை (யோவான் 3:18). ஆகையால், ஒருமுறை இரட்சிக்கப்பட்டவர்கள் அந்த இரட்சிப்பை இழக்க வாய்ப்பு இல்லை என்பதை நிச்சயமாக நம்புங்கள்.

 நாம் இரட்சிக்கப்பட்டது தேவனுடைய கிருபை, இன்று பரிசுத்தமடைவது தேவனுடைய கிருபை

நம் கிரியைகள் அல்ல தேவனுடைய கிருபையே நம்மை பரலோகம் கொண்டு போகும்.

நாம் இரட்சிக்கப்பட்டதும் தேவனுடைய கிருபை, இன்று பரிசுத்தமடைவதும் தேவனுடைய கிருபை (பிலிப்பியர் 1:5, எபேசியர் 2:10), பெற்ற இரட்சிப்பை நாம் இழக்காமல் பரலோகம் போகப்போவதும் தேவனுடைய கிருபை (யோவான் 6:39). திகைக்க வைக்கும் இந்தக் கிருபையை உணரும்போது, பரிசுத்தமாகுதல் நமக்கு இனிய அனுபவமாக இருக்கும். இல்லையென்றால், பழைய ஏற்பாட்டு பரிசேயர்களைப் போல கடமைக்குக் கட்டளைகளை கடைப்பிடித்து, ஒரு பக்கத்தில் பயத்துடனும், இன்னொரு பக்கத்தில் சுயநீதியின் கர்வத்துடன் வாழ வேண்டியிருக்கும்.

கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;  ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.

எபேசியர் 2: 8-10.

 

mm

Written by 

லெனின் அவர்கள் இந்துப் பின்ணணியிலிருந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர். சொந்த ஊர் மதுரை என்றாலும் தற்போது பணி நிமித்தமாக மனைவி மற்றும் மகனோடு ரியாத்தில் வசிக்கிறார். தேவனுடைய கிருபையினால் ரியாத்தில் உள்ள சில திருச்சபைகளில் சில பொறுப்புகள் வகிப்பதுடன் வேதத்தை போதிக்கவும் செய்கிறார்.

2 thoughts on “பெற்ற இரட்சிப்பை இழக்க முடியுமா?

  1. ஒரு மனிதன் எப்படி எதைக்கொண்டு இரட்சிக்கப்பட முடியும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *