ஆரோக்யமா அறுசுவையா எது முக்கியம்?

ஆரோக்யமா அறுசுவையா

ஆரோக்கியமான உணவு சுவையாகத்தான் இருக்கவேண்டும் என்பது அவசியம் இல்லை, ஆனால் சுவையான உணவுகளில் பெரும்பாலும் ஆரோக்கியம் இல்லாமல் இருப்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் மக்கள் சுகத்தைவிட சுவையையே பெரிதும் விரும்புகிறார்கள் என்பதை நம் ஊரில் பெருகிவரும் பாஸ்ட் புட் கலாச்சாரத்தை பார்த்தாலே புரிந்துவிடும். இது ஒருபுறம் இருக்க, ஆவிக்குரிய வாழ்க்கையிலும் ஆரோக்கிய உபதேசம், அறுசுவை உபதேசம், என இருவகை உபதேசங்கள் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? இதற்கு ஆதாரமாக ஒரு வசனத்தைப் பார்க்கலாம்.

அப்போஸ்தலர் 20:20 பிரயோஜனமானவைகைளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்கு பிரசங்கித்து உபதேசம்பண்ணினேன்.

உபதேசங்களில் சில நமக்கு பிரயோஜனத்தைத் தருபவைகள், சில தெரிந்து, அறிந்துவைத்துக்கொள்ளமட்டும் உதவக்கூடியவைகள்(INFORMATIVE). பிரயோஜனமானவைகள் ஒன்றையும் பவுல் மறைத்துவைக்கவில்லை, ஒருவேளை தெரிந்துகொள்ளவேண்டி மட்டும் உதவும் சில பாடங்களை பவுல், அந்த சபைக்கு சொல்லாமல் கூட விட்டிருக்கலாம், ஏனெனில் அவைகளால் பிரயோஜனம் மிகக்குறைவே!.

இன்றைக்கும் இந்த பிரச்சனை சபைகளில் நிலவுவதைப் பார்க்கமுடியும், எது பிரயோஜனத்தைக்கொடுக்குமோ அந்த சத்தியங்களை விட்டுவிட்டு பல நேரங்களில் மூளை அறிவை மட்டும் பெருக்கக்கூடிய பல காரியங்களுக்கு அதிக நேரங்கள் சபைகளில் செலவிடப்படுகிறது. உதாரணத்திற்கு எபேசியர் நிரூபத்தை தியானிக்க ஆரம்பித்தால், அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகளை தியானிக்க குறைந்த நேரம் ஒதுக்கிவிட்டு, அந்த புத்தகம் எப்போது எழுதப்பட்டது, எந்த ஆட்சியில் எழுதப்பட்டது, எந்த இடத்தில் எழுதப்பட்டது, என்பதைப் பற்றி மட்டுமே அதிக நேரம் எடுத்து சிலர் தியானிப்பது, சாதத்தை விட்டு விட்டு ஊறுகாயையே சாதமாக சாப்பிடுவது போல இருக்கிறது. இவைகள் தேவைதான் ஆனால் அளவோடு தியானிக்கவேண்டியவைகள் அளவுகடந்து போய்விடுகின்றன.

அதே போல சபை உபத்திரகாலத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படும் எனபதை விசுவாசிக்கும் சபைகள் கூட, எப்போது கன்வென்ஷன் கூட்டம், சிறப்புக்கூட்டம் நடத்தினாலும் அந்த வெளிப்படுத்தல் புத்தகத்தில் வரும் 666 ஐயும், அந்திகிறிஸ்துவையும், கிரெடிட் கார்டையும், சிப்பையும் பற்றியே பேசி மக்களை வியப்பில் ஆழ்த்தும் போதனையை மட்டுமே போதிக்கின்றன. இவைகள் தேவைதான் ஆனால் இவைகள் மட்டும் தான் மிக அத்தியாவசியமான போதனைகளாவிட்டன, வேத ஆராய்ச்சி என்றாலே வெளிப்படுத்தல் புத்தகம் என்றாகிப்போய்விட்டன. அப்போதுதானே மக்களை வியப்பில் ஆழ்த்தமுடியும், சபைக்கு தேவையான, அன்றாட வாழ்க்கைக்கு தேவையான சத்தியங்களை போதிக்கும் சபைகள் குறைந்துவருகிறதும், விசுவாசிகளும் புதிய நூதன, தெரிந்துகொண்டிருக்க வேண்டியவைகளையே, பிராதானமான சத்தியமாக விரும்புவதும் வேதனைக்குறியது, இந்த நிலைமையும் ஒருவகை வஞ்சகமே!

ஒருவர் 666 ஐப் பற்றி ஒன்றுமே அறியாமல் இருந்தாலும், ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை, ஆனால் பிரயோஜனமானவைகளை அறியாவிட்டால் என்ன பயன்?

ஆரோக்கியத்திற்கும் அருசுவைக்கும் உள்ள வித்தியாசம் உணரவேண்டும். ஒருவர் 666 ஐப் பற்றி ஒன்றுமே அறியாமல் இருந்தாலும், ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை, ஆனால் பிரயோஜனமானவைகளை அறியாவிட்டால் என்ன பயன்? வேதாகமத்தில் கற்றுக்கொள்ளவேண்டியவைகள், தெரிந்துகொள்ளவேண்டியவைகள் ஏராளம் இருக்கிறது அவைகளில் எதை முதலிடத்தில் வைக்கவேண்டும், எதற்கு இரண்டாம் இடம் கொடுக்கவேண்டும் என்ற ஞானம் நமக்கு வேண்டும்.

வேதாகம் கூறுவதை பாருங்கள்…

II தீமோத்தேயு 3:17 வேதவாக்கியங்கள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் ”பிரயோஜன” முள்ளவைகளாயிருக்கிறது ..

மேற்கண்ட இந்த காரணத்திற்காக வேததியானக்கூட்டம் நடப்பது இன்று குறைந்துபோனது

தீத்து 3:9 புத்தியீனமான தர்க்கங்களையும் வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்.

II தீமோத்தேயு 2:14 இவைகளை அவர்களுக்கு நினைப்பூட்டி, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல், கேட்கிறவர்களைக் கவிழ்த்துப்போடுகிறதற்கேதுவான வாக்குவாதம் செய்யாதபடிக்கு, கர்த்தருக்கு முன்பாக அவர்களுக்கு எச்சரித்துப் புத்திசொல்லு.

இந்த உலகம் கொஞ்சகாலமே நமக்கு சொந்தம் ஆகையால் பிரயோஜனமானவைகளையும் ஆரோக்கிய உபதேசத்தையும் கற்றுக்கொள்ள அதிகம் பிரயாசப்படுவோம், அதனால் மற்ற காரியங்களை தவிற்போம் என்று அர்த்தமல்ல, எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமோ அதற்கு முக்கியத்துவத்தையும், குறைவாக முக்கியத்துவம் கொடுக்கவேண்டியவகளுக்கு எப்படி நேரம் ஒதுக்கவேண்டுமோ அதையும் செய்து காலத்தை பிரயோஜனப்படுத்துவோம்.

எபேசியர் 5:16 நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.

mm

Author: Solomon

சாலமன் அவர்கள் திருப்பூர் பட்டணத்தில் Theos’ Gospel Hall எனும் திருச்சபையின் நிறுவனர். அவர் அத்திருச்சபையின் நற்செய்தி பணியாளராகவும் மூப்பராகவும் ஊழியம் செய்து வருகிறார். Indian Bible College & Seminary எனும் வேதாகம கல்லூரியிலும் ஆசிரியராக பணிபுரிகிறார்.

mm

Written by 

சாலமன் அவர்கள் திருப்பூர் பட்டணத்தில் Theos' Gospel Hall எனும் திருச்சபையின் நிறுவனர். அவர் அத்திருச்சபையின் நற்செய்தி பணியாளராகவும் மூப்பராகவும் ஊழியம் செய்து வருகிறார். Indian Bible College & Seminary எனும் வேதாகம கல்லூரியிலும் ஆசிரியராக பணிபுரிகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *