தேவை ஆதாரம் அல்ல, தேவனோடு அனுபவம்

எழுதியவர்: போதகர். பால் ராஜ்

யோவான் 21:1-22

இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நம்ப மறுப்பவர்களை நாம் இரண்டாக பிரிக்கலாம். முதலாவது கூட்டம் ஆதாரம் தேடும் கூட்டம். இரண்டாவது கூட்டம் விசுவாசிக்க தேவையான தேவனுடனான தனிப்பட்ட அனுபவத்தை தேடும் கூட்டம். முதலாவது கூட்டத்தை எதிர்க்கொள்ள நமக்கு போதுமான இறையியல் விளக்கம், வேதாகம மற்றும் வரலாற்று சான்றுகள் உள்ளன. இயேசு கிறிஸ்துவுடனான தனிப்பட்ட சந்திப்பு மட்டுமே இரண்டாவது கூட்டத்திற்கு உயிர்த்தெழுதலின் நம்பிக்கையை தரமுடியும். பயத்திலும், நம்பிக்கையற்ற சூழலிலுமிருந்த தனது சீடர்களின் பயத்தையும், அவநம்பிக்கையையும் அகற்றி தன்னோடுள்ள அவர்களின் தனிப்பட்ட அனுபவத்தின் மூலம் அவர்களுக்கு எவ்விதம் தனது உயர்த்தெழுதல் மீதான நமிக்கையை ஊட்டினார் என்பதை தியானத்திற்கு ஆதாரமாக எடுத்துக்கொண்ட வேதப்பகுதியிலிருந்து நாம் கற்றுக்கொள்வோம்.

I. அவரின் சந்திப்பு (யோவான் 21: 1-4)

சீஷர்கள் முதலாவது இயேசுவின் உயிர்த்தெழுதலை நம்பவில்லை ஆனால் உயிர்த்தெழுந்த ஆண்டவருடனான சந்திப்பு அவர்களின் பயத்தையும் அவநம்பிக்கையையும் புறம்பே தள்ளிற்று. உயிர்த்தெழுந்த ஆண்டவர் பயத்திலும் அவிசுவாசத்திலுமிருந்த தனது சீடர்கள் அவரின் உயிர்த்தெழுதலை விசுவாசித்து, விசுவாசத்தில் பெலப்படும் மட்டும் மீண்டும் மீண்டும் அவர்களை தேடிவந்தார் (யோவான் 20:19-20; யோவான் 20: 26; யோவான் 21: 1-4). இயேசுவின் உயிர்த்தெழுதலை நம்பவைக்க வரலாற்று, இறையியல் மற்றும் தர்க்கரீதியிலான ஆதாரங்கள் ஆயிரம் இருந்தாலும் இயேசு கிறிஸ்துவுடனான தனிப்பட்ட சந்திப்பும் நல்லுறவுமே அவர்மீதுள்ள நமது விசுவாசத்தை ஊன்றக்கட்டும். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவு கூறுகிற நாம் அவருடனான நல்லுறவில் நிலைத்திருக்கின்றோமா? தனிப்பட்டமுறையில் அவர் நம்முடன் அவரது வசனத்தின் மூலம் உரையாட மற்றும் உறவாட அனுமதிக்கின்றோமா?

இயேசுவின் உயிர்த்தெழுதலை நம்பவைக்க வரலாற்று, இறையியல் மற்றும் தர்க்கரீதியிலான ஆதாரங்கள் ஆயிரம் இருந்தாலும் இயேசு கிறிஸ்துவுடனான தனிப்பட்ட சந்திப்பும் நல்லுறவுமே அவர்மீதுள்ள நமது விசுவாசத்தை ஊன்றக்கட்டும்

II. தேவைகளை சந்தித்தார் (யோவான் 21: 5-11)

இராமுழுவதும் முயற்சித்தும் சீடர்களுக்கு மீன் பிடிபடவில்லை. இயேசுவின் வார்த்தைகளுக்கு கீழ்படிந்தவுடன் போதுமான மீன் கிடைத்ததுமல்லாமல் அவர்கள் பசியாற மீன் ஆயத்தமாக இருந்தது. நமது சுயப்பெலன், சுயநீதீ, சுய அறிவை சார்ந்து நில்லாமல், உயிர்த்தெழுந்த ஆண்டவரின் வார்த்தைகளை நம்பி வாழ்வோமெனில் நமது தேவைகளையும் சந்திக்க தேவன் வல்லவராக இருக்கிறார் (பிலிப்பியர் 4:19; மத்தேயு 6:25-33; 2 பேதுரு 1:3).

III. அவரின் சமூகம் (யோவான் 21: 12-14)

உயிர்த்தெழுந்த ஆண்டவர் உடனடியாக பரலோகம் செல்லவில்லை மாறாக அநேகருக்கு தரிசனமானார் மற்றும் தமது சீடர்களோடிருந்தார். அவரின் சமூகம் அவர்களின் விசுவாசத்தை ஊன்றக்கட்டினது. இன்றும் அவரின் உயிர்த்தெழுதலை நம்பும் மற்றும் அவரின் உயிர்த்தெழுதலை பறைசாற்றும் யாவருக்கும்“உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களோடிருக்கிறேன் (மத்தேயு 28:20; எபிரெயர் 13:5) என்கிற அவரின் இடைவிடாத பிரசன்னம் மற்றும் மாறாத சமூகத்தையே பிரதான வாக்குத்தத்தமாக கொடுத்துள்ளார். உயிர்த்தெழுந்த அவரின் பிரசன்னம் மற்றும் மாறாத அவரின் சமூகத்தை நமது அனுதின வாழ்வில் நாம் உணருகின்றோமா?

IV. அவரின் சீர்ப்பொருந்தப்பண்ணுதல் (யோவான் 21: 15-17)

உயிர்த்தெழுந்த ஆண்டவர் தன்னை மறுதலித்த பேதுரு மற்றும் அவரை விட்டு விட்டு ஓடிப்போன சீடர்களின் குறைகளை சுட்டிக்காட்டவில்லை. மாறாக, அவர்களை தன்னோடு சீர்பொருந்தப்பண்ணினார். அவர்களை தண்டிக்கவில்லை மாறாக, அவர்களை மன்னித்து தமது சுவிசேடத்தை அறிவிக்கும் சீடர்களாக மாற்றினார். நமது பாவங்களை அறிக்கை செய்து அவருடன் சீர்ப்பொருந்தினால் மட்டுமே உயிர்த்தெழுந்தவரின் மகிமையை நம்மால் உணரமுடியும் (1யோவான்1:9) .

V. அவரின் சத்துவம் (யோவான் 21: 15-22)

உயிர்த்தெழுந்த ஆண்டவரின் மீதான முழு அன்பும், அவரின் பெலன் மற்றும் அவரின் உயிர்த்தெழுதல் மீதான விசுவாசத்தினால் மட்டுமே அவரின் மந்தையை மேய்க்க முடியுமென்பதை விசுவாசத்தில் பெலவீனமான பேதுருவும் மற்ற சீடர்களும் உணரும் வரை ஆண்டவர் அவர்களோடு இடைப்பட்டார். நமது அறிவால் அறியமுடியாததை தேவப்பெலனால் மட்டுமே அறிய முடியும்.

மெய்யாகவே, நமது ஆண்டவர் உயிர்த்தெழுந்தார். காரணம், உயிரோடிருக்கும் தேவனால் மட்டுமே விசுவாத்தில் பெலவீனமாயிருக்கும் அவரின் பிள்ளைகளை தேடி வரமுடியும், தேவைகளை சந்திக்க முடியும், இடைவிடாமல் சகலநாட்களிலும் அவர்களோடிருக்க முடியும், சீர்பொருந்தப்பண்ண முடியும், சத்துவத்தை தர முடியும்.

mm

Written by 

பால் ராஜ் அவர்கள் பெங்களூரு பட்டினத்தில் உள்ள குடிசைவாழ் மக்கள் மத்தியில் பிரதரன் திருச்சபையோடு இணைந்து ஊழியம் செய்து வருகிறார். சபை சரித்திரத்தை முதன்மை பாடமாக கொண்டு, முது நிலை இறையியல் பயின்றவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *